Last Updated : 30 Jan, 2018 10:31 AM

 

Published : 30 Jan 2018 10:31 AM
Last Updated : 30 Jan 2018 10:31 AM

மார்கழிச் சங்கு மரபை மறக்காத மடப்புரம் துரைராஜ்

மா

ர்கழி மாதத்தில் வரும் இரவுகள் சங்கொலி கேட்காமல் விடிந்ததில்லை. மார்கழிச் சங்கு வழக் கொழிந்து போனதால் அதைப்பற்றி இன்று பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது ஒரு காலம்.

கிராமத்து ஓட்டுவீட்டில் மார்கழிப் பனியில் போர்வைக்குள் முடங்கி ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது சில சமயம் நடுநிசியிலும், சில நேரம் அதிகாலையிலும் கேட்கும் அந்த சங்கொலியும் அதைத் தொடர்ந்து வரும் மணியோசையும் சிறு வயதில் பயத்தை கொடுக்கும். பின்னர் அதுவே ஒருவித அமானுஷ்யத்தை ஏற்படுத்தியது.

இப்படித்தான் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவயதினராக இருந்த பலருக்கு மார்கழிச் சங்கு அறிமுகமாகி இருக்கும். மார்கழி மாதத்தில் நடக்கும் அதிகாலை பஜனைக்கு மக்களை துயிலெழச் செய்யவே இந்த சங்கநாதம் இசைக்கப்பட்டது என பிரிதொரு நாளில் தெரியவந்தது.

சங்கொலியை எழுப்புவதற்காகவே ஓவ்வொரு பகுதியிலும் அதற்கென ஆட்கள் இருந்தனர். மார்கழி மாதம் முழுவதும் அவர்களுக்கான பணி இதுதான். பின்னர் வரும் பொங்கலன்று பச்சரிசி உள்ளிட்ட பொருட்களை சங்கு ஊதிகளுக்கு மக்கள் வழங்குவார்கள். அறுவடை நெல்லும் வழங்குவதுண்டு.

மார்கழி மாத்தில் ஒலித்த சங்கு கால மாற்றத்தால் ஒழிந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட நாகை மாட்டத்தின் பல பகுதிகளில் சங்குகள் ஒலித்து வந்தன. தற்போது மார்கழி இரவுகள் நிசப்தமுடன் கழிகின்றன. சங்குகளும் இல்லை.., சங்கு ஊதிகளும் இல்லை.

இப்படியான நிலையில்தான் பெரிய மடப்புரம் துரைராஜ் இன்றும் பாரம்பரியத்தை கைவிடாமல் மார்கழிச் சங்கை ஊதிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சில நாட்கள் முன்பு கடந்து போன மார்கழி மாதத்தில் கூட சங்கு முழங்கியிருக்கிறது.

தொன்று தொட்ட பாரம்பரியத்தை இன்றளவும் தோளில் சுமந்துள்ள அந்த பெரியவருக்கு 90 வயதுக்கு மேல் இருக்கும். செம்பனார்கோவில் அருகேயுள்ள முக்கரும்பூர் பெரிய மடப்புரம் கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் மனைவி தனலட்சுமியுடன் வசித்து வருகிறார். நாம் சங்கு ஊதியை சந்தித்தோம். . “என்னுடைய அப்பா பெயர் ஆழ்வார். மார்கழி மாதத்தில் அப்பா சங்கு ஊத போகும்போது சின்ன வயசிலேர்ந்து நானும் அவர் கூடவே போவேன். அப்புறம் அப்பாவுக்கு பிறகு நான் இந்த வேலையை செய்ய ஆரம்பிச்சேன். எத்தனை வயசிலேர்ந்து செய்ய ஆரம்பிச்சேன்னு எனக்கே தெரியாது. இப்போ எனக்கு எத்தனை வயசு ஆகுதுன்னும் தெரியாது. உத்தேசமா 90 வயசுக்கு மேல இருக்கும்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். இம்மாதத்தில் மக்களை நோய், நொடிகள், பேய் பிசாசுகள் அண்டும் என மக்கள் அப்போது பயந்தார்கள். காலரா நோய், கடுமையான பஞ்சம் வந்தப்பல்லாம் அந்த பயம் அதிகமாக இருந்தது. இந்த சங்கு ஊதுவதால் பேய், பிசாசுகள், நோய்கள் அண்டாது என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது.

