Published : 12 Feb 2018 11:35 AM
Last Updated : 12 Feb 2018 11:35 AM

படுக மொழி..!பாடல்களே வேலி..!

சின்னத கொடே ஹிடித்து,

சிங்கார நடே நடுது பெத்து

தடிய ஹெகுலுக எத்தி..ஹெத்தே

நீ சத்தியத வாக்க ஹேகி,

சந்தோஷத மாத்த தோரி

சீமெக சிரி தோர பா..

சீமெக சிரி தோர பா...”

இது ஒரு படுக மொழிப் பாடல். படுக மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. இருப்பினும் இதுபோன்ற ஓராயிரம் படுக பாடல்கள் நீலகிரி மலைகளில் பட்டு எதிரொலிக்கின்றன.

நீலகிரி மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க மக்கள் கூட்டமான படுகர் இனம், தனித்துவமான பல கலாச்சார கூறுகளைக் கொண்டது. அதில் ஒன்று அவர்களின் பாரம்பரிய இசை. சுப மற்றும் துக்க காரியங்களில் அவர்களது ஆடல், பாடல்கள் கண்டிப்பாக இடம் பெறும். அவர்களது பாரம்பரிய இசை மருவி தற்போதைய இன்னிசை வடிவம் பெற்றுள்ளது. இந்த இன்னிசை அந்த மக்களின் முக்கிய அங்கமாகி விட்டது. இதனால் படுக பாடல்கள் மிகவும் பிரபலம்.

இதனால், படுகர் இன மக்கள் மத்தியில் படுக மொழி பாடல்கள் தயாரிப்பு தொழிலாக மாறிவிட்டது. பலர் தற்போது படுகர் மொழி ஆல்பங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். அம்மக்கள் இதை விரும்புவதால் படுகர் மொழி பாடல்களின் வளர்ச்சி விஸ்வரூப வளர்ச்சியை எட்டியுள்ளது.

பாடல் ஆல்பங்கள் தயாரிப்பாளர்கள், பாடல்களின் தரத்தை மெருகேற்ற உள்ளூர் இசைக் கலைஞர்கள் மட்டுமல்லாமல் திரையிசை கலைஞர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வரிசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சங்கர் மகாதேவன், அனுராதா ஸ்ரீராம், சுவர்ணலதா, சித்ரா, மாணிக்க விநாயகம் ஆகியோர் படுக பாடல்களை பாடியுள்ளனர்.

இந்த பாடல்களின் வளர்ச்சியால் எங்கள் மொழி அழியாமல் பாதுகாக்கப்படுகிறது என்கிறார் படுகர் கலாச்சார மைய நிர்வாக அறங்காவலர் வி.மோகன். அவர் மேலும் நம்மிடம் கூறியது: படுக மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. பேச்சு வழக்கிலேயே உள்ள மொழியை பாடல்கள் தான் காப்பாற்றி வருகின்றன. 100 ஆண்டுகளாக படகர் கிராமங்களில் பண்டிகை காலங்களில் நாடகங்கள் இடம் பெறும்.

முதலில் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை அரங்கேற்றி வந்தவர்கள், பின்னர் படுக மொழியில் சமுதாய நாடகங்களை அரங்கேற்றினர். இதற்காக பாடல்களை உருவாக்கினர். இவற்றைப் பதிவு செய்து விழாக்களில் ஒலிபரப்ப முயற்சி எடுத்தனர். இதற்கு பலனாக 1989-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த படுக சங்கத்தினர் கேசட்களை அறிமுகப்படுத்தினர்.

இதை அடுத்து கல்லூரி மாணவர்கள் கோவையில் நான்கு பாடல்கள் கேசட்களை வெளியிட்டனர். இதற்கு வரவேற்பு கிடைக்கவே சோலூர் ராமன், சாந்தி தேசிங்கு, நடிகை சாய் பல்லவியின் தாய் ராதா ஆகியோர் பாடல்களை வெளியிட முனைப்பு காட்டினர். இந்த பாடல்களுக்கு சினிமா பாடல்கள் போன்ற ஈர்ப்பு இருந்ததால் வேகமாக வளர்ந்து, படுக பாடல்கள் தயாரிப்பதை பலர் தொழிலாக கையிலெடுத்தனர். இதுவரை 100 ஆல்பங்கள் வெளியிடப்பட்டிருக்கும்.

இந்த பாடல்கள் பலனாக படுகர் இனத்தைச் சேர்ந்த தாம்பட்டி பெள்ளிராஜ் பின்னணி பாடகராக உருவாகினார். உதயதேவன் சென்சார் போர்டு உறுப்பினரானார். சாய் பல்லவி திரையுலகில் நுழைந்தார். தற்போது, அகில இந்திய வானொலியின் ஊட்டி எஃப் எம்யில் படுக பாடல்கள் ஒலிபரப்படுகின்றன என்றார்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் கேசட்கள் காணாமல் போல, படுக பாடல்கள் சிடி மற்றும் டிவிடிகளாக வடிவம் எடுத் துள்ளன.

இவற்றை விற்பனை செய்ய பாடல் தயாரிப்பாளர்கள் மாவட்டத்தில் உள்ள 300 படுகர் இன கிராமங்களுக்குச் சென்று அம்மக்களிடம் விற்பனை செய்கின்றனர்.

படுக பாடல் தயாரிப்பாளரான குன்னூரைச் சேர்ந்த நஞ்சுண்டன் பாடல்கள் தயாரிப்பு குறித்து விவரித்ததாவது:

பஜனை பாடல்கள் மூலம் தொடங்கியதுதான் படுக பாடல்களின் வளர்ச்சி. பின்னர் சோகப் பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இளைஞர்கள் படித்து, இசை குறித்து அறிந்த பின்னர் சினிமா திரைப்பாடல்களை போல ஜோடி பாடல்களை பதிவு செய்யத் தொடங்கினர். ஆண்டுக்கு 10 புதிய பாடல்கள் ஆல்பங்கள் தயாரிக்கப்படுகின்றன.

சென்னையில் தான் ஒலிப்பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சிடி, டிவிடி வந்து விட்டதால், கோவை, பாலக்காடு, உதகை மற்றும் குன்னூரிலேயே ஒலிப்பதிவு செய்கிறோம். எங்களது சந்தை ஹெத்தையம்மன் பண்டிகை காலம் தான். அப்போது தான் மக்கள் கிராமங்களில் ஒன்று கூடுவார்கள். படுக மக்களுக்கு தங்கள் தாய்மொழியில் பாடல்கள் கிடைப்பது ஆத்மதிருப்தி. பண்டிகை இல்லாத காலங்களில் கிராமங்கள் தோறும் சென்று சிடிக்களை விற்பனை செய்கிறோம் என்றார்.

எழுத்து வடிவமே இல்லாத ஒரு மூத்த மொழியின் ஜீவன் அதன் பாடல்களில்தான் இருப்பதால் படுக மொழி சாகாவரம் பெற்றதாகிவிட்டது. சுருங்கச் சொன்னால் படுக மொழிக்கு பாடல்களே வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x