Last Updated : 23 Jan, 2018 10:55 AM

 

Published : 23 Jan 2018 10:55 AM
Last Updated : 23 Jan 2018 10:55 AM

என் தங்கம்.. என் கடமை: சின்னூண்டு தங்கத்தின் பெரிய விழிப்புணர்வு

ங்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை விளம்பரங்களில் பார்த்திருப்போம். தங்கத்தால் விழிப்புணர்வு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதைத்தான் செய்து வருகிறார் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த நகை தொழிலாளி ஏ.பால முருகன்.

சிறிய நகைப் பட்டறை வைத்து தொழில் செய்யும் இவர், தினக்கூலி அடிப்படையில் கடைகளுக்கு நகை செய்து கொடுக்கிறார். நகை தொழிலில் இயந்திரங்கள் புகுந்துவிட்டதால், கைத்தொழிலாளர்களுக்கு அன்றாடம் வருவாய் கிடைப்பதே சிரமமாக உள்ளது. ஆனாலும், பாரம்பரியத் தொழிலை விடக்கூடாது என்பதால் இப்பணியை செய்கிறார். வேலை நேரம் முடிந்த பிறகு, டெங்கு கொசு ஒழிப்பு, தூய்மை இந்தியா திட்டம், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுதலின் அவசியம், ஜல்லிக்கட்டு நம் பாரம்பரியம் என பல்வேறு விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 150 மி.கி. தங்கத்தில் சிற்பங்களைச் செய்து வருகிறார்.

விழிப்புணர்வுக்காக காந்தி கண்ணாடி, அசோக சக்கரம், துடைப்பம், குப்பைக் கூடை என விதவிதமான சிற்பங்களை செய்து வைத்துள்ளார். தன் கடைக்கு வருபவர்களிடம் இவற்றைக் காண்பித்து, சுற்றுப்புறத்தில் குப்பைகள் தேங்காமல் பாதுகாப்போம் என தூய்மை இந்தியா திட்டம் குறித்து பேசத் தொடங்குகிறார். இருசக்கர வாகனத்தில் யாராவது கடைக்கு வந்தால், உடனே தங்க ஹெல்மெட்டை அவர்களிடம் காட்டி, ‘ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுங்கண்ணே..’ என அக்கறையோடு வலியுறுத்துகிறார்.

‘‘தாத்தா சுப்பையன் ஆசாரி காலத்தில் இருந்து நகை செய்கிறோம். தற்போது நானும், அண்ணன் செந்தில்முருகனும் 3-வது தலைமுறையாக இத்தொழிலை செய்து வருகிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் பெரிய அளவிலான கடைகள் நிறைய வந்துவிட்டன. அதனால், சிறிய பட்டறை வைத்திருப்பவர்களுக்கு சொற்ப அளவில்தான் வேலை வருகிறது. தினமும் ரூ.400 கிடைப்பதே சிரமமாக உள்ளது.

குட்டி உலக கோப்பை

நகை செய்வது ஒரு கலை. சமூகத்துக்குப் பலன் தரும் வகையில், அதைப் பயன்படுத்த வேண்டும் என் பது என் விருப்பம். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தபோது, அதன் கோப்பை வடிவத்தை 200 மி.கி. தங்கம் மற்றும் ஒன்றரை கிராம் வெள்ளியைக் கொண்டு உருவாக்கினேன். பலரும் அதை ஆச்சரியத்துடன் பார்த்து, என்னைப் பாராட்டினர்.

ரசிகர்கள் பலர் இதை விலைக்கு கேட்டனர். ஆனால், இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இதைச் செய்தேன் என்று கூறி, விற்பனைக்கு மறுத்துவிட்டேன்.

700 மி.கி. தங்கம் மற்றும் கருப்பு எனாமலை பயன்படுத்தி ஹெல்மெட், 150 மி.கி. தங்கத்தில் டெங்கு கொசு ஆகியவற்றை செய்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நாடே வரவேற்ற வேளையில், ஜல்லிக்கட்டு நம் பாரம்பரியம் என்பதை வலியுறுத்தும் விதமாக 800 மி.கி. தங்கத்தில் ஜல்லிக்கட்டு காளையை உருவாக்கினேன்.

தற்போது, குமரியில் விமான நிலையம் அமைவதை வரவேற்று 660 மி.கி.யில் விமானம் செய்துள்ளேன்.

இதுபற்றி அறிந்த குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், என்னை அழைத்துப் பாராட்டினார். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தப் பணி தொடரட்டும் என்று உற்சாகப் படுத்தினார்.

5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நான், எனக்கு தெரிந்த நகைத் தொழிலை வைத்து, என்னால் முடிந்த அளவுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இது மிகுந்த மனநிறைவைத் தருகிறது’’ என்று உற்சாகத்தோடு கூறுகிறார் பாலமுருகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x