Published : 26 Jun 2018 09:58 AM
Last Updated : 26 Jun 2018 09:58 AM

பூலோக வைகுண்டமும்.. பூப்பந்தாட்ட கழகமும்..!

பூ

லோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் என்பது நமக்குத் தெரியும். அங்கு பூப்பந்தாட்ட வீரர்களை உருவாக்குவதில் சத்திமில்லாமல் நடந்து வரும் சாதனை குறித்து எத்தனை பேருக்குத் தெரியும். ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள முன்னாள் மாணவர் பூப்பந்தாட்டக் கழகத்துக்குத்தான் மொத்த பெருமையும் சேரும். இந்தக் கழகம் 5 பேரை ரயில்வே பணிக்கு அனுப்பியிருக்கிறது. ஏராளமானோரை விளையாட்டு ஆசிரியர்களாகவும் பயிற்றுநர்களாகவும் அரசு ஊழியர்களாகவும் மாற்றி அழகு பார்க்கிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூப்பந்தாட்டத்தை பள்ளியின் அப்போதைய விளையாட்டு ஆசிரியராக இருந்த ராமசாமி அறிமுகப்படுத்தினார். அடுத்தடுத்து வந்தவர்களும் விளையாட்டை வளர்த்தெடுக்க, இப்போது பள்ளி மைதானத் தில் பூப்பந்தாட்ட களம் அமைக்கப்பட்டு தினமும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பள்ளியின் முன்னாள் மாணவரும் பூப்பந்தாட்ட வீரரும் தற்போது விளையாட்டு ஆசிரியராகவும் உள்ள சண்முகசுந்தரம்தான் இப்போது இந்த கழகத்துக்கும் செயலாளர். அவர் நம்மிடம் பகிர்ந்தது:

பள்ளி நேரத்தில் விரும்பும் மாணவர்களுக்கும் தினமும் காலையிலும் ஏனையோருக்கும் பூப்பந்தாட்டப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பதில்லை. மட்டை, சீருடை இலவசமாக வழங்கப்படுகிறது. மாநில அளவிலான போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்.

எங்களது இந்த பணிக்கு ஸ்ரீரங்கம் கல்வி சங்கத்தின் செயலாளர் எம்.எஸ்.நந்தகுமார், பொருளாளர் கஸ்தூரிரங்கன், உறுப்பினர்கள் ராகவேந்திரன், சத்தியபாமா, தலைமையாசிரியர் வெங்கடேஷ் உள்ளிட் டோர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்.

மேலும், மாணவர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரவும் பணி வாய்ப்புகள் குறித்தும் இங்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. விளையாட்டு ஒதுக்கீட்டில் ரயில்வேயில் பணியில் சேர்ந்த 5 பேர் தற்போது அகில இந்திய அளவில் விளையாடி வருகின்றனர்.

அவர்களில் ஒருவரான சத்தியமூர்த்தி கூறும்போது, “7-ம் வகுப்பு படிக்கும்போது பயிற்சியை தொடங்கினேன். ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் விளையாடினேன். சீனியர் பிரிவில் தமிழக அணிக்காக விளையாடி 3-வது பரிசு பெற்றோம். இதைத் தொடர்ந்து திறமை ஒதுக்கீட்டில் மேற்கு ரயில்வேயில் பணி கிடைத் தது” என்றனர்.

இவரைப் போன்றே இதே பள்ளியில் படித்த பூப்பந்தாட்ட வீரர்கள் கிருபாகரன் மேற்கு ரயில்வேயிலும் விவேக், வசந்தகுமார் தெற்கு ரயில்வேயிலும் விக்னேஷ் சென்னை ஐசிஎஃப்பிலும் பணியாற்றி வருகின்றனர். இந்திய ரயில்வே அணியிலும் இவர்கள் விளையாடி வருகின்றனர்.

படிப்பது என்கிற பொது செயல்பாட்டுடன் விளையாட்டு என்கிற தனித்திறனும் இணைகிற புள்ளியில் ஒவ்வொருவருக்குமான வளமான எதிர்காலம் அமையும் என்ற பாடத்தை புகட்டுகிறது, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன் னாள் மாணவர் பூப்பந்தாட்டக் கழகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x