Last Updated : 03 May, 2018 07:51 AM

 

Published : 03 May 2018 07:51 AM
Last Updated : 03 May 2018 07:51 AM

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தந்தையின் மது பழக்கத்தால் துயர முடிவு: நெல்லையில் மேம்பாலத்தில் தூக்கிட்டு மாணவர் தற்கொலை; மதுக்கடைகளை மூடக்கோரி முதல்வருக்கு உருக்கமான கடிதம்

மருத்துவம் படிக்க விரும்பி ‘நீட்’ தேர்வுக்கு தயாரான மாணவர் ஒருவர், தந்தையின் மதுப் பழக்கத்தால் திருநெல்வேலியில் ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுக்கடைகளை மூடக் கோரி தமிழக முதல்வருக்கு அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் நேற்று அதிகாலையில் ஓர் இளைஞரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. தலையில் தொப்பி அணிந்திருந்த அவரது தோளில் பை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. பாலத்தின் தடுப்புச் சுவரில் தூக்குக் கயிறு கட்டப்பட்டு இருந்தது.

அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு பாளையங்கோட்டை போலீஸார் விரைந்து சென்று, அந்த இளைஞரின் உடலை கீழே இறக்கினர். அவரது தோளில் கிடந்த பையை சோதனையிட்டதில் ஒரு கடிதமும், ‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் துணிகளும் இருந்தன. அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தவர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கே.ரெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் தினேஷ் நல்லசிவன்(17) என்பதும், தந்தையின் குடிப் பழக்கத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

உருக்கமான கடிதம்

அவர் எழுதியிருந்த கடிதத்தில், “அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்துப் போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கிறதனால எனக்கு கொள்ளி வைக்காதே. மொட்டை போடாதே. ஓப்பனா சொன்னா நீ எனக்கு காரியம் பண்ணாதே. மணி அப்பா (சித்தப்பா) தான் காரியம் பண்ணணும். இதுதான் என் ஆசை. அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும். குடிக்காதே அப்பா இனிமேலாவது. அப்பதான் நான் சாந்தி அடைவேன். இனிமேலாவது தமிழகத்தில் முதலமைச்சர் டாஸ்மாக் கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்” என எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷ் தற்கொலை செய்தது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள், திருநெல்வேலிக்கு விரைந்து வந்து, அவரது உடலைப் பார்த்து கதறினர். கண்ணீருடன் அவர்கள் கூறியதாவது:

போதையில் தந்தை தகராறு

தினேஷின் தந்தை மாடசாமிக்கு 2 மனைவிகள். முதல் மனைவி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் தினேஷ் மூத்த மகன் ஆவார். 2-வது மனைவிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

விவசாயம் செய்து வரும் மாடசாமி கூலி வேலைக்கும் செல்வார். குடிப்பழக்கம் உள்ள அவர் அடிக்கடி போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்வது வழக்கம். குடும்பத்தை கவனிக்காமல் பலரிடம் கடன் வாங்கி மது அருந்தி வந்தார். அவரது அண்ணன், தம்பி இருவரும் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றனர். மாடசாமி வாங்கிய கடனை அவரது சகோதரர்கள்தான் திருப்பி செலுத்தி உள்ளனர்.

464 மதிப்பெண்கள்

தினேஷை மதுரையில் உள்ள அவரது சித்தப்பாதான் படிக்க வைத்தார். எஸ்எஸ்எல்சி வரை மதுரையில் தனது அத்தை நடத்தி வரும் பள்ளியில் அவர் படித்தார். விடுமுறையில் மட்டும் சொந்த ஊருக்கு அவர் வந்து செல்வது வழக்கம். எஸ்எஸ்எல்சியில் 464 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். zதொடர்ந்து, மேல்நிலைக் கல்வியை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார்.

டீக்கடையில் வேலை

இதன் பிறகு விடுமுறையில் அவர் ஊருக்கு வரவில்லை. தனது தம்பியை தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், சென்னையில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்ப்பதாகக் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அறிந்ததும் அங்கிருந்து தினேஷை நாங்கள் ஊருக்கு அழைத்து வந்தோம். கடந்த 30-ம் தேதி ஊருக்கு வந்த அவரிடம் இருந்து வேலை செய்து சம்பாதித்த பணத்தையும் பிடுங்கி மாடசாமி மது குடித்துள்ளார். அப்போது தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் மாடசாமி கேரளாவுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்.

