Published : 25 Jan 2021 03:14 AM
Last Updated : 25 Jan 2021 03:14 AM

அசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்

ராஜீவ் கொலை வழக்கில் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் தன்னுடைய கருணை மனுவின் மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுத் தன்னை விடுக்குமாறு கோரியிருந்த வழக்கில், ஆளுநர் ஏழு நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது இந்த விவகாரம் உச்ச நிலையை எட்டியுள்ளதை உணர்த்துகிறது. இந்த உத்தரவை இடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையில், எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வானது பேரறிவாளன் மனு மீதான பரிசீலனையில் மிகவும் அசாதாரணமான தாமதம் ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆண்டுக் கணக்கில் தாமதப்பட்டுவந்த எழுவரின் கருணை மனுக்களின் மீதான ஆளுநரின் முடிவானது, அவர்களின் விடுதலையை உறுதிப்படுத்தும் வகையில் அமையட்டும்.

தமிழக ஆளுநருக்குத் தான் 2015-ல் அனுப்பிய கருணை மனுவின் மீதும் 2018 செப்டம்பரில் தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீதும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதப்படுத்துவதாகவும் உச்ச நீதிமன்றமே இவ்விஷயத்தில் தலையிட்டுத் தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சிபிஐயின் பல்நோக்குக் கண்காணிப்புக் குழு விசாரணை அறிக்கைக்காகக் காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிபிஐ தரப்போ எழுவர் விடுதலைக்கும் தங்களது விசாரணை அறிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்திவிட்டது. அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு, ஆளுநர் இது குறித்து முடிவெடுப்பதற்கு இனிமேலும் காலதாமதம் செய்ய வேண்டியதில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று ஏறக்குறைய முப்பதாண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்துவரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன் ஆகிய எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. ஆளுங்கட்சியான அதிமுக எழுவர் விடுதலை குறித்து அமைச்சரவைத் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, எழுவர் விடுதலையே அரசின் உறுதியான நிலைப்பாடு என்று துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த நவம்பர் 5, 2020 அன்று தமிழக ஆளுநருக்குக் கடிதம் எழுதியதோடு அக்கடிதத்தின் நகலை மத்திய உள் துறை அமைச்சருக்கும் அனுப்பிவைத்தார். தொடர்ந்து, நவம்பர் 24 அன்று ஆளுநரை நேரில் சந்தித்து எழுவரையும் விடுதலை செய்யக் கோரி வலியுறுத்தினார்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் கருத்தொருமிப்புடன் எழுவர் விடுதலையை வலியுறுத்திவரும் நிலையில், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு ஆளுநர் செவிசாய்த்து எழுவரையும் விடுவிப்பதே சரியான முடிவாகும். சட்டரீதியான காரணங்களையெல்லாம் தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முடிவும் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x