Published : 23 Mar 2014 11:46 AM
Last Updated : 23 Mar 2014 11:46 AM

காந்தி நினைத்திருந்தால்...

சில சர்ச்சைகள் வரலாற்றில் அவ்வளவு எளிதில் ஓய்ந்துவிடுவதில்லை. மீண்டும் மீண்டும் அவை எழுப்பப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சர்ச்சைகளுள் ஒன்றுதான் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தூக்கிலிடப்படுவதிலிருந்து பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய புரட்சியாளர்களை காந்தியால் காப்பாற்றியிருக்க முடியுமா என்பதும். காந்தியின் வழிமுறையும் பகத் சிங்கின் வழிமுறையும் முற்றிலும் வேறுபட்டவை. ஆகவே, கோடிக் கணக்கான சாதாரண மக்கள் பகத் சிங்கைக் கொண்டாடியபோதிலும் காந்தி அவரை முற்றிலும் நிராகரித்தது எந்த விதத்திலும் ஆச்சர்யத்துக்குரியதல்ல. அது கொள்கைரீதியானது. வன்முறையைத் தனது பாதையாகக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றத் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று காந்தி சொல்லியிருந்தாலோ, இன்னும் ஒரு படி மேலே சென்று, பகத் சிங் செய்த கொலைக்காக, வன்முறைக்காக அவர் தூக்கிலிடப்படுவது ஆங்கிலேயே ஆட்சியின் பார்வையிலிருந்து முற்றிலும் சரியே என்று காந்தி வாதிட்டிருந்தாலோ கூட அதில் ஒருவர் தவறு காண முடியாது.

ஆனால், காந்தி அப்படி வெளிப்படையாக நடந்துகொள்ள வில்லை. அதன் காரணமாகவே இன்றளவும் காந்தியின் ஆதரவாளர்கள் “பகத் சிங் மற்றும் அவரது தோழர்களின் விடுதலைக்காக காந்தி தனிப்பட்ட முறையில் தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தார். வழிதவறிய மைந்தர்கள் அவர்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்றாடினார். அனைத்துக்கும் இன்று திட்டவட்டமான கடித ஆதாரங்கள் ஆவணக் காப்பகங்களில் உள்ளன’’ என்று கூறிவருகின்றனர். ஆனால், ஆவணக் காப்பகங்களில் கிடைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் இதற்கு நேர்மாறானதாக இருப்பது காந்திக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.

பகத் சிங் உருவாகிறார்…

1928 அக்டோபர் 30, லாகூரில் சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் ‘பஞ்சாப் சிங்கம்’ என்று அழைக்கப் பட்ட லாலா லஜபதி ராயை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப் பாளர் ஜே.ஏ. ஸ்காட் லத்தியால் கடுமையாகத் தாக்கினார். இதனால், பலத்த காயங்களுக்கு ஆளான ராய், நவம்பர் 17-ல் மரணமடைந்தார். இது பஞ்சாப் முழுவதும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராயின் சாவுக்குக் காரணமான ஸ்காட்டைக் கொல்வது என பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் முடிவுசெய்தனர். ஆனால், ஸ்காட்டைக் கொல்வதற்குப் பதிலாக, தவறுதலாக துணை கண்காணிப்பாளர் ஜே.பி. சான்டர்ஸைச் சுட்டுக்கொன்றனர்.

