Last Updated : 17 Jun, 2018 10:49 AM

 

Published : 17 Jun 2018 10:49 AM
Last Updated : 17 Jun 2018 10:49 AM

சிற்பியும்.. சித்த வைத்தியரும்..! - கவரும் சின்னஞ்சிறு சிற்பங்கள்

ல்லில், மரத்தில், களிமண்ணில் என அதன் அதற்கான சிலைகளை வடிவமைக்கும் சிற்பிகள் இருக்கிறார்கள். ஆனால் எந்த பொருள் கிடைத்தாலும் சிற்பமாக வடிவமைப்பதில் வல்லவர்களை பார்ப்பது சொற்பம். அப்படி ஒரு அபூர்வ மனிதர்தான் எம்.கே.செல்வராஜ். கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலை அடுத்த மாத்தூர் கிராமத் தைச் சேர்ந்தவர். தான் நினைத்த உருவத்தை எந்த பொருளைக் கொண்டும் சிற்பமாக செதுக்குவதில் தனித்திறன்மிக்கவர்.

ஒரு சிற்பியாக உருவெடுப்பதற்கு, இவரது மூதாதையர்கள் யாரும் இந்த துறையைச் சேர்ந்தவர்கள் இல்லை. இருந்தாலும், சிற்பங்களை செதுக்குவதில் தனி முத்திரை பதிக்கிறார். ஆளுயர அளவில் சிற்பங்களைச் செதுக்குவதைக் காட்டிலும், குறைந்த உயரத்துடன் கூடிய சிற்பங்களைச் செதுக்குகிறார்.

அரை இஞ்ச் முதல் சில சென்டி மீட்டர் வரையிலான உயரமுள்ள சிற்பங்களை சலவைக் கற்கள், சாக்பீஸ், சிலேட்டுக்குச்சி, பென்சில் முனை, விரலி மஞ்சள், பல் குத்தும் குச்சி, மரக்குச்சிகள் ஆகியவைதான் சிற்பங்களாக வடி வம் பெறுகின்றன. அவை விநாயகர், யானை, முருகன், சாய்பாபா, மோனலிசா, இந்திரா காந்தி, நடனமாடும் பெண்கள் இப்படி ஏராளமான சிற்பங்கள் இவ ரது கைபட்டு உயிர் வந்திருக்கின்றன. அவைகளை பாதுகாத்து வருகிறார்.

செல்வராஜை சந்தித்தோம். “நான் படிக்கும் காலத்திலேயே சாக்பீஸ் உள்ளிட்ட பொருட்களில் எதையா வது சிற்பமாக செதுக்கிக் கொண்டே இருப்பேன். அப்போதிருந்த இந்த ஆர்வம் போகப்போக அதிகரித்தது.

எல்லோரும் சிற்பத்தை பெரிய அளவில் செதுக்கி, வியாபாரம் செய்வார்கள். நான் சிற்பங்களை சிறிய பொருட்களில் செதுக்கி வருகிறேன். இதுவரை அரை இஞ்ச் முதல் 5 செமீ வரையிலான உயரமுடைய 200-க் கும் மேற்பட்ட சிற்பங்களை செதுக்கியுள்ளேன். சில மூலிகை வேர்களும் கூட சிற்பங்களாக மாற்றி இருக்கிறேன்” என்றார் பெருமையுடன்.

சிற்பி மட்டுமல்ல சித்த வைத்தியராகவும் இருக்கிறார் செல்வராஜ். சித்த மருத்துவம் கற்றுள்ள இவர், மூலிகை வேர்களைத் தேடி கோடியக்காடு, கொல்லிமலை, தேக்கடி, பழநி, சிறுவானி உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு அதிகம் செல்கிறார். அங்குள்ள மூலிகை வேர்களைக் கொண்டு வந்து வைத்தியம் செய்கிறார். இந்த சிற்பங்களை கொண்டு விரைவில் ஒரு கண்காட்சி நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்.

கல்லிலே கலைவண்ணம் கண்ட பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் கையில் கிடைத்த பொருளில் எல்லாம் கலை வண்ணம் படைக்கும் செல்வராஜ் பாராட்டுக்குரியவரே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x