ஆநிரை கவர்தலும் ஆட்களைக் கவர்தலும் | உயிருக்கு நேர் 16

சல்லிக்கட்டின் பழைய பெயர் ஏறுதழுவுதல்
Updated on
2 min read

மாடு பிடித்தல் என்பது இப்போது ஒரு பண்பாட்டு விளையாட்டு. அதற்குச் சல்லிக்கட்டு என்று பெயர். அதை ஜல்லிக்கட்டு என்பது பிழை. சல்லி என்பது சிறு கல்; சிறு மதிப்புள்ள காசு. சல்லிப் பயல் என்றால் சிறுமையாளன். ஓர் ஓட்டின் சிறு துண்டு ஓட்டாஞ்சல்லி.

தானியங்களை / மாவைச் சலிப்பதற்குப் பயன்படும் துளையிட்ட தட்டு சல்லடை. வெள்ளையர் காலத்தில் புதுக்கோட்டை அரசினர் அச்சடித்த காசு, வெள்ளையர் காசைவிட மதிப்பில் குறைந்தது. புதுக்கோட்டையர் காசுகள் மூன்றுக்கு வெள்ளையர் காசு ஒன்று நிகர். மதிப்பில் சிறுத்த புதுக்கோட்டைக் காசுக்குச் சல்லி என்று பெயர்.

அம்மன் சல்லி

திருவிதாங்கூர் மன்னர்கள் தங்கள் விருப்பத் தெய்வமான பத்மநாபன் பெயராலேயே அரசு வகிப்பதாக முன்வைத்துத் தங்களைப் பத்மநாபதாசர்கள் என்று அழைத்துக்கொண்டார்கள். தங்களது காசிலும் சங்கு பொறித்து பத்மநாபன் சக்கரம் என்று அழைத்தார்கள்.

அதைப் போலவே, புதுக்கோட்டை மன்னர்களும் தங்களது விருப்பத் தெய்வமான பெருவுடையாள் என்கிற பிரகதாம்பாளின் பெயராலேயே அரசு வகிப்பதாக முன்வைத்துத் தங்களை பிரகதாம்பாள்தாசர்கள் என்று அழைத்துக்கொண்டார்கள். தங்களது சல்லிக்காசில் அம்மனின் உருவத்தைப் பொறித்ததனால் அந்தக் காசுக்கு அம்மன் சல்லி என்று பெயர்.

இந்தச் சல்லிக்காசுகளை மாட்டின் கொம்பில் கட்டி, ‘மாட்டைப் பிடிக்கிறவருக்குக் காசு’ என்றதனால் அது சல்லிக்கட்டு. இனி யாரும் ஜல்லிக்கட்டு என்று சல்லியடித்தால் நம்ப வேண்டாம். சல்லிக்கட்டு என்கிற பெயர் சல்லிக்காசு புழக்கத்துக்கு வந்த பிறகு உருவானது. பழைய பெயர் ஏறுதழுவுதல்.

மூவேந்தர்களின் அரசுகள் தோன்றுவதற்கு முன்பு மாடு பிடித்தல் என்பது பண்பாட்டு விளையாட்டு அல்ல; வாழ்க்கைமுறை சார்ந்த தொழில். அதற்கு ஆநிரை கவர்தல் அல்லது ஆகோள் என்று பெயர்.

மாடு என்பது செல்வம். செல்வச் செழிப்பு உள்ளவர் கட்டிக்கொண்டது மாடமாளிகை / மாடி வீடு. மாடங்கள் இருந்த வீதி மாடவீதி. மாடை என்றால் பொன். சுடலையையே தன் சொத்தாக வைத்திருந்த சுடலைச்செல்வன்தான் சுடலைமாடன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in