Last Updated : 10 Mar, 2018 10:22 AM

 

Published : 10 Mar 2018 10:22 AM
Last Updated : 10 Mar 2018 10:22 AM

நூதனமாக கைமாறும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள்

நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை போவதால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலங்கள் பெரிய நிறுவனங்களுக்கு நூதன முறையில் கைமாறுகின்றன.

கடந்த 15 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ரியல் எஸ்டேட் தொழில் அசுர வளர்ச்சி கண்டது. இடையிடையே தொய்வு ஏற்பட்டாலும், நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து விண்ணைத் தொட்ட தால் இத்தொழில் பெரிய சரிவைச் சந்திக்கவில்லை.

தனிநபர் தனது நிலத்தை ஒருவரிடம் மட்டுமல்லாமல் பலரிடம் விற்று முறைகேட்டில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடங்கள் நூதன முறையில் கைமாறுகின்றன.

வீட்டு வசதித் திட்டத்துக்காக தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வீட்டு வசதி வாரியம் நில ஆர்ஜித சட்டப்படி கையகப்படுத்தியது. இச்சட்டப்படி, முறையாக நிலம் கையகப்படுத்தப் படாவிட்டாலோ, கையகப்படுத்தப்படும் நிலம் உடனடியாக பயன்படுத்தப் படாவிட்டாலோ, நில உரிமையாளர்களுக்கு உரிய நஷ்டஈடு தராவிட்டாலோ சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம், நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

10 ஆயிரம் வழக்குகள்

பல ஆயிரம் ஏக்கரில் வீட்டுமனைத் திட்டம் நிறைவேற்றப் படாததால், அந்த நிலத்தை தங்களிடம் திரும்ப ஒப்படைக்கக் கோரி நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்துள் ளனர்.

“இந்த வகையில் மட்டும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் (ஒரு ஏக்கர் என்பது 43,560 சதுரஅடி) நிலத்தைக் கோரி 10 ஆயிரத்துக் கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன” என்று வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதற்கிடையில், வீட்டு வசதி வாரியத்தின் நிலங்கள் நூதன மான முறையில் கைமாறுவதும் தெரியவந்துள்ளது.

பவர் ஆஃப் அட்டர்னி

பெரிய நிறுவனங்கள் வாரியத்துக்கு நிலத்தைக் கொடுத்தவர்களை அணுகி, “உங்கள் நிலம் இன்னமும் பயன்படுத்தப்படவில்லை. அந்த நிலத்தை நீங்கள் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தீர்கள். இப்போது அந்த நிலத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் உயர்ந்துவிட்டது. நில ஆர்ஜித சட்டப்படி, கையகப்படுத்தப்படும் நிலங்கள் உடனடியாக பயன்பாட்டுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதன்படி, உங்கள் நிலத்தை வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து சட்டப்படி பெறுவதற்கு நாங்கள் உதவுகிறோம். உங்களால் பணம் செலவு செய்ய முடியாது. எனவே, அந்த நிலத் தின் மதிப்பை உங்களுக்கு தருகிறோம்” என்று சொல்லி சில கோடிகளைத் தருகின்றன.

உடனே அந்த நிலத்துக்கான பவர் ஆஃப் அட்டர்னியையும் அந்த நிறுவனத்தார் பெற்றுக் கொள்கின்றனர்.

பின்னர் அந்த நில உரிமையாளர் பெயரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதற்கான செலவையும் செய்து வழக்கில் வெற்றி பெற்று நிலத்தை மீட்கின்றனர். நீதிமன்றத் தீர்ப்பு வந்த கையோடு தங்கள் நிறுவனத்தின் பெயருக்கு நிலத்தைப் பதிவு செய்கின்றனர்.

இதுகுறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரி கூறியதாவது:

உதாரணத்துக்கு, 2004-ம் ஆண்டு சென்னை அடையாறில் ஒரு கிரவுண்ட் (2,400 சதுரஅடி) நிலம் ரூ.60 லட்சத்துக்கு விற்கப்பட்டது. இப்போது 12 மடங்கு அதிகரித்து ரூ.7 கோடிக்கு விற்பனை ஆகிறது. அதே காலகட்டத்தில் முகப்பேர் ஏரித் திட்டப் பகுதியில் ஒரு கிரவுண்ட் ரூ.14 லட்சத்துக்கு விற்கப்பட்டது. இப்போது 10 மடங்கு அதிகரித்து ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் விலை 6 மடங்கு உயர்ந்திருக்கிறது.

இவ்வாறு நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துவிட்டதால், பெரிய நிறுவனங்கள் வீட்டு வசதி வாரியத்தின் நிலங்களைக் குறிவைத்து காயை நகர்த்துகின்றன. முதலில் வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அழிக்கின்றனர். அதாவது, நில ஆர்ஜித சட்டப்படி, நில உரிமையாளர் வீட்டு வசதி வாரியத்துக்கு நிலம் வழங்கியதற்கான ஆவணம், வாரியம் நில உரிமையாளருக்கு உரிய நஷ்டஈடு வழங்கியதற்கான ஆவ ணம் உள்ளிட்டவற்றை அழிக் கிறார்கள்.

போதிய பாதுகாப்பின்மை

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது ‘குறிப்பிட்ட ஆவணங்களைக் காணவில்லை, போதிய பாதுகாப்பு இல்லாததால் திருடுபோய்விட்டது’ என்று சொல்கிறார்கள். ஆவணங்கள் காணாமல் போனதற்கு வருவாய்த் துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு பெரிய தண்டனை கிடைக்கப் போவதில்லை. அதனால் இந்தத் தவறை துணிந்து செய்கின்றனர். கடைசியில், நீதிமன்றத் தீர்ப்பின் படி நில உரிமையாளருக்கே நிலம் மீண்டும் கிடைத்து விடுகிறது.

சில கோடிகளைப் பெற்றுக்கொண்ட திருப்தியோடு அவர் கள் நிலத்தைப் பெரிய நிறுவனங் களுக்கு எழுதிக் கொடுக்கின்றனர்.

வீட்டு வசதி வாரியம் நிலம் கையகப்படுத்தியவுடன், வீட்டு வசதித் திட்டத்தை அறிவிக்காததால், இவ்வாறு நூதன முறையில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பெரிய நிறுவனங்களுக்கு கைமாறிவிட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x