Last Updated : 16 Feb, 2018 09:07 AM

 

Published : 16 Feb 2018 09:07 AM
Last Updated : 16 Feb 2018 09:07 AM

என்எல்சி புதிய மின் நிலையம் அமைக்க கிராமத்தினர் கடும் எதிர்ப்பு: வீடு, நிலங்களை என்எல்சி நிறுவனத்திற்கு அளித்த மக்கள் சரமாரி குற்றச்சாட்டு

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாம் அனல் மின் நிலைய இரண்டாம் விரிவாக்கம் அமைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொது மக்கள் கலந்தாய்வு கூட்டம் , என்எல்சி சமுதாயக் கூடத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமை தாங்கினார். மாசு கட்டுப்பாடு வாரிய பொறியளர் ராமசுப்பு, கடலூர் சப்- கலெக்டர் டாம்வர்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதலில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராமசுப்பு பேசும் போது, “புதிதாக அமைய உள்ள அனல் மின் நிலையத்தில் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது’’ என்றார்.

தொடர்ந்து அனல் மின் நிலையம் அமைய உள்ள முதனை, கூனங்குறிச்சி, ஊத்தங்கால் உள்ளிட்ட கிராம மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:

பெரியசாமி, காட்டுக்கூடலூர்

என்எல்சி நிறுவனம் இதுவரையில் நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு எதுவும் செய்யவில்லை.

நாங்கள் எங்களது நிலம், வீட்டை கொடுத்துவிட்டு ஒப்பந்த தொழிலாளிகளாக பணியாற்றி வருகிறோம்.

அதுவும் இப்போது பெரிய,பெரிய தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு ‘அவுட் சோர்சிங்’ முறையில் அவர்கள் வெளி மாநில தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கி வருகின்றனர்.

என்எல்சியால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு எவ்வித பலனும் இல்லை, நாங்கள் கொத்தடிமை போல் வாழ்ந்து வருகிறோம்.

எங்களுக்கு என்எல்சி மருத்துவமனையில் கூட மருத்துவ வசதி இல்லை. என்எல்சி நிறுவனம் நடத்தும் பள்ளிகளில் கூட எங்கள் பிள்ளைகளுக்கு இடம் இல்லை, அப்படி இடம் கிடைத்தாலும் கல்விக் கட்டணம் அதிகமாக கட்ட வேண்டிய நிலை உள்ளது.

இப்படி சரமாரியாக அவர் தனது குற்றச்சாட்டுகளை கூறவும், அதிகாரிகள் அவரிடம் இருந் து மைக்கை வாங்க முற்பட்டனர். உடன் பொது மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ‘அவர் பேச வேண்டும்’ எனக் கூச்சலிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வநேரே தலையிட்டு சமாதானப்படுத்தினார்.

செல்வராஜ், முதனை

கடந்த 30 ஆண்டுகளாக என்எல்சி நிறுவனத்தில் வீடு, நிலம் கொடுத்தவர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலை, நிலத்திற்கு உரிய தொகை என எதற்கொடுத்தாலும் போராட்டம் நடத்தி, நடத்தி 30 ஆண்டுகள் எங்கள் வாழ்க்கை போராட்டத்திலேயே சென்று விட்டது.

என்எல்சி நிறுவனமும் வளர வேண்டும், அதனுடன் சேர்ந்து சுற்றியுள்ள கிராம மக்களும் வளர வேண்டும் என்று தான் நாங்கள் சொல்கிறோம்.

என்எல்சி நிறுவனம் ஈட்டும் லாபத்தில் இப்பகுதியில் உள்ள சுற்றுப்புற கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வட மாநிலங்களுக்கும், புதுச்சேரியில் உள்ள ஆரோவில் போன்ற பகுதிகளுக்கு வசதிகளை செய்து வருகிறது. நாங்கள் குடிநீர், சாலை வசதி என எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம்.

என்எல்சி நிறுவனம் எங்கள் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதை வரவேற்கிறோம். ஆனால் எங்கள் பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சுற்றுப்புற சூழல் மாசு ஏற்படாமல் பாதுகாப்பாக அமைக்கப்பட வேண்டும். எங்கள் கிராமத்தில் நிலம் வீடு கொடுத்தவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு, தகுதியான படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். மேற்கண்ட எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

நாங்கள் இதற்கு என்எல்சியை நம்பவில்லை. மாவட்ட ஆட்சியர் உறுதி கொடுத்தால் மட்டுமே நாங்கள் எங்கள் பகுதியில் அனல் மின் நிலையம் அமைய ஒத்துழைப்போம்.

அசோக்குமார். ஊத்தங்கால்.

என்எல்சி நிறுவனம் இதுவரை சொல்லியது எதையும் செய்தது இல்லை. அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் மாசுகளால் எங்கள் பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலருக்கு நுறையீரல் பாதிப்பு உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் கரித்துகள்கள் படித்து மாசு ஏற்பட்டு வருகின்றன.

நாங்கள் இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் இதுவரை எவ்விதான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது மாவட்ட ஆட்சியர் ஏற்பாட்டின்படி இந்த கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. மாவட்ட ஆட்சியர் முறையாக நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதி மக்களுக்கு உரிய வேலை வாய்ப்பு, உரிய இழப்பீடு, சுகாதாரம், மருத்துவ வசதி போன்றவற்றை செய்து தர வேண்டும்.

வெங்கடேசன், கார்மாங்குடி

சமூக பொறுப்புணர்வு நிதி என்எல்சிக்கு சம்பந்தமில்லாத பகுதிகளில் செலவு செய்யப்படுகிறது. விருத்தாசலம் மணிமுக்தாற்றை சுத்தப்படுத்த ரூ 5 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இங்கு பாலத்தின் கீழ் இருந்த முட்புதர்கள் மட்டுமே அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. என்எல்சி புதிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் போது மாவட்ட நிர்வாகம் ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

நமது குறைகளை சொல்லும் போது அவற்றை கேட்டு நடவடிக்கை எடுக்கும் நல்ல மாவட்ட ஆட்சியர் கிடைத்துள்ளார்.

என்எல்சி நிர்வாகம் நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் அனல் மின் நிலையம் அமைக்க அனுமதிக்க மாட்டோம். பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அங்குள்ள அனைத்து பொது மக்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

ஆட்சியர் உறுதிமொழி

இறுதியாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே பேசுகையில், “உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானது. என்எல்சி நிறுவனம் இப்பகுதி மக்களுக்கு உரிய வேலை வாய்ப்பு, அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளது.

இதனை நம்புவோம்.

நான் உங்களுடன் இருந்து. உங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன்’’ என உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x