

தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை காரணமாகஇயல்பைவிட அதிக வெப்பநிலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் எச்சரிக்கை கவலை அளிக்கிறது. பள்ளிப் பொதுத் தேர்வுகள், சட்டமன்றத் தேர்தல், திருவிழாக்கள், விடுமுறை நேரக் கொண்டாட்டங்கள் என்று அதிக அளவில் மக்கள் திரள்கிற நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெறும் காலக்கட்டத்தில், இந்தச் சூழலை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம்.
வளிமண்டலத்தில் சூடான காற்று தொடர்ந்து நீடிப்பதால் ஏற்படும் வெப்ப அலையானது காலநிலை மாற்றம், பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்ற விளைவால் தீவிரமடைகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இயல்பைவிட 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகம் இருக்கும் என்றும் வடமேற்குப் பகுதிகளில் 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் அமெரிக்கா, கனடாவின் வானிலை முன்னறிவிப்பு மையங்கள் கணித்துள்ளன.
2025இல் எரிசக்தி, சுற்றுச்சூழல், தண்ணீர் கவுன்சில் (CEEW) வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 100 கோடி பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டனர்; 2024இல் 44,000க்கும் அதிகமானோர் வெப்ப மயக்கத்தால் (heat stroke) அவதிப்பட்டனர். வெப்ப அலையின் கடுமையான தாக்கம் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பெற்றிருப்பதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.