Last Updated : 25 Dec, 2017 03:47 PM

 

Published : 25 Dec 2017 03:47 PM
Last Updated : 25 Dec 2017 03:47 PM

கிறிஸ்துமஸ் தாத்தா

பிலிப் மிகவும் தனியாக இருந்தான். அம்மா தன் வேலை முடிந்து வீடு வருவதற்குச் சற்று நேரம் அதிகம் ஆகும் என்று காலையிலே சொல்லித்தான் சென்றிருந்தாள். கிறிஸ்துமஸ் வரப்போகிறதே ... வேலை இருக்கத்தான் இருக்கும். அவனுக்குத்தெரியும். இந்த வேலையை அம்மா அதிகமாகச் செய்வதாக சொல்லித்தான் வாங்கி இருப்பாள்...அவனுக்கு கிறிஸ்துமஸுக்கான பொருள்கள் வாங்கவேண்டும் அல்லவா...

ஜன்னல் வழியே அவள் வரவை எதிர்பார்த்துக்காத்திருந்தான். மூன்று நாட்களாக விடாமல் பெய்த பனிமழையில் சாலை யாவும் பணி கட்டிகள் மூடி வெள்ளை ரிப்பன்களாக மாறி இருந்தன. நேற்று பிலிப் வெளியே சிறிது நேரம் விளையாடிக்கொண்டிருந்தான். அவன் பூட்ஸ் முழுவதும் பனிக்குள் மறைந்துவிட்டது. லேசாகக் கிழிந்து இருந்த ஸ்டாகிங்ஸின் ஓட்டைகள் வழியே உள்ளே சென்று முட்டியைச் சில்லிடவைத்தது. அவன் அம்மா சாக்சும் கிழிந்ததுதான். அம்மாவின் கால்களிலும் ஜில்லிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் அம்மா அதைச் சொல்லமாட்டாள். வேறு புது சாக்ஸ் வாங்குவதற்கு அவளிடம் பணம் இருக்காது.அதனால் அவளுக்குக் கஷ்டங்களை மனதிற்கு உரைக்க விடமாட்டாள். சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் யாவும் வெள்ளைப்பனியில் மூடப்பட்டு நாய் கொடைகள் போல் தெருவோரம் பூத்துக்கிடந்தன.சில நேரங்களில் ஜன்னலில் தெரியும் இவன் முகத்தைப்பார்த்து யாராவது கூப்பிடுவார்கள். பனியைச் சுத்தமாக நீக்கிக்கொடுத்தால் கை நிறைய யூரோ காயின்கள் கிடைக்கும். இன்று யாராவது கூப்பிடுவார்களா??

தெரியவில்லை.... அவன் நிறைய விஷயங்களுக்குக் காத்துக்கொண்டிருக்கிறான், வருடங்களாக இப்படித்தான் சாண்டாவின் வருகைக்கும் காத்திருக்கிறான். சில வருடங்கள் முன்பு வரையில் அப்பா இருந்தார். அப்பொழுதெல்லாம் அவன் பார்வையில் அவரே அவன் சாண்டா.அவருடன் கிறிஸ்துமஸ் செடி வாங்கப்போகும் அன்றே அந்த வருடத்திற்கான பண்டிகை ஆரம்பமாகிவிடும். இரவில் வாங்கிய செடி காலைக்குள் சிவப்பு ஊதா மஞ்சள் என்று விதம் விதமாகப் பூக்களுடன் காலையில் பளிச்சிட்டு நிற்கும்..ம்ஹூம்.. பூக்களை அவன் பார்க்கலாம் ஆனால் பண்டிகை வரையில் தொடக்கூடாது..ஒவ்வொரு பூவிலும் சுற்றப்பட்ட ஒரு பொருள்..அவன் எதிர்பார்த்தது சில எதிர்பாராதது பல.அப்போதெல்லாம் அப்பாவேதான் சாண்டா என்று நம்பினான்.

ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அவர் பெட்டியில் அடைக்கப்பட்டு உயிரில்லாமல் வீடு திரும்பும்வரை....

