Published : 28 Jan 2014 19:40 pm

Updated : 06 Jun 2017 18:52 pm

 

Published : 28 Jan 2014 07:40 PM
Last Updated : 06 Jun 2017 06:52 PM

பாதுகாப்பு இல்லாத வேளாங்கண்ணி கடற்கரை: தொடரும் உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி, அனைத்து மதத்தினரும் நம்பிக்கையுடன் வருகை தரும் புனித வழிபாட்டுத் தலங்களில் ஒன்று வேளாங்கண்ணி. இங்கு வரும் பக்தர்களுக்கு பேராலயம் சார்பில் தங்கும் விடுதிகள், வழிபாட்டுச் சலுகைகள் எல்லாம் வழங்குவது சரிதான்.

ஆனால், வேளாங்கண்ணி கடல், கடற்கரையில் எவ்வித பாதுகாப்பும் இல்லாததால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மாதம் மட்டும் இதுவரை 7 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வருவோரில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் கடலுக்குச் சென்று குளிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


அறிவிப்புப் பலகையில்லை…

குளிக்கும்போது ஆர்வ மிகுதியில் கடலுக்குள் மேலும் மேலும் இறங்கும்போது அலையில் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களை எச்சரிக்கை செய்ய ஆள்களும் இல்லை, எச்சரிக்கையை வலியுறுத்தும் அறிவிப்புப் பலகையும் இல்லை.

தந்தையின் கண் எதிரே மகனும், அவரைக் காப்பாற்றச் சென்ற தந்தையும் அலையில் சிக்கி இறந்துபோயினர். காரைக்குடியில் இருந்து குடும்பத்தினருடன் வந்து கணவரையும், மகனையும் இழந்து தனி மரமாக ஒரு பெண் கடற்கரையில் நின்று கதறினார்.

திருமணமாகி தேனிலவு சுற்றுலாவாக பல ஊர்களுக்குச் சென்றுவிட்டு வேளாங்கண்ணிக்கு வந்தனர் கோவில்பட்டியைச் சேர்ந்த புதுமணத் தம்பதி. கடலில் குளித்தபோது மனைவி கடலுக்குள் மூழ்கி இறந்துபோக, திருமணமான 42-ம் நாளில் மனைவியைப் பலி கொடுத்துவிட்டு பரிதவித்தார் இளைஞர்.

கர்நாடகத்திலிருந்து சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள் 10 பேர், கடலில் ஆனந்தக் குளியல் போட்டனர். அவர்களில் இரு மாணவர்கள் அலையில் மூழ்கி இறந்தனர். இந்த உயிரிழப்புகள் எல்லாம் ஜனவரி மாதக் கணக்கு. வெளியே தெரியாதது பல.

கண்காணிக்க ஆளில்லை…

இதற்குக் காரணம் கடற்கரையில் பாதுகாப்பு- மக்களைக் கண்காணித்து எச்சரிக்கை செய்ய தேவையான ஏற்பாடுகள் இல்லாததுதான். கடலுக்குள் குறிப்பிட்ட தொலைவில் கம்பி வேலி அமைத்து, மக்களை அதற்கு அப்பால் செல்லாமல் தடுக்க வேண்டும் என்று பொதுநல அமைப்புகள் கரடியாய் கத்தினாலும் காதில் போட்டுக் கொள்வாரில்லை.

இரு கண்காணிப்பு கோபுரங்கள் இருப்பினும், விழாக் காலங்களில் மட்டுமே போலீஸார் அங்கு நின்று கண்காணிக்கின்றனர். மற்ற நாள்களில் இல்லை. குறைந்தபட்சம், கடற்கரையில் ஆபத்தான பகுதி என்று எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகூட அமைக்கப்படவில்லை. இதனால் உயிர் பலிக்குக் காத்திருக்கும் ஆபத்தை உணராமல் ஆழியில் கலந்து விடுகிறார்கள் அப்பாவி மக்கள்.

தடுப்புக் கம்பி அமைக்க முடிவு

சுற்றுலா மற்றும் ஆன்மிகப் பயணமாக வரும் அப்பாவி மக்கள் பலியாகும் இந்த அவலநிலை குறித்து வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசனிடம் கேட்டதற்கு, “ரூ.15 லட்சம் செலவில் தடுப்புக் கம்பிகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி ஆட்சியருக்கு அனுப்பிவைத்தோம். ஆனால், அதற்கு பல துறைகளில் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறி தற்போது வரை அனுமதி அளிக்கப்படவில்லை. பிறகு, சென்னை ஐஐடி மூலமாக திட்ட வரைவு தயாரிக்க தற்போது ரூ.8 லட்சம் கட்டி அவர்களும் வந்து ஆய்வு செய்துள்ளனர்.

அவர்கள் வரைவு அறிக்கை கொடுத்தவுடன் அதை மாவட்ட நிர்வாகம் மூலமாக அனைத்துத் துறை ஒப்புதலோடு நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையில் படகுடன் 4 நீச்சல் வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஆட்சியருக்கு ஒரு தீர்மானம் அனுப்பியுள்ளோம்” என்றார்.
வேளாங்கண்ணிகடற்கரைபாதுகாப்புகடலில் மூழ்கி பலி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x