கடந்த 1-ம் தேதி கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளத்தில் உள்ள பெரியம்மா வீட்டுக்கும், பதிநாலாம்பேரியில் உள்ள தாய்மாமா வீட்டுக்கும் செல்வதாக எங்களிடம் தினேஷ் கூறிவிட்டுச் சென்றார். ஆனால், தந்தையின் மதுப் பழக்கத்தால் வேதனையில் இருந்த அவர், திருநெல்வேலி வந்து தூக்கு போட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

நன்கு படிக்கும் மாணவரான தினேஷ் மருத்துவம் படிக்க விரும்பி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். வறுமை ஒருபுறம், போராட்டமான குடும்பச் சூழல் மறுபுறம் என நெருக்கடிக்கு மத்தியிலும் நீட் தேர்வை திறம்பட எழுதுவதற்காக அவர் தன்னை தயார் செய்து வந்தார். வரும் 6-ம் தேதி நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் இப்படி ஒரு விபரீத முடிவை அவர் தேடிக் கொண்டுள்ளார். தந்தையின் மதுப் பழக்கம் மருத்துவராகத் துடித்த மாணவரின் கனவை சிதைத்து, அவரது உயிரைப் பறித்துள்ளது. மதுவால் பல குடும்பங்கள் சீரழிகின்றன. இனியாவது இதற்குத் தீர்வு காண வேண்டும்” என்று அவர்கள் ஆதங்கத்துடன் கூறினர்.

இறுதிச் சடங்கு

இதற்கிடையே, மாணவர் தினேஷ் நல்லசிவன் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது சொந்த ஊரில் நேற்று மாலை உடல் தகனம் செய்யப்பட்டது. மாணவரின் தந்தை மாடசாமி இறுதி சடங்குகளைச் செய்தார்.

இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, “தனது தந்தை காரியம் செய்யக்கூடாது என்று தினேஷ் கடிதம் எழுத்தி வைத்திருந்தார். இருப்பினும் முறைப்படி இறுதி சடங்கை செய்ய வேண்டியது எங்கள் கடமை. அதனால், தினேஷின் தந்தை மாடசாமி முறைப்படி இறுதி சடங்கை செய்தார்” என்றனர்.

வைகோ வேதனை

இதுகுறித்து, திருச்சியில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களை டாஸ்மாக் அழித்துக் கொண்டுள்ளது. மதுவை எதிர்த்து, வாழ்ந்து போராட வேண்டும். தற்கொலை செய்துகொள்ளக்கூடாது. மாணவரின் மரணத்துக்குப் பிறகாவது மதுக்கடைகளை மூட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என்றார்.

தமிழிசை கடும் எச்சரிக்கை

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “இந்த மரணம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. தினேஷின் மரணம் தமிழகம் பூரண மதுவிலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்கு ஓர் எச்சரிக்கை மணியாகவே அமைந்திருக்கிறது என்றார். பின்னர், கே.ரெட்டியப்பட்டிக்குச் சென்று அவர், தினேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

டைரியில் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ என எழுதினார்

தற்கொலை செய்து கொண்ட மாணவர் தினேஷ், மருத்துவராகும் வேட்கை தணியாமலிருக்க தான் வைத்திருந்த பாக்கெட் டைரியில் தனது பெயருக்கு முன்னால் ‘டாக்டர் தினேஷ் நல்லசிவன், எம்பிபிஎஸ், எம்டி’ என எழுதி வைத்திருந்தார்.

மருத்துவராக வேண்டும் என்பதற்காக கடும் வேட்கையுடன் அவர் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். ஆனால், தந்தையின் மதுப் பழக்கத்தால் மருத்துவராகும் அவரது கனவு நிறைவேறாமல் போய்விட்டது.

தற்கொலை செய்வதற்கு முன் தினேஷ் தனது செல்போனை கல்லால் உடைத்து நொறுக்கியுள்ளார். பின்னர் அதை ஒரு பாலித்தீன் பையில் போட்டு, தோள் பைக்குள் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மனநலத்துறை உதவி பேராசிரியர் ஆ.காட்சன் கூறும்போது, “சமூகத்தில் தற்போது 75 சதவீதம் தற்கொலைக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ குடிப்பழக்கம் காரணமாக இருப்பதாக எனது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களைப் பொறுத்தவரையில் தற்கொலை முடிவு என்பது குடிபோதையில் எடுக்கும் முடிவாகவோ அல்லது குடிப்பதைக் கண்டிப்பதால் எடுக்கும் முடிவாகவோ இருக்கிறது.

அதேநேரத்தில் பெண்களைப் பொறுத்தவரையில் குடிகார கணவர், சகோதரர், மகன் ஆகியோரால் தற்கொலை முடிவுக்கு வந்து விடுகிறார்கள். குடிப்பழக்கம் தனிநபரை, குடும்பத்தை மட்டுமல்ல இந்த சமூகத்தையும் நேரடியாக பாதிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x