

தகவல் தொழில்நுட்பத் துறையின் (ஐடி) ஆண்டு வருவாயைக் கொண்டு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 40 அதிநவீன மீச்சிறப்பு மருத்துவமனையை (super speciality hospital) உருவாக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது உண்மைதான்.
தமிழக அரசின் பொருளாதர ஆய்வறிக்கையின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்புக்கு (GSDP) ஏறக்குறைய ரூ.2.5 லட்சம் கோடி பங்களிப்பை வழங்கும் துறை இது.
தமிழகத்தின் சமூக / பொருளாதார வளர்ச்சிக்கு ஐடி துறையின் பங்களிப்பு முக்கியமானது. ஏறத்தாழ 11 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளையும், உணவு, போக்குவரத்து போன்ற சார்புத் துறைகளில் 30 முதல் 35 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி, தமிழகத்தின் தனிநபர் வருமானம் உயர்வதற்கு இந்தத் துறை ஒரு மௌனக் காரணியாகத் திகழ்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட ஐடி துறைக்குப் போதிய கவனம் தரப்படுகிறதா?
வரமும் சாபமும்
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியின் பின்னணியில் தமிழக அரசு கடந்த ஆட்சி காலத்தில் கொண்டுவந்துள்ள ஜிசிசி (GCC - Global Capability Centres), கொள்கை, தரவு மையக் கொள்கை (Data Centre Policy) ஆகியவை தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுக்கின்றன.
இக்கொள்கைகளின்கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைகள், மானியங்கள், உள்கட்டமைப்பு உதவிகள் போன்ற பொருளாதாரச் சலுகைகள், தமிழகத்தை நோக்கிப் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கின்றன.
இது வெறும் முதலீடுகளை மட்டும் கொண்டு வருவதில்லை; பெரும் செயல்திறன் கொண்ட தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் இதன் மூலம் உருவாகிவருகின்றன.
இருந்தாலும் இந்த மாபெரும் வளர்ச்சி, வாய்ப்புக்குப் பின்னால் பல கசப்பான உண்மைகளும் ஒளிந்திருக்கின்றன. தற்போதைய வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும், பெருகிவரும் இளைஞர்களின் எண்ணிக்கைக்குப் பெரும் இடைவெளி இருக்கிறது.
இதனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் பல இளஞர்களின் கனவுகள் சிதைகின்றன. இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, சில நிறுவனங்கள் ‘வேலை உறுதிப் பத்திரங்கள்’ (Bond-based employment) மூலம் இளைஞர்களைப் மூன்று முதல் ஐந்து ஆண்டுவரை நிர்பந்தப்படுத்தி எந்தவிதச் சம்பள உயர்வும் இல்லாமல் பணியமர்த்துகின்றன.
இது ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த பணிச் சூழலை (Toxic work culture) உருவாக்குகிறது. ஊழியர்களின் அடிப்படைச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில், சில நிறுவனங்கள் நடந்துகொள்கின்றன.