Published : 25 Mar 2017 05:09 PM
Last Updated : 25 Mar 2017 05:09 PM

அன்பாசிரியர் எதிரொலி: அரசுப் பள்ளிக்கு ரூ.42,000 செலவில் அபாகஸ் கருவிகள் வழங்கிய தி இந்து வாசகர்கள்

மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.

இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் 'தி இந்து' வாசகர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

>அன்பாசிரியர் 27: செல்வக்கண்ணன்- ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர் தொடரைப் படித்த கலாம் அறப்பணி நல் இயக்கத்தினர் ரூ.42,000 மதிப்பில் அரசுப்பள்ளிக்கு இந்தியன் அபாகஸ் உபகரணங்கள் மற்றும் பயிற்சி ஏடுகளை வழங்கியுள்ளனர். அத்துடன் அபாகஸ் பயிற்சி அளிக்க விரும்பும் பிற அரசுப்பள்ளிகள் தங்களைத் தொடர்புகொண்டால் இலவசமாக அபாகஸ் கருவிகள் மற்றும் பயிற்சி வழங்கத் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.

''அன்பாசிரியர் தொடரைப் படித்த கலாம் அறப்பணி நல் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் சுதா ரூ.42,000 மதிப்பில் ஆசிரியர்கள் மற்றும் 40 மாணவர்களுக்கான இந்தியன் அபாகஸ் உபகரணங்கள் மற்றும் பயிற்சி ஏடுகளை வழங்கினார். ஒவ்வொரு வகுப்பிலும் அனைத்துத் திறன்களிலும் சிறந்து விளங்கும் ஒரு மாணவருக்கு வளரும் நேர்மறை சிந்தனையாளர் விருதும், அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒளிரும் நேர்மறை சிந்தனையாளர் விருதும் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டது.

சுதா பேசும்போது 'தி இந்து தமிழ்' அன்பாசிரியர் பகுதியில் இப்பள்ளியினைப்பற்றி அறிந்துகொண்டவுடன் இப்பள்ளிக்கு அறக்கட்டளை மூலம் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது என்றார். அபாகஸ் பயிற்சி அளிக்க விரும்பும் பிற அரசுப் பள்ளிகள் தங்களைத் தொடர்புகொண்டால் அவர்களுக்கும் இலவசமாக அபாகஸ் கருவிகள் மற்றும் பயிற்சி வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அறக்கட்டளையின் சார்பில் பள்ளியில் பணிபுரியும் 3 ஆசிரியர்களுக்கு சேலத்தில் உள்ள இந்தியன் அபாகஸ் பயிற்சி மையத்தில் இரண்டு நாட்கள் இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டது.

உள்கட்டமைப்பு வசதிகள்

தொடரைப் படித்த தங்கராஜ் என்பவர், மாணவர்களுக்கு நாற்காலி மற்றும் சாய்வு மேசை வழங்க ரூ.3,000 அளித்தார். பரமத்தியைச் சேர்ந்த சிவா அளித்த ரூ.4,500 தொகையில் ஆசிரியருக்கு மேசை, நாற்காலி வாங்கப்பட்டது. சதீஷ் குமார் என்ற தொழிலதிபர் பள்ளியின் அனைத்து வகுப்புகளுக்கும் ரூ.18,500 செலவில் மின் இணைப்புகளை புதுப்பித்துக் கொடுத்தார். இதன் மூலம் முன்பு கிடைத்த ஸ்மார்ட் வகுப்பறையோடு, பள்ளியின் உள்கட்டமைப்பு வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் சாத்தியமாக்கிய 'தி இந்து'வுக்கு நன்றி என்று நெகிழ்கிறார் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.

இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x