Published : 01 Aug 2014 10:00 AM
Last Updated : 01 Aug 2014 10:00 AM

விதிமுறை மீறல் கட்டிடங்களை தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

விதிமுறைகளை மீறிக் கட்டப்படும் கட்டிடங்களைத் தடுக்கும் வகையில் ஒரு ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை பரிந்துரை செய்யும்படி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. புலன் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் விதிமுறைகளை மீறி ஏராளமான கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அவ்வாறு கட்டப்படும் பல கட்டிடங்கள் மிகவும் குறுகலான தெருக்களிலும், வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்படாமலும் கட்டப்படுகின்றன. இதனால் அவசர காலத்தில் தீயணைப்பு வாகனங்களோ, ஆம்புலன்ஸ் வாகனங்களோ அந்தத் தெருக்களின் உள்ளே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளை மீறி நடைபெறும் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்திட அதிகாரிகள் எந்த அக்கறையும் காட்டவில்லை. கட்டுமானப் பணிக்கு வழங்கப்பட்ட அனுமதி முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா, விதிமுறை மீறப்படுகிறதா என்பது பற்றியெல்லாம் அதிகாரிகள் தொடர்ச்சியாக நேரடி ஆய்வு நடத்த வேண்டும். ஆனால் அவ்வாறு யாரும் ஆய்வு செய்வதில்லை.

இந்த சூழலில் சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் அண்மையில் இடிந்து விழுந்துள்ளது. அந்தக் கட்டிடம் கட்டப்பட்ட இடம் முன்னர் ஓடைப் பகுதியாக இருந்தது என்பது தெரிய வந்துள்ளது. ஒரு நீரோடைப் பகுதி நிலப் பகுதியாக மாற்றம் செய்யப்பட்டதைக் கூட தடுத்து நிறுத்தாத வகையில் வருவாய்த் துறையினர் அலட்சியமாக இருந்துள்ளனர்.

ஆகவே மவுலிவாக்கம் அடுக்கு மாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்தது பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும், அதற்கு பொறுப்பான அதிகாரிகள் பற்றியும் முழுமையான புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள புலன் விசாரணை அமைப்புகளால் நடத்தப்படும் விசாரணை சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஆகவே, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு முழுவதும் பல நகரங்களில் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்படுவதாக மனுதாரர் இந்த மனுவில் கூறியுள்ளார். இது மிகவும் முக்கியமான விவகாரம். ஆகவே, மாநிலம் முழுவதும் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டுவதைக் கண்காணித்து, அத்தகைய கட்டுமானப் பணிகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உரிய பரிந்துரைகளை இந்த நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும். மேலும் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, விதிமுறை மீறல் கட்டுமானங்களை தடுப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை தலைமை வழக்கறிஞர் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x