

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் போதைப் பொருள் குற்றங்களையும் தடுப்பதற்குப் புதிதாக 30 நீதிமன்றங்களைத் தொடங்கத் தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும் போக்சோ சட்டம் 2012இல் இயற்றப்பட்டது. இது போக்சோ வழக்குகளுக்காகவே போக்சோ நீதிமன்றங்களை அமைக்க வழிவகுத்தது.
போக்சோ வழக்குகள் நூற்றுக்கும் அதிகமாக நிலுவையில் இருக்கும் மாவட்டங்களில், சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் 2019இல் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, விரைவுச் சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசின் நிதி உதவியோடு நடத்தும் திட்டம் தொடங்கியது.
போக்சோ வழக்குகளோடு, பெண்களுக்கு எதிரானவை உள்ளிட்ட மற்ற வழக்குகளையும் விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன. இந்த நீதிமன்றங்களுக்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்துகொள்கின்றன.
அவற்றுக்கான கட்டமைப்பை உருவாக்குதல், நீதிபதிகளையும் சிறப்பு அரசு வழக்குரைஞர்களையும் நியமித்தல், அன்றாட நிர்வாகம் முதலானவை மாநில அரசுகளின் பொறுப்புகள்.