நாதத்தில் ஓங்கிய நாதம் சங்கநாதம். மிக பலம் பொருந்திய நாதம் இது. அதனால்தான் சங்கொலி எழுப்பப்படுது. நம்மால முடியிற வரைக்கும் செய்யணும்ங்கிற உறுதியோட விடாம இந்த வேலையை செஞ்சிக்கிட்டு இருக்கேன்.

மார்கழி மாதத்துல 30 நாளும் சுற்று வட்டாரத்தில் உள்ள மாத்தூர், முக்கரும்பூர், மடப்புரம், ஆக்கூர் உள்ளிட்ட கிரமங்களுக்கு போய் சங்கு ஊதிட்டு வருவேன். முதல் நாள் மாலையே வீட்டிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை வரை இதைச் செய்வேன். பல இடங்களில் இந்த சங்கின் ஓசை மறைந்துவிட்டது” என வேதனைப்பட்ட துரைராஜ் மிகவும் துயரப்படும் விஷயம் “எனக்கு அப்புறம் இந்த வேலையை செய்ய யாருமில்லை” என்பதுதான்.

நாடகக் கலைஞரும் கூட

சங்கை ஊதிக் கொண்டு, சேமங்கலம் என்ற வட்ட வடிவ பித்தளை தட்டில் மணியோசை போல தட்டிக்கொண்டு செல்லும் இவரை தெரியாதவர்கள் இல்லை.

ஆக்கூரைச் சேர்ந்த கே.கார்த்திகேயன் கூறும்போது, “மார்கழி மாதம் 30 நாட்களும் கடும் பனி, குளிரையும் பொருட்படுத்தாமல் தனது வீட்டிலிருந்து பல கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கு பெரியவர் துரைராஜ் நடந்தே செல்வார். பகல் பொழுதில் இவர் சைக்கிளில் சுற்றி வருவதை பார்க்கலாம். எனக்குத் தெரிந்து சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வேலையை விடாமல் செய்து கொண்டிருக்கிறார். இவர் சிறந்த நாடகக் கலைஞரும் கூட. ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதியில் இவரது மிக அபாரமான ஆஞ்சநேயர் வேட நடிப்பால் அந்தக் காலத்தில் எல்லோராலும் அறியப்பட்டவர்” என்றார்.

நீங்க நாடகக் கலைஞராமே எனக் கேட்டபோது, பல நாடகக் கம்பெனிகளில் பணியாற்றி இருப்பதாகவும் தஞ்சாவூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆஞ்சநேயர் வேடமிட்டு நடித்துள்ளதையும் நினைவு கூர்கிறார்.

அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்பதால் இரவு நேரத்திலேயே புறப்பட்டு சென்று சங்கு ஊதத் தொடங்கி விடுவதால் சிலப் பகுதிகளில் நள்ளிரவிலும், சில பகுதிகளில் அதிகாலை நேரத்திலும் சங்கநாதம் கேட்கும். அதனால்தான் “நீ ஊதுற சங்கை ஊது, நான் எழுந்திரிக்கிறப்போ எழுந்திரிக்கிறேன்” என்ற வழக்கு மொழி பிறந்ததாக கூறுவதுண்டு.

காலில் செருப்பு இல்லாமல் சென்றுதான் சங்கு ஊத வேண்டுமாம். அதனால் இவர் சங்கு ஊதும் நாட்களில் செருப்பு அணிவதில்லை. பயத்தைப் போக்கும் நோக்கிலும், தீயன அண்டாது என்ற நம்பிக்கையிலும் இவரிடம் பலர் விபூதி வாங்கிப் பூசிக்கொள்வது வழக்கமாக இருக்கிறது.

ஒரு தலைமுறையே அறிந்திராத ஒரு வழக்கத்தை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்துவரும் சங்கு ஊதி துரைராஜின் சேவை, தொன்றுதொட்ட நமது பாரம்பரியத்தை அழிந்துபோகாமல் தன் உயிர் உள்ளவரை தக்க வைக்க வேண்டும் என வேட்கையாகவே தெரிகிறது. தொடரட்டும் துரைாஜின் பணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x