Published : 21 Dec 2017 10:41 AM
Last Updated : 21 Dec 2017 10:41 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 6

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விரிசங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

அதாவது, ‘பெண்ணே, பொழுது புலர்ந்துவிட்டபடியால், பறவையினங்கள் தங்களைச் சிலுப்பிக் கொண்டு, ஓசையிடத் துவங்கிவிட்டன. பறவையினங்களின் தலைவனான ‘பெரியதிருவடி’ எனப்படும் கருடபகவான் வீற்றிருக்கும் கோயிலில், அதாவது திருமாலின் ஆலயத்தில், சங்கநாதம் முழங்குகிறது.

திரு ஆயர்பாடியில் அவதரித்த கண்ணபிரானை அழிக்க, அழகிய பெண்ணுருவம் கொண்டு வந்த பூதனை எனும் அரக்கியை தனது செவ்வாயினால், அவளது முலைப் பற்றி நஞ்சோடு சேர்த்து, அவளது உயிரையும் மாய்த்தவன் கண்ணன்.

மேலும் சகடாசுரனையும் வதம் வதம் செய்தவனாயிற்றே கண்ண பரமாத்மா. இத்தனை லீலைகளைப் புரிந்த கண்ணனைத் தொழவேண்டி, முனிவர்களும் யோகிகளும் அதிகாலையில் எழுந்து, ‘ஹரி ஹரி’ என்று முணுமுணூத்தபடியே கண்ணனின் லீலா வினோதங்களில் ஈடுபட, தூக்கம் துறந்து எழுந்துவிட்டார்கள்.

சதாசர்வகாலமும் கண்ணனைத் துதிக்கும் ‘ஹரி ஹரி’ என்று கூறுகிற சப்தம் கேட்கவில்லையா. பெண்ணே! அவனது நாமம் உள்ளத்தைக் குளிர்விக்கிறது. விரைவில் எழுந்து, கண்ணனின் நாமத்தை உச்சரித்து, அவனையே மனதில் இருத்தி, பாவை நோன்பு நோற்போம் என ஆண்டாள் அழகுறப் பாடுகிறாள்!

அதிகாலையில் எழுந்து, நீராடி இந்தப் பாடலை தினமும் பாடுங்கள். ஹரி எனும் பரந்தாமனின் பேரருளால், மனதில் உள்ள கிலேசங்கள் விலகும். உள்ளம் அமைதிபெறும். குளிர்ந்து போய், நிதானத்துடன் காரியங்களில் ஈடுபடுகிற மனோவலிமையைத் தரும் என்பது உறுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x