Published : 07 Jan 2014 07:44 PM
Last Updated : 07 Jan 2014 07:44 PM

திண்டுக்கல்: ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே மானிய விலையில் வைக்கோல்: போலியான பயனாளிகள் பயன்பெறுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு உத்தரவு

ரேஷன் கார்டு வைத்திருக்கும் கால்நடை விவசாயிகளுக்கு மட்டுமே வைக்கோல் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளாக வடகிழக்கு, தென்மேற்குப் பருவ மழை முழுமையாகப் பெய்யவில்லை. அதனால், மேய்ச்சல் நிலம் குறைந்து கால்நடைகளுக்கு தீவனத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு மலிவு விலையில் வைக்கோல் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி, குஜிலியம்பாறை, வேடச்சந்தூர், தேவத்தூர், வத்தலகுண்டு ஆகிய இடங்களில் வைக்கோல் தீவனம் குடோன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக வைக்கோல் வியாபாரிகள், பெரிய விவசாயிகளிடம் இருந்து அரசு வைக்கோல் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க கடந்த 3-ம் தேதி டெண்டர் விடப்பட்டது. இதில் 15-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

அவர்களில் ஒருவர், மூன்று குடோன்களுக்கு கிலோ ரூ.4.10-க்கு வைக்கோல் வழங்கவும், ஒருவர் கிலோ ரூ.4.20-க்கும், மற்றொருவர் கிலோ ரூ.4.30-க்கும் வைக்கோல் வழங்க உறுதியளித்தனர். அவர்களுக்கு வைக்கோல் வழங்குவதற்கான ஆணையை ஆட்சியர் ந.வெங்கடாசலம் விரைவில் வழங்க உள்ளார்.

இது குறித்து கால்நடை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 50 மாடுகள் உள்ளன. இவற்றை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வளர்க்கின்றனர். தற்போது 65,000 கால்நடைகளுக்கு மானிய விலையில் வைக்கோல் கேட்டு 15,000 விவசாயிகள் விண்ணப்பித் துள்ளனர். இவற்றில் முதற்கட்டமாக ஐந்து குடோன்கள் மூலம் 10,000 பேருக்கு வைக்கோல் வழங்கப் பரிசோதனை முறையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது வெற்றி பெற்றால் அரசு தொடர்ந்து மற்ற விவசாயிகளுக்கும் மானிய விலையில் வைக்கோல் வழங்க நடவடிக்கை எடுக்கும்.

கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மானிய விலையில் வைக்கோல் பெற ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும். ரேஷன் கார்டு நகலுடன் உள்ளூர் கால்நடை மருத்துவரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர், விண்ணப்பித்தவர் கால்நடை வளர்ப்பவரா?, எத்தனை கால்நடைகள் வளர்க்கிறார்?, அவர் அதே பகுதியைச் சேர்ந்தவரா? என விசாரித்து அவருக்கு வைக்கோல் வழங்க ஒப்புதல் வழங்கி கால்நடை தீவன அட்டை வழங்குவார்.

இந்த கால்நடை தீவன அட்டை ரேஷன் கார்டு போன்றது. இந்த அட்டையுடன் சென்றால் மட்டுமே வைக்கோல் கிடைக்கும். வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ வைக்கோல் ரூ.6 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது. அதனால், போலியான பயனாளிகள் பயன்பெறுவதை தடுக்கவே ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் விசாரணை நடத்தப்படுகிறது. தற்போது வியாபாரிகளிடமே வைக்கோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், தற்போது டெண்டர் விட்ட அடிப்படையில் குறிப்பிட்ட காலம் வரையே மானிய விலையில் வைக்கோல் வழங்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x