Published : 11 Dec 2013 00:00 am

Updated : 06 Jun 2017 16:02 pm

 

Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 04:02 PM

திருச்சி: வாசிப்பதை சுவாசிக்கும் சீனிவாசன்

திருச்சி தெற்கு காட்டூர் சீதக்காதி தெருவில் அமைந்துள்ள ‘பாரதி நூலகம்’ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் நன்கு அறிந்த இடம். பாய்லர் ஆலையின் ஓய்வு பெற்ற ஊழியரான சீனிவாசன் தனது சேமிப்பில் பெரும்பகுதியை நூல்களாக வாங்கி இந்த நூலகத்தில் குவித்திருக்கிறார்.

இவரது இல்லத்தின் மாடிப்பகுதியில் அமைந்துள்ள பாரதி நூலகத்தில் சுமார் முப்பதாயிரம் நூல்கள் உள்ளன. அரசு நூலகங்களிலோ, பல கல்லூரிகளின் நூலகங்களிலோ இல்லாத ஆராய்ச்சிக்கு உதவும் விலையுயர்ந்த பல நூல்கள் இந்த நூலகத்தின் அலமாரிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. சித்த மருத்துவ குறிப்புகளைக் கொண்ட பழங்கால ஓலைச் சுவடிகள்,150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பல மொழி அகராதிகள், 125க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்களின் திருக்குறள் உரைகள், நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள, ‘ஸ்டாண்டர்ட் கேட்லாக் ஆஃப் வேர்ல்ட் கரன்ஸி’என அரிய பல நூல்கள் துறை வாரியாக அழகாக அடுக்கப்பட்டுள்ளன.


ஐம்பதுக்கும் மேற்பட்ட எம்.ஃபில் ஆராய்ச்சிக் கட்டுரையாளர்களும், பத்து நபர்கள் பிஹெச்.டி முடிக்கவும் இந்த நூலகம் மிகவும் உபயோகமாக இருந்திருக்கிறது. திமுக அரசு சென்னையில் உருவாக்கிய அண்ணா நூலகத்திற்காக பழங்கால நூல்கள் வாங்குவதற்கு முடிவு செய்தது. அரசு வாங்க விரும்பிய பல அரிய நூல்கள் பாரதி நூலகத்தில் இருப்பதைக் கேள்விப்பட்டு இங்கே நேரில் வந்து பார்த்த ஒரு நூலக உயர் அலுவலர், ‘இந்த நூலகத்தை அப்படியே அரசுக்கு கொடுத்து விடுங்கள் அதற்குரிய விலையைக் கொடுத்து விடுகிறோம்’ என்றாராம். ‘இந்த நூலகம் என் பிள்ளை மாதிரி. என் பிள்ளைகளைப் போய் விலைக்குக் கேட்குறீங்களே...’ எனச்சொல்லி விலைக்குத் தர மறுத்திருக்கிறார் வாசிப்பதை சுவாசிக்கும் சீனிவாசன்.

கல்வெட்டுகள் மூலம் ‘இராபர்ட் கிளைவ் படைகள் திருச்சியில் சிறுகனூர், லால்குடிக்கு இடைபட்ட பகுதியில் போரில் ஈடுபட்டதை அறிந்த சீனிவாசன் அந்த பகுதிகளில் தனது நண்பர்கள் துணையுடன் ஆய்வு செய்து புதரில் மறைந்து கிடந்த ஒரு பீரங்கியைக் கண்டுபிடித்திருக்கிறார். அந்த பீரங்கி இப்போது திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி வருகிறது.

இவ்வளவு பெரிய நூலகத்தை உருவாக்கி வைத்துள்ள சீனிவாசன் மெத்தப்படித்தவர் அல்ல. 64 வயதைத் தொடும் இவர் ஐ.டி.ஐ தொழில் கல்வி வரை மட்டுமே படித்துவிட்டு திருச்சி பி.ஹெச்.ஈ.எல்லில் வேலைக்குச் சேர்ந்தவர். கம்யூனிசத்தில் ஆர்வம் கொண்டு அவர்கள் நடத்தும் வரலாறு வகுப்புகளில் கலந்து கொண்டவருக்கு கல்வெட்டு ஆய்வு, நாணயம் சேகரிப்பு, நூல்கள் வாசிப்பு என ஆர்வம் பொங்க தனது 27-ம் வயதிலிருந்து சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளாக தனது நேரத்தையும் சம்பாத்யத்தில் பெரும் பகுதியையும் இவற்றுக்காகச் செலவழித்திருக்கிறார். தற்போது தமிழ் எழுத்துச் சீர்திருத்த வரலாறு பற்றி ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதிவருகிறார்.

எனது குடும்பத்தின் தேவைகளைக்கூட சிக்கனப்படுத்திக் கொண்டு நான் நூல்களாக வாங்கிக் குவிக்க எனது மனைவி சுசிலாதேவி வழங்கிய ஒத்துழைப்பு மிக அதிகம் என்கிறார் மகிழ்ச்சியுடன்.புத்தகங்கள் சேகரிப்புவீட்டில் நூலகம்ஓலைச்சுவடிகள்பழைய நாணயங்கள் சேகரிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x