Published : 30 Dec 2013 12:24 PM
Last Updated : 30 Dec 2013 12:24 PM

ஒபாமா அரசில் இந்த ஆண்டு அதிக இந்தியர்கள் நியமனம்

2013ம் ஆண்டில், இதுவரை இல்லாத அளவு அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க வாழ் இந்தியர்கள், வெள்ளை மாளிகையில் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்களை மிகவும் நேசிக்கும் அதிபர் ஒபாமா, இந்தியர்களுக்கு இயற்கையாகவே இருக்கும் திறமையை அங்கீகரிக்கும் வகையில், இவ்வாறு நியமித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

முதல் முறையாக 12க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அதிபர் மாளிகையில் இந்த ஆண்டு மிக முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இப் பொறுப்புகள் பெரும்பாலும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இதுவரை வகிக்காதவையாகும். ஒபாமா நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. என்றாலும், இவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டும் என்று கூறப்படுகிறது. இது இதுவரை இல்லாத அளவாகும்.

ஒபாமா நிர்வாகத்தில் மிக முக்கியப் பொறுப்புகளில் 5 இந்தியர்கள் நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. யு.எஸ்.எய்டு நிர்வாகியாக பணியாற்றி வரும் ராஜீவ் ஷா, அமெரிக்க அரசில் மிக உயர்ந்த பொறுப்பு வகிக்கும் இந்தியர் ஆவார். தெற்கு ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவு துணை அமைச்சராக நிஷா பிஸ்வால் நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டில் மிக முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்ட இந்தியர் இவர்.

அஜிதா ராஜி, இஸ்லாம் சிடிக்கி, வினய் தும்மலபள்ளி ஆகியோர் அமெரிக்க செனட் சபையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிற நிர்வாக அதிகாரிகள் ஆவர். இதுபோல் அமெரிக்க சர்ஜன் ஜெனரல் பதவிக்கு அதிபரின் பரிந்துரைக்கு செனட் சபை ஒப்புதல் அளித்தால், அந்தப் பொறுப்பு வகிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை விவேக் மூர்த்தி பெறுவார். இதுபோல் அருண்குமார், புனீத் தல்வார் என்ற இரு அமெரிக்க வாழ் இந்தியர்களும் மிக முக்கியப் பொறுப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இது புனீத் தல்வார் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் முக்கியப் பங்காற்றியவர்.

இவரை அரசியல் மற்றும் ராணுவ விவகாரங்களுக்கான, வெளியுறவு துணை அமைச்சர் பதவிக்கு ஒபாமா பரிந்துரைத்துள்ளார். இப்பரிந்துரை செனட் சபையால் ஏற்கப்படுமானால், அமெரிக்க வெளியுறவுத் துறையில் முதல் முறையாக 2 இந்தியர்கள் பணியாற்றிய பெருமை கிடைக்கும். ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங்கை, வெள்ளை மாளிகையில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி ஒபாமா சந்தித்து பேசினார். அப்போது தனது நிர்வாகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் பணிகளை ஒபாமா பாராட்டினார்.

“அமெரிக்காவின் வளர்ச்சிக்கு தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். இப்போது அமெரிக்க அழகியாகவும் இந்திய வம்சாவளியினர் வெற்றிவாகை சூடுகின்றனர். நமது இரு நாடுகளின் நெருங்கிய நட்புறவுக்கு இதுவே உதாரணம் என்று நான் நினைக்கிறேன்” என்றார் ஒபாமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x