Published : 08 May 2014 08:05 AM
Last Updated : 08 May 2014 08:05 AM

ஜனநாயகத்தை நோக்கி நகர்தல்!

இந்தப் பொதுத் தேர்தலுக்கு ஆகும் செலவு ரூ. 30,000 கோடியைத் தாண்டும் என்று கணிப்புகள் சொல்லப்படுகின்றன. அமெரிக்காவில் 2012-ல் நடந்த அதிபர் தேர்தலுக்கு ஆன செலவைவிடச் சற்றுக் குறைவான தொகைதான் இது என்றாலும், சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுடனும் அதைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம் ஜனநாயகம் எந்த அளவுக்குப் பணத்தால் ஆளப்படுகிறது என்ற உண்மை நமக்குப் புரியும்.

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்கு ஆன செலவு கிட்டத்தட்ட ரூ. 10.5 கோடி, 1977-ல் நடைபெற்ற ஆறாவது பொதுத் தேர்தலில் ஆன செலவு ரூ. 23 கோடி. அதாவது, முதல் தேர்தலைவிட இரு மடங்குக்கும் அதிகம். 2004-ல் நடைபெற்ற தேர்தலில் ஆன செலவு முதல் தேர்தலைவிட நூறு மடங்குக்கும் அதிகம்: ரூ 1,300 கோடி. ஆனால், தற்போதைய பொதுத் தேர்தலின் உத்தேசச் செலவு மதிப்பு ரூ. 30,000 கோடி. அதாவது, முதல் பொதுத் தேர்தலைவிட 3,000 மடங்குக்கும் அதிகம்.

நாட்டின் இரு பெரும் கட்சிகளான காங்கிரஸையும் பா.ஜ.க-வையும் எடுத்துக்கொண்டால், கடந்த தேர்தல் பிரச்சாரத்துக்காக பா.ஜ.க. செலவிட்டதாகக் கணக்குக் காட்டிய தொகை ரூ. 448.66 கோடி. இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியின் உத்தேசச் செலவு ரூ. 5,000 கோடி, அதாவது, 10 மடங்கு அதிகம். காங்கிரஸ் இந்த அளவு இல்லை யென்றாலும் அந்தக் கட்சியும் மலைக்க வைக்கும் அளவில் செலவு செய்திருக்கிறது. தேர்தல் முடியும் வரை ‘ஸ்பான் ஏர்' என்ற தனியார் விமான நிறுவனம் தனது ஐந்து விமானங்களைத் தினமும் ரூ. 5.4 கோடி என்ற கணக்கில் குத்தகைக்கு விட்டிருக்கிறது. தேர்தல் பிரச்சார காலம் முழுவதையும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்த்தால், விமானங்களுக்குக் கொடுக்கும் கட்டணமே நம்மை வாய் பிளக்க வைத்துவிடும் என்றால் மற்ற செலவுகள்? இதெல்லாம் அதிகாரபூர்வக் கணக்குகள். உண்மையில் செய்யப்படும் செலவு இதைவிடப் பலபல மடங்கு அதிகம் என்பதே உண்மை. இந்தக் கணக்கு களைவிட நம்மை அதிகம் பயமுறுத்தும் விஷயம் தேர்தல் செலவுக்கு இவ்வளவு பணத்தைக் கட்சிகள் எங்கிருந்து பெறுகின்றன என்பது.

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த தருணத்தில் பெருநிறுவனமான வேதாந்தாவிடமிருந்து காங்கிரஸும் பா.ஜ.க-வும் பெரும் தொகையை நன்கொடையாகப் பெற்றதாக டெல்லி நீதிமன்றம் அம்பலப்படுத்தியது. ஒரு பானை சோற்றில் இது ஒரே ஒரு பருக்கைதான்.

இப்படி ஏராளமான பணத்தைச் செலவழிக்கும் ஒரு கட்சி அல்லது ஒரு வேட்பாளர் எப்படி அதைத் திரும்பப் பெறும் வேட்டையில் இறங்காமல் இருக்கும் அல்லது இருப்பார்? இப்படிப் பெருநிறுவனங்களிடம் கையேந்தி நிற்கும் கட்சிகள், எப்படி ஒரு பிரச்சினை என்று வரும்போது அவர்களைப் புறக்கணித்துவிட்டு, மக்கள் நலன் சார்ந்து நிற்பார்கள்? தேர்தலிலிருந்து பணத்தை எந்த அளவுக்கு அகற்றுகிறோமோ அந்த அளவுக்குத்தான் நாம் உண்மையான ஜனநாயகத்தை நோக்கி நகர்வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x