Published : 06 Feb 2014 08:28 PM
Last Updated : 06 Feb 2014 08:28 PM

கரூர்: நகராட்சியில் அடிப்படை வசதியில்லா ‘கிராமம்’

கரூர் நகராட்சியில் அடிப்படை வசதியேதுமின்றி ஒரு கிராமம் போல் உள்ள கோடங்கிப்பட்டி காலனியில் பொதுக்கழிப்பிடம் அமைக்க அப்பகுதி மக்கள் இடம் தேர்வு செய்து நகர்மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்ததையடுத்து நகர்மன்ற அலுவலர்கள் புதன்கிழமை இடத்தை பார்வையிட்டனர்.

கரூர் நகராட்சி 43-வது வார்டு பகுதியை சேர்ந்தது கோடங்கிப்பட்டி. இங்குள்ள காலனி பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நகராட்சிப் பகுதியாக இருந்தாலும் பொதுக்கழிப்பிடம், சாக்கடை வடிகால் வசதி, போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் இப்பகுதி மக்கள் எவ்வித அடிப்படை வசதியுமின்றி குக்கிராமம் போல உள்ளது. எனவே, இப்பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோடங்கிப்பட்டி காலனி முந்தைய தாந்தோணி நகராட்சிப் பகுதிக்கு உட்பட்டதாக இருந்தது. தாந்தோணி நகராட்சி கடந்த 2011-ம் ஆண்டில் கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. கோடங்கிப்பட்டி காலனியில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சாதாரண கூலித்தொழிலாளிகளே பெருமளவில் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் இல்லாததால், இயற்கை உபாதைகளை கழிக்க பெண்கள் காட்டுப் பகுதிக்கு தான் செல்லவேண்டி உள்ளது. இதனால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. காலனி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சாக்கடை கட்டுமானப் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சி மூலம் 15 நாட்களுக்கு அல்லது 19 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுவதால் போதுமான அளவு தண்ணீரின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, கூடுதலாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோருகின்றனர். அடிப்படை வசதிகள் கோரி திங்கள்கிழமை மறியலிலும் இப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியது: “இப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மாதம் ஒரு முறை மட்டுமே குறைந்த நேரத்திற்கே குடிநீர் வழங்கப்படுவதால் போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். பொதுக்கழிப்பறை இல்லாத காரணத்தினால், காட்டுப்பகுதியில் ஒதுங்கும் நிலை உள்ளது. சாக்கடை இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சாக்கடை வடிகால் வசதி அமைத்து தரவேண்டும்” என தெரிவித்தனர்.

நகர்மன்ற பொறியாளர் புண்ணியமூர்த்தியிடம் இதுகுறித்து கேட்டபோது, “பொதுக்கழிப்பிடம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்து தெரிவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் புதன்கிழமை நகர்மன்ற அலுவலர்கள் அவர்கள் தேர்வு செய்து தெரிவித்த இடத்தை பார்வையிட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x