பேருந்து நிலையங்களில் ஒரு காலத்தில் பேருந்து கூவுநர்கள் இருந்தார்கள். சிறு பயலாக இருந்த நாளில், ஒரு கையில் கூடைதூக்கி நடந்த தாயாரின் மறுகையை நெகிழவிடாமல் பற்றிக்கொண்டு, காரைக்குடி இரண்டாம் காவல்நிறுத்தச் சந்திப்பின் முனைக் கடையின் புகழ்பெற்ற பழக்கூட்டு ஒன்றை வாங்கிக் குடித்துவிட்டு, மதுரைப் பேருந்துக்காகப் பழைய பேருந்து நிலையத்துக்குப் போகையில், பேருந்து கூவுநர் ‘பொன்ன மருவாதி, பொன்ன மருவாதி’ என்று பொன்னமராவதியைப் பொன்னும் மரியாதையுமாகக் கூவுவார்.
பொன்னமராவதிப் பேருந்து புறப்பட்ட பிறகு, மதுரைப் பேருந்துப் பக்கம் வந்து, ‘மய்ர மய்ர’ என்று கூவுவார். பொன்னுக்குத்தான் மருவாதியா என்று மனம் குழம்பும்.
மாறிய அமைவு
ஓட்டுநரையும் நடத்துநரையும்போலப் பேருந்து கூவுநர்கள் அரசு ஊதியம் பெறும் பணியாளர்கள் இல்லை. பேருந்து புறப்பட இருக்கும்போது கூவுவார்கள்; அதற்குக் கூலி பெறுவார்கள்; ஓட்டுநர் செலவிலோ நடத்துநர் செலவிலோ தேநீர் குடிப்பார்கள்; அடுத்த பேருந்துக்குக் கூவப் போய்விடுவார்கள்.
‘கொடுத்த காசுக்குமேல் கூவுதல்’ போன்ற திரைஉரைகள் உருவாக இவர்களும் காரணம்தான். இப்போது பேருந்து கூவுநர்கள் இல்லை. நேரக்காப்பாளர்கள் ஒலிபெருக்கிகளில் கூவுவதும்கூடக் குறைந்துவிட்டது. செயலிகள்வழியாகக் கைபேசியிலேயே பேருந்துகளின் வருகை-புறப்பாட்டை அறிந்துகொள்ளும் அமைவு வந்துவிட்டது.
‘மேலூர் பேருந்து எத்தனை மணிக்குண்ணே?’, ‘ஒன்பதே முக்காலுக்கு! விட்டா பதினோரு மணிக்குத்தான்!’, ‘இப்ப மணி என்னண்ணே?’, ‘இன்னும் நேரங் கிடக்கு, உக்காருங்க. மேலூரேவா? பக்கத்துலயா?’, ‘நரசிங்கம் பட்டிண்ணே!’ என்று தொடர்கிற சமூகச் சிற்றுரையாடல்களுக்கு இப்போது இடம் இல்லை.
குந்திக் குரல் எடுத்துக் கூவாத பேருந்து நிலையங்கள். செவிப்பொறியாலும் கைபேசியாலும் புறஉலகத்தில் கேட்கும் ஒலிகளெல்லாம் நந்தலாலா, கேளாமல் போயினவே நந்தலாலா! கூவலுக்குப் பழைய நாளில் ஒரு பெயர் இருந்தது: அகவல். மயில் கூவுவதை மயில் அகவுகிறது என்று சிறப்பிப்பார்கள்.