

காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கவனமாக அணுக வேண்டிய பிரச்சினை இது.
எபோலா வைரஸ் முதன்முதலில் 1976இல் தற்போதைய காங்கோ பகுதியில் கண்டறியப்பட்டது. தற்போது 17ஆவது முறையாக எபோலா அந்நாட்டில் பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸால் 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
காங்கோவின் மிக மோசமான எபோலா பரவல் 2018-2020க்கு இடையில் நிகழ்ந்தது, அப்போது கிட்டத்தட்ட 2,300 பேர் உயிரிழந்தனர். விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடிய ‘பண்டிபுக்யோ’ என்னும் ஓர் அரிய வகை எபோலா வைரஸ், கடுமையான குருதிப்போக்கு காய்ச்சல் ஏற்படுத்தக்கூடியது என்பதால், தற்போது தீவிரமான நோயாக எபோலா கருதப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், வாந்தி போன்றவற்றின் மூலம் மற்றவர்களுக்கும் இது பரவுகிறது. எபோலா நோயைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ, மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.