தப்பிச்சென்ற பகத் சிங்கும் அவரது தோழர்களும் அத்துடன் சும்மா இருக்கவில்லை. 1929, ஏப்ரல் 8 அன்று டெல்லி மத்திய சட்டமன்றத்தில் பகத் சிங்கும் அவரது தோழர் பட்டுகேஷ்வர் தத்தும் யாருக்கும் ஆபத்தில்லாத வகையில் வெடிகுண்டு ஒன்றை வீசினர். அவர்களது நோக்கம், யாரையும் கொல்வது அல்ல என்பதுடன் தப்பிச்செல்லும் எண்ணமும் அவர்களுக்கு இருக்கவில்லை. தாங்கள் கைதாவதன் மூலம், நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்துவதன் மூலம் அந்நிய ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்களைக் கிளர்ந்தெழச் செய்ய வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். தாங்கள் கைது செய்யப்படும் பட்சத்தில் சான்டர்ஸ் கொலை வழக்குக்காகத் தாங்கள் தூக்கிலிடப்படுவோம் என்பதை அறிந்தே அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டனர். தங்கள் வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும், தாங்கள் தூக்கிலிடப்படும் பட்சத்தில் அது மக்களிடையே ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, பெரும் கோபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்பினர். அதுவே நடந்தது. (தான் ஒரு போர்க் கைதியாக நடத்தப்பட வேண்டுமென்றும் தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாகத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட வேண்டுமென்றும் பகத் சிங் கோரினார்). இந்த வழக்கு, குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே எதிரான வகையில் நடத்தப்பட்டதைப் பல சட்ட நிபுணர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

காந்தி - இர்வின் குறிப்புகள்

இந்த வழக்கில் 1930 அக்டோபர் 7-ம் தேதி பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கும் அவர்கள் தூக்கிலிடப்பட்ட 1931 மார்ச் 23-ம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில்தான் காந்திக்கும் அன்றைய வைஸ்ராய் இர்வினுக்கும் இடையில் அரசியல் உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தை நடந்தது. தூக்கு தண்டனையை ஆங்கில அரசு ரத்துசெய்வதை உடன்படிக்கைக்கான நிபந்தனையாக காந்தி வைக்கும் பட்சத்தில் பகத் சிங்கையும் அவரது தோழர்களையும் காப்பாற்ற முடியும் என்று நாடே உறுதியாக நம்பியது. பேச்சுவார்த்தை நடந்தது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில். இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது பகத் சிங்கையும் அவரது தோழர்களையும் காப்பாற்ற வைஸ்ராயிடம் காந்தி வைத்த கோரிக்கையின் தன்மையே காந்தி என்ன விரும்புகிறார் என்பதை இர்வினுக்குத் தெளிவாகக் காட்டியது. பிப்ரவரி 18-ல் நடந்த பேச்சுவார்த்தையைப் பற்றி இர்வின், காந்தி இருவருமே குறிப்பு எழுதிவைத்துள்ளனர். இருவரின் குறிப்புகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏதுமில்லை.

இர்வினின் குறிப்பு:

பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக அல்லாமல் பேச்சுவார்த்தையின் இறுதியில், பேச்சுவார்த்தைக் குத் தொடர்பில்லாமல் பகத் சிங் வழக்குபற்றி காந்தி குறிப்பிட்டார். ஒரு உயிரை எடுப்பது என்பது அவரது கொள்கைக்கு மாறானது என்பதால், முடிவெடுப்பது அவராக இருப்பின் தூக்கு தண்டனையை ரத்துசெய்வார் என்றபோதிலும், அவர் தூக்கு தண்டனையை ரத்துசெய்யக் கோரவில்லை. இன்றைய சூழ்நிலையில், தண்டனை நிறைவேற்றத்தைத் தள்ளிப்போடும்படி கேட்டுக்கொண்டார்.

காந்தியின் குறிப்பு:

நான் பகத் சிங் பற்றி அவரிடம் (வைஸ்ராயிடம்) பேசினேன். நான் அவரிடம் சொன்னேன்: ‘‘நமது பேச்சுவார்த்தையுடன் தொடர்பற்ற விஷயம் இது. இதைப் பற்றி நான் பேசுவதுகூடப் பொருத்தமற்றதாக இருக்கலாம்... நானாக இருந்தால் அவரை விடுதலை செய்வேன். ஆனால், ஒரு அரசாங்கம் அப்படி நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்க மாட்டேன். இந்தப் பிரச்சினையைப் பற்றி நீங்கள் பதிலே அளிக்காத பட்சத்திலும் அதை நான் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.’’

