

கருப்பைவாய்ப் புற்றுநோயைத் தடுக்க இந்தியாவிலேயே முதல் முறையாக ஹெச்.பி.வி. தடுப்பூசி வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தொடங்கியிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாகும். உலகளவில் பெண்களை அதிகம் பாதிக்கும் நான்காவது உயிர்க்கொல்லிப் புற்றுநோயாகக் கருப்பைவாய்ப் புற்றுநோய் கருதப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 1.2 லட்சம் பெண்களுக்குக் கருப்பைவாய்ப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஹெச்.பி.வி. வைரஸ் தொற்றினால் ஏற்படும் நோய் இது. பாலுறவின் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ் ஆண், பெண் இருவரையுமே பாதிக்கக்கூடும். சொல்லப்போனால், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் இந்தத் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்கின்றனர் மருத்துவர்கள்.
அதேநேரம், இந்த வைரஸை எதிர்கொள்ளும் எதிர்ப்பாற்றல் இயற்கையிலேயே மனிதர்களுக்கு உண்டு. சில நேரம் கொடிய வகை ஹெச்.பி.வி. வைரஸ் தொற்று தாக்கக்கூடும். அப்படி நேர்ந்தால் இந்த வைரஸ் பல ஆண்டுகளுக்கு உடலில் மெல்லப் பரவும். குறிப்பாகப் பெண்களுக்குக் கருப்பைவாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.