Published : 28 Jan 2019 03:53 PM
Last Updated : 28 Jan 2019 03:53 PM

பிளாஸ்டிக் ஒழிப்பில் வழிகாட்டிய நீலகிரி!

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கவனத்துக்கு. பிளாஸ்டிக் பாட்டில், பொருட்கள் இருந்தால் ரூ.250 அபராதம்" எனக்  குறிப்பிட்டு, அபராத ரசீதுடன் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.நீலகிரி மாவட்டத்தில்  பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது  இந்தப் படம். தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்த தமிழக அரசு. இதற்கு வழிகாட்டியது நீலகிரி மாவட்டம்  என்பது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 20 ஆண்டுக ளுக்கு முன் மாவட்ட ஆட்சியராக இருந்த சிவசங்கரன்,  ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது "நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது.

இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்குள் பொருட்களை வைப்பதற்கு முன், அந்தப் பையைத் திறக்க ஊதப்படும் காற்றின் மூலம் பரவும் நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களைக்கூட  நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை" என்று குறிப்பிட்டார். இதையடுத்து, நீலகிரி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்புவகித்த  சுப்ரியா சாஹு, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்த முழு ஆய்வை மேற்கொண்டு, 20 மைக்ரான் எடைக்குக் குறைவான அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுமே தடை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதன் பின்னர், நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. எனினும், அதன் பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் வந்த ஆட்சியர் பொ.சங்கர், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.  அவர் மாற்றலாகிச் சென்ற பின்னர் பொறுப்பேற்ற தற்போதைய ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பில் மிகத் தீவிரம் காட்டினார்.

penaltyjpg

14 பொருட்களுக்கு தடை

பிளாஸ்டிக் பொருட்கள் வனங்களிலும், நீர்நிலைகளிலும் வீசப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகத் தெரிவித்த அவர், சுற்றுலாப்  பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு பசுமை வரி விதித்தார்.

இவர், பிளாஸ்டிக் பைகள் மட்டுமின்றி, டம்ளர், தட்டுகள் உட்பட 14 பொருட்களுக்கு தடை விதித்தார். இது அரசிதழிலும் வெளியிடப்பட்டது.இதனால், மக்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருளைத் தேடும் நிலை உருவானது.  திருமணங்களில்கூட பிளாஸ்டிக் மற்றும் மெழுகு பூசப்பட்ட டம்ளர்களுக்கு பதிலாக எவர்சில்வர் டம்ளர் பயன்பாடு மீண்டும் வந்தது.

பிளாஸ்டிக் ஒழிப்பில் தீவிரம் காட்டும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும், சுற்றுலாப் பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. மாதம் ஒரு நாள் ஒட்டுமொத்த ஆய்வு நடத்தப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்து வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறாக  வசூலிக்கப்பட்ட அபராதம் பல லட்சங்களாகும். நீலகிரி மாவட்டத்தில் மக்கள் தொகை 7.5 லட்சம்.

ஆனால், மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதைவிட பலமடங்கு. சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இதனால், உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் பொருட்களைவிட, சுற்றுலாப் பயணிகளால் பயன்படுத்தப்படும் பொருட்கள்தான் அதிகம்.  அவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், தின்பண்டங்களின் உறைகள் மற்றும் இதர பொருட்கள் நீர்நிலைகள் மற்றும் கழிவுநீர்க்  கால்வாய்களை அடைத்து, சுகாதாரச் சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடை இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் என நம்புகின்றனர் உள்ளூர் மக்கள். தடை அமல்படுத்தப்பட்ட 27 நாட்களில் இந்த வித்தியாசத்தை மக்கள் உணர்கின்றனர். எனினும், மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால், அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்த அபராதத் தொகை பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அபராதத் தொகை  குறைந்த அளவில்  இருந்தால், அதைச் செலுத்தி விட்டு, மீண்டும் அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடும் என்கின்றனர் உள்ளாட்சி ஊழியர்கள். இதைத் தவிர்க்கவே அபராதத்  தொகை ரூ.250-ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.

குழப்பத்தில் உள்ளூர் வியாபாரிகள்

nilgiris-2jpg

மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக புலம்புகின்றனர் சிறு வியாபாரிகள்.  மாவட்டத்தில் தொழிற்சாலைகளோ, தொழில் நிறுவனங்களோ இல்லாததால், பெரும்பாலான மக்கள் தினக்கூலிகளாகப் பணிபுரிகின்றனர். சிலர், வீடுகளிலேயே சிறு தொழில்கள் செய்து வருகின்றனர். வீட்டில் தின்பண்டங்கள், இட்லி, தோசை மாவு தயாரித்து விற்கின்றனர். இதில், பெரும்பாலும் பெண்கள்தான் ஈடுபடுகின்றனர். இந்த வருவாயில்தான் இவர்களின் குடும்பங்கள் வாழ்கின்றன.

இந்நிலையில், பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டுள்ளதால், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் சிறு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.முறுக்கு, சிப்ஸ் ஆகியவற்றை விற்பனை செய்யும் சிறு வியாபாரி சுரேஷ் சன்மிதி கூறும்போது, "நீலகிரி மாவட்டம் குளிர் பிரதேசமாகும். இங்கு தின்பண்டங்களை  திறந்தவெளியில் வைத்தால், அவை விரைவில் நமத்துப்போய்விடும். இதனால், பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்துவந்தோம்.

பிளாஸ்டிக் இல்லாமல், காகிதப் பெட்டிகள் மற்றும் உறைகளில் அடைத்து விற்க முடியாது. மாவட்டத்தில் காலநிலை பெரும் சவாலாகும். இந்நிலையில், பிளாஸ்டிக் தடை காரணமாக தின்பண்டங்களை எப்படி விற்பது என வழி தெரியாமல் குழப்பமடைந்துள்ளோம். பிளாஸ்டிக்குக்கு மாற்றாக, மக்கும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தலாமா என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். இது தொடர்பாக  மாவட்ட நிர்வாகத்தை அணுகினோம்.

ஆனால், மாவட்ட நிர்வாகமும்,  தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. கடந்த ஒரு மாதமாக சிறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். மாற்று வழி குறித்து தெளிவு படுத்தினால்தான்,  எங்களது தொழிலை மேற்கொள்ள முடியும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x