Published : 05 Aug 2014 10:24 AM
Last Updated : 05 Aug 2014 10:24 AM

திருநங்கையை திருமணம் செய்துகொள்ள ஆட்சியரிடம் இளைஞர் கோரிக்கை: சட்டப்படி அங்கீகாரம் வழங்க வேண்டுகோள்

திண்டுக்கல் இளைஞர் ஒருவர், திருநங்கையைத் திருமணம் செய்துகொள்ள அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விநோத கோரிக்கை வைத்தார்.

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த தாமரை (26). ஒரு திருநங்கை. இவர் 18 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். திண்டுக்கல் வீரக்கல் வண்ணம்பட்டியைச் சேர்ந்தவர் முத்து (28). இவர், திண்டுக்கல் தனியார் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வருகிறார். முத்து, தாமரை இருவரும் திங்கள்கிழமை திண்டுக்கல் ஆட்சியர் ந.வெங்கடாசலத்தை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

“நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர், உறவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எங்களைப் பிரிக்கவும் முயற்சி செய்கின்றனர்.

எங்கள் திருமணத்தை சமூகம்தான் அங்கீகரிக்கவில்லை; அரசாவது எங்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். திருமண உதவித்தொகை, சேர்ந்து வாழ வீடு வழங்கி பாதுகாப்பும் கொடுக்க வேண்டும் என முறையிட்டனர்.

இருவரையும் விசாரிக்க சமூக நலத் துறை அதிகாரி நாகபிரபா விடம் அனுப்பி மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார். இயற்கைக்கு முரணான இவர்களின் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க சட்டத்தில் இடமுள்ளதா, அவர்களுக்கு சட்டப் படி என்ன உதவி, பாதுகாப்பு வழங்கலாம் என சமூகநலத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருநங்கை தாமரை `தி இந்து' செய்தியாளரிடம் கூறியதாவது: ‘‘அன்பு, அரவணைப்பு கிடைக்காததால் 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு சக திருநங்கைகளுடன் கடை வீதிகளில் சென்று உதவி கேட்பேன். அப்போது, முத்து பணிபுரியும் பெட்ரோல் பங்கிலும் அடிக்கடி சென்று உதவி கேட்போம். நாங்கள் உதவிக்காக கையேந்தி நிற்கும்போது, எங்களை ஏளனமாக திட்டி அனுப்புவோர்தான் அதிகம்.

ஆனால், செல்லும்போதெல்லாம், முத்து மறுப்பு சொல்லாமல் உதவி செய்வார்; ஆறுதலாகப் பேசுவார். அவர் மீது எனக்கு ஏற்பட்ட மரியாதை காதலானது. அவரைத் திருமணம் செய்தால் எனக்கு பாதுகாப்பும் அன்பும் கிடைக்கும் என நினைத்தேன். என்னுடைய விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் என்னை ஏற்றுக்கொண்டார். கடந்த 3 ஆண்டுகளாகப் பழகியதில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டோம். அதனால், ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம். திருமணம் என்பது குழந்தை பெற்றுக்கொள்வது, தாம்பத்ய வாழ்க்கை மட்டுமில்லை. அதையும் தாண்டி இனம்புரியாத அன்பின் அடையாளம் திருமணம். எங்களைப் போன்றவர்களுக்கு திருமணம் அந்த அன்பு, அரவணைப்பைத் தரும் என நினைக்கிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x