

இந்தியா உள்பட 56 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக காமன்வெல்த் போட்டியை கிளாஸ்கோ நடத்துகிறது. இதன் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை இரண்டு முறை நடத்திய நகரங்களின் பட்டியலில் கிளாஸ்கோவும் இணைந்துள்ளது.
தவறவிட்ட வாய்ப்பு
2026 காமன்வெல்த் போட்டியை நடத்தும் உரிமை முதலில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் போட்டியை நடத்துவதற்கான செலவு ரூ.17,200 கோடியில் இருந்து ரூ.40,000 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டதால், 2023இல் விக்டோரியா விலகியது. ஏற்கெனவே தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருந்ததால் போட்டியை நடத்த கிளாஸ்கோ முன்வந்தது.
10 விளையாட்டுகள்
2026 காமன்வெல்த் போட்டியில் தடகளம், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், குத்துச்சண்டை உள்ளிட்ட 10 விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டியில் ‘ஒரு மைல்’ (1,609 மீட்டர்) ஓட்டம் மீண்டும் அறிமுகமாகிறது. முதல் முறையாகப் பெண்களுக்கான ஒரு மைல் ஓட்டமும் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதோடு 6 பாரா விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. காமன்வெல்த் வரலாற்றிலேயே அதிக பாரா பதக்கப் போட்டிகள் இடம்பெறும் தொடர் இது. போட்டிக்கான செலவைக் குறைக்கும் நோக்கில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்ளிட்ட 9 விளையாட்டுகள் இம்முறை நீக்கப்பட்டுள்ளன.