

‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கி, நடித்த சங்ககிரி ராஜ்குமார், கதையின் நாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள படம், ‘ஒன் மேன்’. ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்துக்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தானே மேற்கொண்டு, இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
ஆக. 21-ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சேரன், நடிகர் சத்யராஜ் உள்பட பலர் பங்கேற்றனர் இயக்குநர் சேரன் பேசும் போது, "மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கை கதையை இயக்க இருந்ததற்கு முன்பு, அதை இயக்க இருந்தவர் சங்ககிரிராஜ்குமார்.
சில காரணங்களால் அவர் இயக்க முடியவில்லை. என்னை அணுகிய போது நெருடலாக இருந்தது. ராஜ்குமாரிடம், ‘ராமதாஸ் ஐயா என்னிடம் சொல்லும் போது மறுக்க முடியவில்லை’ என்று சொல்லிவிட்டு படத்தின் பணியை தொடர்ந்தேன். ஆனால் இப்போது படம் நின்றுவிட்டது. எங்களின் ஒன்றரை வருட உழைப்பு வீணாகிவிட்டது. படம் வராததற்கு அப்பா-மகன் சண்டைதான் காரணம். இப்போது சேர்ந்து விட்டார்கள், படம் எடுக்க ஆள் இல்லை. இதுதான் சினிமா.
இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், சினிமாவில் சம்பாதிப்பதற்காக வரவில்லை. சாமானியனும் சினிமாவை உருவாக்க முடியும்; சாமானியர்களிடமும் சினிமாவைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். சாமானியர்களையும் சினிமாவில் பயன்படுத்த முடியும் என்ற கர்வம்மிக்க சிந்தனை அவருக்கு உண்டு. இந்த ‘ஒன் மேன்’ திரைப்படத்தில் அனைத்து விஷயங்களையும் அவர் மட்டுமே செய்திருக்கிறார். இத்தகைய புதுமையான முயற்சிக்காகவே அவரை பாராட்ட வேண்டும்” என்றார்.