கடன் செயலிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்!

கடன் செயலிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்!
Updated on
2 min read

கேரளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியில், ஓர் எண்ணிலக்கக் கடன் செயலியின் (Digital Loan App) துன்புறுத்தல் இருப்பது தெரியவந்துள்ளது.

செயலிகள் வழியாகக் கடன் பெற்றவர்கள் அதைத் திருப்பிச்செலுத்த முடியாமல் மிரட்டல்களுக்கு ஆளாவதாகப் புகார்கள் அதிகரிக்கும் நிலையில், இப்பிரச்சினையில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

கண்ணூரைச் சேர்ந்த பல் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் நிதின்ராஜ், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கடன் செயலியில் ரூ.13,500 கடன் பெற்றுள்ளார். அவர் 19 ஆயிரம் ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட செயலி நிறுவனத் தரப்பு வற்புறுத்திய நிலையில், 1,000 ரூபாயைச் செலுத்தியுள்ளார்.

அதன்பின் நான்கு நாள்கள் கழித்து, கல்லூரியில் இருந்த நேரத்தில் அவரது அலைபேசிக்கு 96 அழைப்புகள் அச்செயலி நிறுவனத்தால் விடுக்கப்பட்டுள்ளன. அவரது பேராசிரியருக்கும் 26 அழைப்புகள் சென்றிருக்கின்றன. அது பற்றிக் கல்லூரி நிர்வாகம் கேள்வி எழுப்பிய நிலையில் அம்மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

மாணவர் மரணத்தில் சாதியப் பாகுபாடு பிரச்சினை இருப்பதாகப் பேசப்பட்ட நிலையில், அது பற்றி விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரளக் காவல் துறைக்குத் தேசியப் பட்டியல் சாதியினர் ஆணையம் உத்தரவிட்டது. விசாரணையில், கடன் செயலியின் சுரண்டல் செயல்பாட்டால் மாணவர் அவதிக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் எண்ணிலக்க வழியில் கடன் வழங்கிவருகின்றன. இவற்றின் செயலிகள் மூலமாகக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்த முடியாமல் விபரீத முடிவுகளை நோக்கி மக்கள் நகர்வதும் இன்னொருபுறம் அரங்கேறிவருகிறது.

‘ஆவணங்கள் தேவையில்லை; உடனடியாகக் கடன் பெறலாம்’ என்கிற அம்சம், எந்தவித முன்யோசனையும் இல்லாமல் கடன் பெறுவதற்கு இளையோரை உந்துகிறது.

கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் நேரும்போதோ, அதிக வட்டி விகிதத்தை எதிர்கொள்ள முடியாதபோதோ, இதர சில பிரச்சினைகளில் சிக்குகிறபோதோ கடன்பெற்றவர்கள் நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.

இதில் இளைஞர்கள், மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, கேரள இளைஞர்கள் அதிகளவில் கடன் செயலிகளைப் பயன்படுத்துவதாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.

இத்தகைய சூழலில், இளையோரைக் கடுமையான நிதி, உளவியல் அபாயங்களில் இருந்து காப்பதற்குக் கடன் செயலிகளை ஓர் அமைப்பின் கீழ் கொண்டுவர அரசு ஆவன செய்ய வேண்டும். அரசால் ஒரு செயலி நீக்கப்படும்போது, அது இன்னொரு பெயரில் செயல்பாட்டுக்கு வருவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

பயனர் அனுமதி தந்தாலும் அவர் தொடர்பான தகவல்கள், ஒளிப்படங்களைக் கடன் செயலிகள் அணுக இயலாதவாறு, அலைபேசிகளின் இயக்க முறைமை நிலையை (OS) உற்பத்தி நிறுவனங்கள் மாற்றியமைக்க வேண்டும்.

சுரண்டல் நோக்கத்துடன் இயங்குகிற செயலிகளைச் சார்ந்தவர்களுக்குச் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கிற வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். வெளிநாடுகளில் இருந்து அவை செயல்படுவதையும் கட்டுப்படுத்துகிற நுட்பங்களை முடுக்கியாக வேண்டும்.

கடன் செயலிகளை அணுகுபவர்கள் அவை ரிசர்வ் வங்கியின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அனைத்தையும் தாண்டி, மிகவும் அவசியமானால் மட்டுமே கடன் பெற வேண்டும் என்ற நிதி மேலாண்மைச் சிந்தனையை இளையோரிடத்தில் பரவலாக்க வேண்டும்.

மீறிக் கடன் பெறும் அவசியம் ஏற்பட்டால் குடும்பத்தினர், நண்பர்களிடம் ஆலோசனை பெறுவது சுரண்டல் செயலிகளின் அபாய வலையில் சிக்காமல் காப்பாற்றும். அதற்கேற்ற சூழலை அரசும் சமூகமும் வளர்த்தெடுக்க வேண்டும்.

கடன் செயலிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்!
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in