Published : 20 Feb 2018 08:02 AM
Last Updated : 20 Feb 2018 08:02 AM

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம்:சொந்த ஊரான பரமக்குடி மக்கள் உற்சாகம்

தமிழகத்தில் பிற நகரங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு பரமக்குடிக்கு உண்டு. அது என்னவென்றால், அரசியல் விழிப்புணர்வு அதிகம் பெற்ற தனித்துவமான நகரமாக பரமக்குடி உள்ளது. இன்று ஓர் அரசியல் கட்சி, டெல்லியிலோ, சென்னையிலோ உருவாக்கப்படுகிறது என்றால், ஓரிரு நாட்களிலேயே அதன் கிளை பரமக்குடியில் முளைத்து விடும். பரமக்குடி இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் பல வீரர்களை அளித்துள்ளது. அதன் நீட்சியாக, சுதந்திர இந்தியாவிலும் மக்கள் நலனை மையப்படுத்தி அடிக்கடி போராட்டம் காணும் பூமியாகத்தான் பரமக்குடி தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இத்தகைய தனித்துவம் வாய்ந்த நகரில் பிறந்தவர் நடிகர் கமல்ஹாசன். கமலின் தந்தை டி.சீனிவாசன், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். சிறந்த குற்றவியல் வழக்கறிஞரும்கூட. பரமக்குடி மக்களின் முன்னேற்றப் பணிகளில் அன்றைய உள்ளூர் ஆளுமையான மா.முத்துச்சாமி, எஸ்.கே.பிச்சை, ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து செயலாற்றியதால் கமலின் தந்தைக்கு தனி செல்வாக்கு உண்டு.

1970-ம் ஆண்டுகளில் கமலின் தந்தை சீனிவாசன், தனது நண்பர்களுடன் இணைந்து இந்தோ சோவியத் கலாச்சார கழகத்தை உருவாக்கி பலப்படுத்தியவர். கமலின் மூத்த சகோதரர்களான சாருஹாசன், சந்திரஹாசன் ஆகிய இருவரும் சிறந்த வழக்கறிஞர்களே. கமலின் தந்தையார் மறைவுக்குப் பிறகு, அவரது நினைவாக பரமக்குடியில் வைகை நதிக்கரைக்கு தெற்கே மேலச்சத்திரத்தில் தனது பூர்வீக நிலத்தில், சீனிவாசன் நினைவு தொடக்கப்பள்ளியைக் கட்டி 30.07.1995-ல் அரசுக்கு தானமாக வழங்கினார். இன்று இப்பள்ளி பரமக்குடி நகராட்சி நிர்வாகத்தின்கீழ் இயங்கி வருகிறது.

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து, அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மக்களின் கருத்துகள்.

ந.சேகரன், சமூக ஆர்வலர்

எம்ஜிஆர் எவ்வாறு தமது முற்போக்கு எண்ணங்களை தமது படங்களில் புகுத்தினாரோ, அதே பாணியில் கமலின் நோக்கங்களை அவரது படங்களில் காணலாம். கமல்ஹாசனின் பேச்சுகளில் தெளிவு, தீர்க்கப் பார்வை இருக்கும். வருமான வரியை ஒழுங்காகச் செலுத்துபவர் என்று அத்துறை அளித்த சான்றிதழையும் மக்கள் நல்ல அடையாளமாகவே காண்கின்றனர். கமல் தனது அரசியல் பிரவேசத்தை மக்கள் ஜனாதிபதியான அப்துல் கலாம் பிறப்பிடத்தில் இருந்து தொடங்குவது நல்ல அறிகுறி.

கே. அபினா, கல்லூரி மாணவி

பாமர மக்களின் வாழ்வை முன்னேற்றும் வகையிலும், அரசு துறைகளில் ஊழலை அகற்றும் வகையிலும் கமலின் அரசியல் இருக்க வேண்டும். அரசியலில் இளைஞர்களை அதிக அளவில் ஈடுபடச் செய்ய வேண்டும் என்பது கலாமின் கனவாக இருந்தது. கமலும் தனது கட்சியில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

முருகன், கார் ஓட்டுநர்

கமல் அரசியலுக்குள் நுழைந்ததும் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். தேர்தலில் குறைந்த இடம் கிடைத்தாலோ அல்லது தான் தேர்தலில் தோற்க நேர்ந்தால்கூட பின்வாங்கி, மீண்டும் நடிக்கச் சென்று விடக்கூடாது. தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும்.

ராஜா, பால் முகவர்

கமல்ஹாசன் மட்டும் நேர்மையாக இருந்தால் போதாது. அவரால் முன்னிலைப்படுத்தப்படும் அவர்களின் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களும் நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும். இது சாத்தியமானால் கமலின் கனவும் நிறைவேறும்.

கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவதை அவரது சொந்த ஊரான பரமக்குடி வாழ் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பதில் ஆச்சர்யம் இல்லை என்றாலும், பிற அரசியல் கட்சிகளின் தீவிர செயற்பாட்டாளர்கள்கூட, அவரது வருகையை ஒருவித நேர்மறை எண்ணத்துடனேயே வரவேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x