தன் அரசு, தன் அதிகாரம், தன் வசதி, தன் வாழ்க்கை - இவற்றைவிட அறம் பெரிதென்று உண்ணாநோன்பிருந்து உயிர்விட்டவன் அறத்தின் வேந்தனாகிய கோப்பெருஞ்சோழன். தங்கள் வாழ்வு, தங்கள் குடும்பம் - இவற்றைவிட நட்பே பெரிதென்று கூடச்சேர்ந்து உயிர்விட்டவர்கள் பிசிராந்தையாரும் பிற புலவர்களும்.
நடந்து ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும், கோப்பெருஞ்சோழனிடமும் உடன் இருந்த புலவர்களிடமும் எந்தப் பாடமும் படிக்காமல் அவர்களது நட்பை மட்டும் வியந்துவிட்டுப் பாதியிலே போய்விட முடியுமா? கோப்பெருஞ்சோழனும் புலவர்களும் வடக்கிருந்து உயிர்துறந்த இடம் காவிரிக்கு நடுவில் உள்ள திருவரங்கம் என்கிறார் சோழனின் தோழர் பொத்தியார். ‘உள்ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல்’ (புறநானூறு 219) என்று அந்த இடத்தைக் குறிக்கிறார்.
ஆற்றுக் கவலை என்றால் ஆறு கவடு பிரிகிற இடம். காவிரி கவடு பிரியும் இடமான திருவரங்கத்தில், புள்ளிபுள்ளியாக வெயில் ஊடுருவும் மரநிழலில், தோழர்களோடு தவமிருந்து உயிர்துறந்தான் சோழன். திருவரங்கக் கோவிலின் வரலாற்றைச் சொல்லும் ‘கோவில் ஒழுகு’ நூல் தர்மவர்மா, கிளிச்சோழன் என்று இரண்டு சோழமன்னர்களைக் குறிப்பிடுகிறது.
இவர்களில் கிளிச்சோழன் என்பவன் கிள்ளிச்சோழன். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, நற்கிள்ளி, கிள்ளிவளவன் போன்ற பல கிள்ளிகளில், இந்தக் கிள்ளி எந்தக் கிள்ளி என்று தெரியவில்லை. மற்றொருவனாகிய தர்மவர்மா, ‘அறம் துஞ்சும் உறந்தை’ எனப்பட்ட உறையூரின் அரசனாகிய கோப்பெருஞ்சோழனாக இருக்கலாம்.