‘‘மேதகு வைஸ்ராய் அவர்களே, பகத் சிங்கின் உயிரைக் காப்பாற்ற உங்களிடம் நான் கோரிக்கை வைத்தேன் என்று வெளியே சொல்லிக்கொள்வதில் உங்களுக்கு ஆட்சேபணை ஏதுமிருக்கிறதா என்று காந்தி என்னிடம் கேட்டார்’’ என்று இர்வின் தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுவதைப் பார்க்கும்போது, காந்தி வைத்த கோரிக்கை எப்படிப்பட்டது என்பது நமக்குத் தெளிவாகிறது.

காந்தியின் கடிதம்

ஆக, காந்தியின் கோரிக்கை, தூக்கை ரத்துசெய்வது அல்ல. தற்காலிகமாக நிறுத்திவைப்பது. ஏனெனில், பகத் சிங் தூக்கிலிடப்படுவது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்; அது கராச்சி காங்கிரஸ் மாநாட்டைப் பாதிக்கும் என்று காந்தி அஞ்சினார். மார்ச் 5-ம் தேதி காந்தி - இர்வின் உடன்படிக்கை கையெழுத்தான பின்னர் நடந்த சந்திப்புகளிலும், தூக்கு தண்டனையை ரத்துசெய்யும் கோரிக்கையை காந்தி வைக்கவில்லை. 24-ம் தேதியன்று காலை பகத் சிங் தூக்கிலிடப்படுவார் என்பதை பத்திரிகைகள் வாயிலாக காந்தி அறிந்திருந்தார். மார்ச் 23-ம் தேதியன்று தூக்கு தண்டனையை ரத்துசெய்யக் கோரி இர்வினுக்குக் கடிதம் எழுதினார் காந்தி. அன்று மாலையே மூவரும் தூக்கிலிடப்பட்டனர். இப்படிக் கடைசி நேரத்தில் கடிதம் எழுதுவதில் பலனேதும் இருக்காது என்பது காந்திக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. இதே கடிதத்தை, பேச்சுவார்த்தையின்போது காந்தி எழுதியிருந்தால், நிச்சயம் தூக்கு ரத்துசெய்யப்பட வாய்ப்பு இருந்திருக்கும்.

அகிம்சையைத் தனது உயிர் மூச்சாகக் கருதிய காந்தி, தூக்கு தண்டனையைக் கோட்பாடுரீதியாக ஏற்றுக்கொண்டவரில்லை (ஆனாலும், தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று குரல்கொடுக்கவும் இல்லை). இந்த அடிப்படையில் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமலேயே பகத் சிங் உள்ளிட்டோர் உயிர்களை காந்தி காப்பாற்றியிருக்க முடியும். பெஷாவரில் சத்தியாக்கிரகிகளைச் சுட மாட்டோம் என்று மறுத்து தண்டனைக்கு ஆளான கர்வாலி ராணுவ வீரர்களை மன்னிக்கும்படி ஏன் வைஸ்ராயிடம் கேட்கவில்லை என்று காந்தியை ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது காந்தி அளித்த பதில்: ‘‘சுடு உத்தரவை மீறும் ஒரு ராணுவ வீரர், தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறுவதுடன், கீழ்ப்படிய மறுக்கும் குற்றத்துக்கும் ஆளாகிறார். கீழ்ப்படிய மறுக்கும்படி வீரர்களையும் அதிகாரிகளையும் நான் கேட்க மாட்டேன். ஏனெனில், நான் அதிகாரத்தில் அமரும்போதும் இதே அதிகாரிகளையும் வீரர்களையும்தான் பயன்படுத்த வேண்டும். கீழ்ப்படிய மறுக்க இப்போது நான் அவர்களுக்குக் கற்றுத்தந்தால் நான் அதிகாரத்துக்கு வரும்போதும் அவர்கள் அதையே செய்வார்கள் என்று அஞ்சுகிறேன்.’’

க. திருநாவுக்கரசு, சமூக அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: kthiru1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x