அம்மா பாவம் எல்லாம் வாங்கித்தான் கொடுக்கிறாள். முடிந்தவரையில். நேற்று அப்படித்தான் அவளுடன் கிறிஸ்துமஸ் ட்ரீ வாங்கப்போனான். அப்பா....எவ்வளவு மரங்கள். பெரியதாக , கைகள் போல் கிளைகளோடு .... ஒவ்வொரு கையும் ஒரு பொருளைக்கொடுத்தால்....அவன் வீட்டில் அவற்றை வைக்க இடம் போதாதுதான். ஆனாலும் அவனுக்கு பெரியதாக ஒன்று வாங்கவேண்டும் என்று பல நாள் ஆசை. அம்மா அதில் தொங்கவிடப்பட்டிருக்கும் விலை அட்டையைப் பார்த்துவிட்டு அவன் உணரா வண்ணம் வேறு பக்கம் அழைத்துக்கொண்டு போய்விடுவாள். அங்கே மிகவும் சிறியதாக நிறைய மரங்கள் ப்ளாஸ்டிக் கோப்பைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அவற்றை மரம் என்று ஒப்புக்கொள்ள அவனுக்கு முடிந்ததில்லை. கிறிஸ்துமஸ் செடி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அப்போதெல்லாம் அவன் சாண்டா வர வேண்டும் என்று எதிர்பார்க்கத்தொடங்கிவிடுவான். அவன் க்ளாஸ் எம்மா மிஸ் அவனுக்கு நிறையக் கதைகள் கூறி இருக்கிறார். அன்று கூட அவர் சொன்னக்கதையில் சாண்டா பிலிப் பையனை பார்ப்பதற்கு நேராக தன் கோச் வண்டியில் ஏறி வந்ததாகச் சொன்னாள். அவனும் தான் தினமும் ஸ்கூல் போகும் வழியில் உள்ள சர்சில் வேண்டிக்கொள்கிறான். அவனைப்பார்பதற்கு சாண்டா வரவேண்டும் என்று.

ஆனால் சாண்டாவுக்கு அவன் மீது கோபம் . இதுவரையில் வரவே இல்லை . எம்மா மிஸ் தப்பு செய்பவர்களை சாண்டாவிற்கு பிடிக்காது என்று சொல்லி இருந்தார்...ஒரு வேளை அவன் நல்ல பையனாக நடக்கவில்லையா.. .யோசித்துப்பார்த்தான். அன்று மதியம் கொடுக்கப்பட மாலை உணவை அவன் க்ளாஸ்மேட் ஜானுக்கு கொடுக்காமல் இவன் சாப்பிட்டதால் இந்த முறையும் சாண்டா வராமல் போய்விடுவாரோ?

சாண்டா க்ளாஸ் நீ வரவேண்டும்...நீ வரவேண்டும் என்று சொல்லியபடி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு நின்றான்.

சட்டென்று எதோ ஒன்று யோசனையில் உதித்தது. தெரு முழுவதும் பனிப்போர்வை. இந்தப் பனிக்கட்டிகளை வைத்து ஒரு சாண்டா க்ளாஸ் உருவ பொம்மை செய்து வைத்தால் சாண்டாவிற்கு பிடிக்குமோ....? ஆம் பிடிக்கும் என்று தான் தோன்றியது. அவனை ஒரு போட்டோ பிடித்து அவன் எம்மா மிஸ் காட்டியபோது அவனுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அதே போல் தான் சாண்டாவிற்கும் இருக்கும். அந்த உருவ பொம்மையை பார்ப்பதற்காவது சாண்டா வரக்கூடும் தானே.!!

தன் உல்லன் குல்லாயை எடுத்து தலை மற்றும் கழுத்தை நன்றாக மூடிக்கொண்டான். அம்மா சொல்லி இருக்கிறாள் பனிக்காற்று காது வழி சென்று உபாதை உண்டாக்கும். கழுத்து வழி சென்று உடல் வலி உண்டாக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உடல் நலம் இல்லாமல் இருப்பது அவனுக்குப்பிடிக்காது. கால் ஸ்டாகிகிங்சில் இருந்த பெரிய ஓட்டைகளைச் சிறு முடிச்சாகக் கட்டி சீர்ப் படுத்தினான். இப்போது பனிக்கட்டி உள்ளே போக முடியாது. குளிரெடுக்காமல் நிறைய நேரம் நின்று சாண்டாக்ளாஸ் பனி பொம்மை செய்யலாம்.

