Published : 26 Jul 2018 10:21 AM
Last Updated : 26 Jul 2018 10:21 AM

நெல்லிக்கனியும் வாழ்வியல் நெறியும்...

ஒரே ஆண்டில்  40 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'நெல்லிக்கனி' என்ற திட்டத்தில் நெல்லிக்கனியுடன், வாழ்வியல் நெறிகள், தன்னம்பிக்கையூட்டும்  பயிற்சிகளை அளித்துள்ளார் கோவை கவிஞர் கவிதாசன்.

அது என்ன ‘நெல்லிக்கனி' திட்டம். ‘‘நெல்லிக்கனி முன் கசக்கும்; பின் இனிக்கும். அதுபோல, நல்ல விஷயங்களை, அறிவுரைகளைக் கூறும் போது, அதைக் கேட்க முதலில் தயக்கமாக இருந்தாலும், அதன் விளைவுகள் மகிழ்ச்சியைத் தரும். எனவேதான், இந்த திட்டத்துக்கு நெல்லிக்கனி எனப் பெயரிட்டோம்'’ என்றார் கவிஞர் கவிதாசன்.

பிரபல தன்னம்பிக்கைப் பேச்சாளர், 55-க்கும் மேற்பட்ட சுயமுன்னேற்ற நூல்களையும் 15-க் கும் மேற்பட்ட கவிதை நூல்களையும் எழுதியவர். கோவை மனிதவள மேம்பாட்டு மையத்தின் தலைவர், ரூட்ஸ் குழுமங்களின் இயக்குநர், பட்டிமன்றப் பேச்சாளர் எனப் பல முகங்கள் இருந்தாலும்,  அரசுப் பள்ளி மாணவர்களின் மேம்பாட்டில் மட்டும் தனிக் கவனம் செலுத்துவது ஏன் என்ற கேள்விக்கு,  தயங்காமல் பதில் கூறுகிறார் கவிதாசன்:

கோவை மாவட்டம்  மதுக்கரை வட்டத்தில் உள்ள கந்தேகவுண்டன் சாவடி என்ற சிறிய கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான், படித்ததெல்லாம் அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள்தான். கல்வியும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே என்னை வாழ்வில் முன்னுக்கு கொண்டுவந்தன.

எத்தனையோ அமைப்புகளில் பொறுப்பு வகித்து, பல்வேறு சமூக நலத் திட்டங்களில் இணைந்திருந்தபோதும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பிரத்தியேகமாக ஏதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணம் விடாமல் துரத்திக் கொண்டிருந்தது.

2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்' விருது கிடைத்தபோது, இதற்குப் பிரதிபலனாக தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்

சியை நடத்தலாம் என்ற எண்ணம் தோன்றியது.

தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழிகாட்டவும், தன்னம்பிக்கையூட்டவும் பலர் இருக்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணரவும் அவர்களை நெறிப்படுத்தவும் ‘நெல்லிக்கனி' திட்டத்தை செயல்படுத்தலாம் எனக் கருதினேன்.

2017-ல் நெல்லிக்கனி திட்டத்தைத் தொடங்கி, ஒவ்வொரு பள்ளியாகச் சென்று சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு தன்னம்பிக்கை, சுயமுயற்சி, தோல்வியைக் கண்டு துவளாமை , எப்படிப் படிப்பது, நினைவாற்றல் மேம்பாடு, வாழ்வியல் நெறிகள் குறித்தெல்லாம் விளக்கிப் பேசினேன். அதேபோல, ஆசிரியர்களிடமும் ஒரு மணி நேரம் பேசினேன். எதிர்கால இந்தியாவை உருவாக்கும் மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்கள் கையில்தான். எனவே, மாணவர்களை செம்மைப்படுத்தி, அவர்களது திறமையை வெளிக்கொணரும் வகையில் ஆசிரியர்களின் பணி இருக்க வேண்டுமென விளக்கினேன்.

வெறுமனே அறிவுரை மட்டும் கூறாமல், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு நெல்லிக்கனியை கொடுத்து,  அவர்களை உற்சாகப்படுத்தினோம். மேலும், மாணவர்களிடம் கேள்விகேட்டு, பதில் கூறியவர்களுக்குப் புத்தகங்களையும் பரிசாக வழங்கினோம். இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து, அனைத்துப் பள்ளிகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த கல்வித் துறையிடம் அனுமதி பெற்றோம். இந்த முயற்சிக்கு கோவை ரோட்டரி சங்கத்தினரும் உதவினர்.

உயர்ந்த லட்சியத்தைக் கொண்டு, அதை அடைய பாடுபடுதல், படைப்பாற்றல், அறிவுக்கூர்மை, திட்டமிடுதல், ஈடுபாடு, தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் சார்ந்த பண்புகளை வளர்த்தல் ஆகியவற்றை அரசுப் பள்ளி மாணவர்களிடம் வளர்க்க வேண்டுமென்பதே ‘நெல்லிக்கனி' திட்டத்தின் நோக்கம். இந்த ஓராண்டிலேயே 40-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம். மேலும், 1000 ஆசிரியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். இன்னும் ஓராண்டில் சுமார் ஒரு லட்சம் மாணவர்களிடம் நெல்லிக்கனி நிகழ்ச்சியை நடத்த வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள்.

கோவை மட்டுமின்றி, சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் இந்த நிகழ்ச்சியை நடத்த தயாராக உள்ளோம். அந்தந்த மாவட்டங்களில் உள்ள தன்னார்வ அமைப்புகள் உரிய அனுமதியைப் பெற்றுத்தந்தால், நெல்லிக்கனி நிகழ்ச்சியை நடத்துவோம்.

சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் குழந்தைகள்தான் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர்  பள்ளிப் படிப்பை முடிப்பதே பெரும் சவாலாக இருக்கிறது. அவர்களுக்கு உத்வேகம் அளித்து, அவர்களை சாதனையாளர்களாக மாற்ற வேண்டுமென்ற நெல்லிக்கனி திட்டத்தின் இலக்கை அடைய முழு முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த சில நாட்களில், மாணவர்களிடமிருந்து அஞ்சல் அட்டைகளில் எனக்கு கடிதங்கள் வருகின்றன. அந்த நிகழ்ச்சியால் மாணவர்கள் மனதில் ஏற்பட்ட தாக்கத்தை அந்தக் கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன. இதுவரை சுமார் 5 ஆயிரம் கடிதங்கள் மாணவர்களிடமிருந்து எனக்கு வந்துள்ளன. அவர்களுக்கு, ‘வாழ்வெல்லாம் வெற்றி' என்ற  தன்னம்பிக்கைப் புத்தகத்தை பரிசாக அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறேன். 

குறைந்தபட்சம் சில நூறு மாணவர்களின் வாழ்விலாவது ‘நெல்லிக்கனி திட்டம்'  மாற்றத்தை உண்டாக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்படுகிறோம்  என்று உறுதியுடன் முடித்தார் கவிஞர் கவிதாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x