Published : 31 Jan 2014 05:19 PM
Last Updated : 31 Jan 2014 05:19 PM

திண்டுக்கல்: இடமாறுதல் ரேஷன் கார்டுக்கு மிக்சி, கிரைண்டர் கிடையாது; அதிகாரிகள் கைவிரிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தில், 2011-ம் ஆண்டு ஜூலைக்குப்பின் இடமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் கார்டுகள், புதிய ரேஷன் கார்டுகளுக்கு மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி கிடையாது என அதிகாரிகள் கைவிரித்துள்ளதால், பணியிடமாற்றம் காரணமாக வெளிமாவட்டம், நகரங்களில் இருந்து வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 80,299 ரேஷன் கார்டுகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலக்கு நிர்ணயம்

முதற்கட்டமாக 2012-ம் ஆண்டு 79 ஆயிரம் பயனாளிகளுக்கும், 2013-ம் ஆண்டு 1 லட்சத்து 11 ஆயிரம் பயனாளிகளுக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1 லட்சத்து 9 ஆயரித்து 636 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தற்போது வரை வெறும் 46 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது.

மிக்சி, கிரைண்டர்கள், கோவை மாவட்டத்தில் இருந்து ஆர்டர் கொடுத்துப் பெறுவதால் உடனுக்குடன் வந்துவிடும். இதனால் தற்போது ஒரு லட்சத்து 250 மிக்சி, கிரைண்டர்கள் பயனாளிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. ஆனால், மின்விசிறிகள் குஜராத் கம்பெனிகளில் இருந்து ஆர்டர் கொடுத்து பெறுவதால் உடனுக்குடன் மின்விசிறிகள் வருவதில்லை. அதனால், மக்களவைத் தேர்தலுக்கு முன் வரும் மார்ச்சுக்குள் நிர்ணயிக்கப்பட்ட பயனாளிகளுக்கு மிக்சி, கிரைண்டர் மற்றும் விசிறிகள் வழங்கப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குடும்பம், பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக 2011-ம் ஆண்டுக்குப்பின் வெளிமாவட்டம், நகரங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்த அரசு ஊழியர்கள், தனியார் கம்பெனி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடைய ரேஷன் கார்டுகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி கிடையாது என அதிகாரிகள் கைரிவித்துள்ளனர். அதனால், இடம்பெயர்ந்த பொதுமக்கள், தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து விலையில்லா பொருள்கள் திட்ட பொறுப்பு அதிகாரி ஒருவர் கூறியது:

எந்த அரசு திட்டங்களையும் செயல்படுத்த காலமுறை வரையறை செய்யப்படுகிறது. அதன்படி, இலவச விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி திட்டத்தில் 2011-ம் ஆண்டு ஜூன் 31-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

ஜூலை 1-ம் தேதி புதிய ரேஷன் கார்டு, இடமாற்றம் பெற்றுவந்த ரேஷன் கார்டுக்குக்கூட விலையில்லா மிக்சி கிரைண்டர் வழங்க முடியாது. அரசு மறுஉத்தரவு வந்தால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க வாய்ப்புள்ளது. அரசு உத்தரவில்லாமல் நாங்களாக எதுவும் வழங்க முடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x