கதவைப்பூட்டிக்கொண்டு கைகளில் சின்ன பக்கட், பனியை வாரி எடுப்பதற்கு முரம் மற்றும் தோண்டி எடுப்பதற்கு மண்வாரி ஒன்றையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். வீட்டு வாசலில் மாட்டப்பட்டிருந்த அந்தச் சிறிய கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கண்களுக்குத்தெரியாமல் மிகச்சிறியதாக இருந்தது. சாண்டாவிற்கு கண்களில் இது படாமல் போனதால் வராமல் இருப்பாரோ?? இருக்கலாம்.. இந்த முறை அவர் உருவ பொம்மையை அவர் பார்க்காமல் இருக்க முடியாது. ப்ளாட்பார்ம் தாண்டிய அந்த சிறு வெளியில் பனிக்கட்டிகள் உறைந்து கிடந்தது கைகளால் எடுக்க முடியாது. க்ளொவ்ஸ் நனைந்துவிடும். அம்மா பாவம் வேறு ஒன்றை வாங்க இன்னும் அதிகம் உழைக்க வேண்டி வரும்..வேண்டாம் மெதுவாக முரத்தில் அள்ளி எடுக்கலாம். ஒரு கைகளின் க்ளொவ்சை அவிழ்த்து இடுப்பில் சொருகிக்கொண்டான்.

மெதுவாகச் சாண்டா உருவாகத்தொடங்கினார். கைகளை விரித்துக்கொண்டு, கண்களில் கறுப்பு பெர்ரி பழத்தைச் சொருகிக்கொண்டு, மூக்கிற்குச் சிவந்த ஒரு பழத்தைப் பொருத்திக்கொண்டு.

அய்யோ....இது என்ன..?

அவனுக்குச் சரியாக தெரியவில்லை. யாரோ ஒரு குழந்தை போல் தெரிகிறதே...சருக்கி விளையாட வந்திருக்கும்... தெருவின் அந்தக் கடைசி வீடான ஷ்மிட் அங்கிள் வீட்டுக்குழந்தைதான்... குழந்தை சறுக்கும்போது கால்கள் தவறி....விழுந்து விடுமோ....அவனால் அதற்குள் ஓட முடியுமா....கையில் இருந்தவற்றைத் தூக்கி எறிந்து விட்டு அவசரமாக ஓடினான். இதுவரை செய்து முடித்து கழுத்தில் அவனுடைய பழைய ஸ்கார்பை சுற்றிக்கொண்டு நின்ற சாண்டாவை தாண்ட நினைத்து , அனால் கலைத்தவாறே...

கீழே விழ ஆரம்பித்து சில மைக்ரோ செகண்டுகளே ஆன நிமிடத்தில் குழந்தையை எட்டிப்பிடித்தான்.

அவனுக்குத்தோன்றியது ....கலைந்து கிடந்த சாண்டாவைப்பார்பதற்கு இந்த வருடமும் சாண்டா வரப்போவதில்லை என்று.

அதிசயமாக ஷ்மிட் அங்கிள் பண்டிகை அன்று வீட்டிற்கு வந்தார். அவர் கைகளைப்பிடித்தபடி சிரித்துக்கொண்டே அவர் குழந்தை .அவளைப்பார்க்கச் சாண்டா வந்திருப்பாரோ...? அவளைக்கேட்டான்.

சிரித்தபடி ஷ்மிட் அங்கிள் சொன்னார் " ஆமாம் வந்திருந்தார்.."

வியந்தபடி அவன் கேட்டான்.. ."அவர் எப்படி இருந்தார்? "

ஷ்மிட் அங்கிள் சிறிது யோசித்துவிட்டுச் சொன்னார்.... "அவரா நீல கலர் ஜாக்கெட் சிகப்பு உள் சட்டை கறுப்பு நீளக் கால் சராய்...."

அது பிலிப் அன்று போட்டுக்கொண்டிருந்த உடை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x