அமெரிக்க இடைத்தேர்தல்: முன்னணியில் நிற்பது யார்?

ஜனநாயகக் கட்சி ஓர் அவையிலேனும் பெரும்பான்மை பெற்றால் டிரம்ப்புக்குச் சிக்கல்தான்
அமெரிக்க இடைத்தேர்தல்: முன்னணியில் நிற்பது யார்?
Updated on: 
3 min read

அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் கவனம் பெறுகிறது. இது இந்திய இடைத் தேர்தல்களிலிருந்து பெரிதும் மாறுபட்டது.

நமது நாட்டில் ஒரு சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர் காலமானாலோ, அவர் கொள்கைவயப்பட்டுத் தனது பதவியைத் துறந்தாலோ, அந்த இடம் காலியாகும்.

புதிய உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க இடைத்தேர்தல் (by-election) வரும். அந்தந்தத் தொகுதி வாக்காளர் மட்டுமே வாக்களிப்பார்கள். அமெரிக்காவின் கதை வேறு. அங்கு அதிபரின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள். அதில் இரண்டாவது ஆண்டின் முடிவில் இடைத்தேர்தல் (midterm election) வரும். மொத்த நாடும் வாக்களிக்கும். மேலவைக்கும் கீழவைக்கும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்.

இப்போது இரண்டு அவைகளிலும் அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது. இந்த இடைத் தேர்தலில் அதை மாற்ற முயல்கிறது ஜனநாயகக் கட்சி. வெற்றியும் வாய்ப்பும் யாருக்கு உள்ளன என்று பரிசீலிப்பதற்கு முன்னால், அமெரிக்கத் தேர்தல் முறையைச் சற்று அணுக்கமாகப் பார்க்கலாம்.

அவைகள் இரண்டு

அமெரிக்காவின் ஒன்றிய அரசை இரண்டு அவைகள் இயக்குகின்றன. முதலாவது உறுப்பினர் அவை (House of Representatives) அல்லது கீழவை. மற்றது செனட் (Senate) அல்லது மேலவை. கீழவை, சட்டங்களை இயற்றும். மேலவை அங்கீகரிக்கும். ஒரு சட்டம் நடப்பிலாக இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை வேண்டும்.

அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. இவை மக்கள்தொகை அடிப்படையில் 435 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். கீழவைக்கு மாவட்டத்துக்கு ஓர் உறுப்பினர் தெரிவுசெய்யப்படுவார். செனட்டின் கட்டமைப்பு மாறுபட்டது. ஒவ்வொரு மாகாணமும் - அது சிறிதாயினும் பெரிதாயினும் - செனட்டுக்கு இரண்டு உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும். ஆக, செனட்டில் 100 உறுப்பினர்கள் இருப்பார்கள்.

கீழவையின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள். ஒவ்வொரு இரண்டாண்டு முடிவிலும் மொத்தக் கீழவைக்கும் தேர்தல் நடக்கும். மேலவையின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். மேலவைக்கான தேர்தல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கு நடைபெறும். 2024 நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடந்தது.

கூடவே, கீழவையின் எல்லா இடங்களுக்கும், மேலவையின் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்குமான தேர்தல் நடந்தது. வரும் நவம்பரில் மீண்டும் கீழவைக்கும், மேலவையின் இன்னொரு மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்குமான தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தல் யாருக்குச் சாதகமாக இருக்கும்?

Loading content, please wait...

X