

இந்தியக் குடும்பங்களில் ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொள்ளப்படுவதைத் தடுப்பதற்குச் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் முடிப்பதால் மரபணுக் குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்பதைத் தடுப்பதற்கான வழியாக இது இருக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ரத்த உறவுக்குள் திருமணம் புரிந்துகொண்ட பெற்றோருக்குப் பிறந்த சார்வி எனும் 20 வயதுப் பெண் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத்தாக்கல் செய்திருந்தார்.
பெங்களூருவைச் சேர்ந்த இந்தப் பெண் மரபுரீதியாகக் கடத்தப்படும் கூம்பு செல்கள் சிதைவு, ஒளிக்கூச்சம் (போட்டோஃபோபியா) போன்றவற்றால் கடும் பார்வைத்திறன் பாதிப்புக்கு ஆளானவர்.
பல்வேறு உடல்நலக் கோளாறுகளோடு தேசியச் சட்டக் கல்லூரியில் சேரப் போராடிய இந்தப் பெண்ணின் பொதுநல மனு, பொதுவான உரிமையியல் சட்டத்தை உருவாக்குவதன் அவசியத்தை நோக்கி உச்ச நீதிமன்றத்தின் பார்வையைத் திருப்பியிருக்கிறது.