

பெட்ரோலுக்கு மாற்றாக நூறு சதவீத எத்தனாலைப் பயன்படுத்துவது குறித்து இந்தியாவில் தற்போது யோசிக்கப்படுகிறது. நெருக்கடியான காலக்கட்டத்தில் இப்படி ஒரு தீர்வு முன்னெடுக்கப்படுகிறது.
நமக்கு மலைப்பாகத் தெரியும் இச்செய்தி, பிரேசிலுக்குப் புதுமையானது அல்ல. அங்கு 95.6% எத்தனாலும் 4.4% நீரும் கலந்த வாகன எரிபொருள் 2003ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் எத்தனாலின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான தேவை இருக்கிறதா?
மாற்றத்துக்கான தேவை
வாகனப் போக்குவரத்தில் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் பெரும்பங்கு பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. ஒரு வகையில் இது சவாலாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக, மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பெரும் அளவில் அந்நியச் செலவாணியாகச் சுமையை ஏற்றிக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சவால்.
இது ஒருபுறமிருக்க, பசுங்குடில் வாயு உமிழ்வுகளால் காலநிலை மாற்றம், புதைபடிவ எரிபொருள்களைக் குறைக்க வேண்டிய தேவை கொடுக்கும் அழுத்தம் மறுபுறம். இதற்கான பல தீர்வுகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பெட்ரோலில் எத்தனாலைக் கலந்து ஊர்திகளில் பயன்படுத்தும் முறை பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவும் கடந்த 20 ஆண்டுகளாக இந்த முயற்சியில் ஈடுபட்டுச் சில மைல்கற்களைக் கடந்துகொண்டிருக்கிறது.
பெட்ரோலில் எத்தனால் எதனால் கலக்கப்படுகிறது? இதற்கு மூன்று காரணங்கள்: முதலாவது, பெட்ரோலின் முக்கியப் பண்புகளில், ஊர்தியின் உள் எரிஇயந்திரத்தில் எரியும்போது ஏற்படும் தேவையற்ற இடிப்பைக் (knocking) குறைக்க எரிபொருளின் ஆக்டேன் எண் (octane number) குறிப்பிட்ட அளவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
எத்தனாலின் ஆக்டேன் எண் இந்தத் தேவையை நிறைவேற்ற உதவுகிறது, இந்த எண்ணை அதிகரிக்கவும் உதவுகிறது. இரண்டாவது, பெட்ரோலை எரிக்கும்போது வெளியேற்றப்படும் பசுங்குடில் வாயுக்களான கரியமில வாயு, நைட்ரஸ் ஆக்சைடு, மீதேன் போன்றவை எத்தனால் கலப்பால் குறைக்கப்படுகின்றன.
எத்தனால் ஓர் உயிரி எரிபொருளாக இருப்பதால், பெட்ரோலில் இது கலக்கப்படுவதால் தேவை அதிகரித்து விவசாயப் பொருளாதாரத்துக்கு ஆதரவாக இருக்கும். மூன்றாவது, பெட்ரோலின் உற்பத்திச் செலவைவிடக் குறைந்த விலையில் எத்தனால் பெறப்படுகிறது.