Published : 06 Dec 2023 06:16 AM
Last Updated : 06 Dec 2023 06:16 AM

‘மிக்ஜாம்’ கற்றுத்தந்த முக்கியப் பாடம்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளம், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான மழைப்பொழிவு இது எனச் செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், இப்படியான பேரழிவுகளை எதிர்கொள்வதில் நாம் எங்கு தவறுகிறோம் என சுயபரிசீலனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். தீவிரப் புயலாக வலுப்பெற்ற மிக்ஜாம், ஆந்திரக் கடலோரத்தையொட்டி நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை (டிசம்பர் 4) நாள் முழுவதும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையும், வீசிய பலத்த காற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டன. ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

1976இல் ஒரே நாளில் 47 செ.மீ. மழை பதிவாகியிருந்த நிலையில், இப்போது ஒரே நாளில் சென்னையில் 34 செ.மீ. மழை பதிவானதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். விமான நிலையம் மூடப்பட்டது, ரயில் சேவை பாதிக்கப்பட்டது எனத் தலைநகரே முற்றிலுமாக முடங்கியது. பாதுகாப்புக் கருதி, மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். டிசம்பர் 4, 5ஆம் தேதிகளில் பொது விடுமுறை அளிக்கப்பட்டதால் மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டது. 2015 டிசம்பர் மழை-வெள்ளம் ஏற்படுத்திய பெரும் பாதிப்புக்குப் பிறகு, ஒவ்வொரு டிசம்பர் மாதத்தையும் சென்னை மக்கள் அச்சத்தோடுதான் எதிர்கொள்கின்றனர்.

இந்த முறை மிக்ஜாம் புயல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டு இருந்தாலும், இவ்வளவு அதிக மழை பெய்யும் எனக் கணிக்கத் தவறிவிட்டோம். நீர்நிலைகளில் குடியிருப்புகள் கட்டப்படுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்துத் தொடர்ந்து பேசிவந்தாலும், ஆக்கிரமிப்புகள் நின்றபாடில்லை. அதன் விளைவுகள் இந்த முறை வலுவாக எதிரொலித்திருக்கின்றன. இதற்கிடையே, ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக, சென்னை மாநகராட்சி தரப்பில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்ததால், ‘இவ்வளவு பெரிய தொகை செலவு செய்த நிலையிலும் மழை நீர் ஏன் தேங்கியது?’ எனப் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

மறுபுறம், ரூ.4,000 கோடி செலவு செய்ததால்தான் இந்தப் பெரு மழையைச் சமாளிக்க முடிந்தது, முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்புத் தயாரிப்புகளால் உயிர்ச்சேதத்தைப் பெருமளவு குறைக்க முடிந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறார். அப்படி என்றால் இந்தப் பெருமழைக்கு முன்புவரை மழைநீர் வடிகால் பணிகள் பெருமளவு முடிக்கப்பட்டுவிட்டன என்றும் இந்த ஆண்டு சென்னையில் எங்கும் மழைநீர் தேங்காது என்றும் முதலமைச்சரும் பிற அமைச்சர்களும் சென்னை மேயர் பிரியா ராஜனும் கூறிவந்ததற்கு என்ன பொருள் என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். சென்னையின் முதன்மைச் சாலைகளில் நீர் வடிந்து போக்குவரத்து ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.

அதேவேளையில், இன்னமும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியவில்லை எனச் செய்திகள் வெளியாகின்றன. தவிர, ஆபத்தான நிலையை எதிர்கொண்டிருந்தவர்களுக்கு உடனடி உதவிகள் கிடைக்கப் பெறவில்லை என்றும் புகார்கள் எழுந்திருக்கின்றன. இதுபோன்ற பேரழிவுகள், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் என்பதைக் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இதில் எல்லா வேறுபாடுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x