Last Updated : 12 Mar, 2014 09:34 PM

 

Published : 12 Mar 2014 09:34 PM
Last Updated : 12 Mar 2014 09:34 PM

விருதுநகர்: நசிந்துவரும் கரிமூட்டம் தொழில்: ஆயிரக்கணக்கானோர் வேலை, வருவாய் இழந்து தவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் நசிந்துவரும் கரிமூட்டம் தொழிலால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.

மளிகைப் பொருள்கள் வர்த்தகம் மட்டுமின்றி எண்ணெய் உற்பத்தி, மிளகாய் வத்தல் உற்பத்தியில் சிறந்து விளங்கிவரும் விருதுநகர் மாவட்டம் கரிமூட்டத் தொழிலிலும் சிறந்து விளங்கி வந்தது. வறட்சி மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்தில் சரியான மழைப்பொழிவு இல்லாததாலும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்காகவும் தரிசாகக் கிடக்கும் நிலங்களில் கருவேலமர விதைகள் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தூவப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் கருவேல மரங்கள் காடுபோல் வளர்ந்திருப்பதைக் காண முடியும். சொந்த நிலமின்றியும், நிலம் வைத்திருப்போரும் விவசாயம் செய்ய முடியாத பருவநிலை காரணமாக காட்டுப் பகுதிகளிலும் சாலையோரங்களிலும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் கருவேல மரங்களை வெட்டி, அதை கரிமூட்டம் போட்டு விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கினர்.

தரம்வாரியாகப் பிரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி, சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிளில் கரிமூட்டத் தொழில் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வந்தது. வெட்டப்பட்ட கருவேல மரங்களை அளவு மற்றும் தரம் வாரியாக பிரித்தெடுத்து அவற்றைச் சீராக அடுக்கிவைத்து அதை களிமண்ணால் மூடி தீவைத்து மூட்டம் போடுவர். சுமார் 4 நாள்கள் முதல் ஒரு வாரம் வரை இவ்வாறு மூட்டம் போடப்படும். பின்னர், அதில் தண்ணீர் ஊற்றி அணைத்து மெல்லப் பிரித்தெடுக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

5 வகையாகப் பிரிப்பு

அவ்வாறு மூட்டம் போட்டு பிரித்தெடுக்கப்படும் கரிகள் தூள்கரி, தூர்கரி, உருட்டுக்கரி, குச்சிக்கரி, மண் கரி என 5 வகையாகப் பிரிக்கப்படுகின்றன. இதில், தூள்கரி மற்றும் மண்கரி போன்றவை ஊதுபத்தி, கொசுவர்த்திச் சுருள் போன்றவை தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளாகவும், உருட்டுகரி, குச்சிகரி போன்றவை தனியார் மின்உற்பத்தி நிலையங்களிலும், ஹோட்டல்களிலும், தூர்கரி இரும்பு உருக்கும் ஆலைகள், ஹோட்டல்கள், பட்டறைகள் போன்றவற்றுக்காக ஓசூர், பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களும், சிறிய அளவிலான கரித்துண்டுகள் ஹோட்டல்கள், வண்டிப் பட்டறைகள் போன்றவற்றுக்கும், கரித்தூள்கள் சிமெண்ட் ஆலைகளுக்கும் அனுப்பிவைக்கப்படும்.

வேலையிழக்கும் சூழ்நிலை

சிமெண்ட் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருள்களில் ஒன்று கரித்தூள் என்பதால் இதற்கு எப்போதும் தேவை உண்டு. ஆனால், அண்மைக்காலமாக கரித்துண்டுகள் மற்றும் கரித்தூளுக்கான தேவைகள் பெருமளவில் குறைந்துள்ளதால் கரிமூட்டத் தொழிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு இந்தத் தொழிலை மேற்கொண்டுவரும் ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இதுகுறித்து, திருச்சுழி அருகேயுள்ள பனையூரைச் சேர்ந்த கரிமூட்டத் தொழிலாளி ஏ.ராமு கூறியதாவது:

நகரத்தில் இருந்தாலும், கிராமப்புறத்தில் இருந்தாலும் அனைத்து ஹோட்டல்களிலும் கரித்துண்டுகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், நாகரிக வளர்ச்சியால் தற்போது கேஸ் அடுப்புகளையும், சோலார் அடுப்புகளையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால் கரித்துண்டுகளுக்கான தேவை குறைந்துவிட்டது. சிறிய ஹோட்டலிலும் இன்று கரித்துண்டுகள் பயன்படுத்தப்படுவது குறைந்து வருகிறது.

கருவேல மரங்களை வெட்டிவந்து கொடுக்கும் தொழிலாளிக்கு கொடுக்க வேண்டிய கூலி, கரிமூட்டம் போடத் தேவையான பரந்த இடம், வண்டிக்கணக்கில் விலைக்கு வாங்க வேண்டியுள்ளள செம்மண், மூட்டத்தை ஆற்ற டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டுவருவது போன்ற சிரமங்களாலும், இவை அனைத்தையும் செய்தாலும் கரித்துண்டுகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதாலும் இத்தொழில் நலிந்து வருகிறது.

சாதாரணமாக 50 கிலோ கரி மூட்டை ரூ.350 முதல் ரூ.650 வரை தரம் வாரியாக விற்பனை செய்யப்படும். ஆனால், கரித்துண்டுகளைப் பயன்படுத்துவதற்கான தேவை குறைந்துவிட்டதாலும், தொழிலில் உள்ள சிரமங்கள் காரணமாகவும் பெருமளவில் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், இத்தொழிலில் தொடர்ந்து முதலாளிகள் பலர் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட மறுப்பதாலும் வருங்காலங்களில் இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x