உடலுமா உபரி தோழரே? | உயிருக்கு நேர்! 11

உடலுமா உபரி தோழரே? | உயிருக்கு நேர்! 11
Updated on
2 min read

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;

பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே;

செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே, தப்புந பலவே

- என்று புறநானூற்றில் (189) மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாட்டு. கடல்சூழ்ந்த உலகத்தின் ஆட்சியை யாரோடும் பங்கிட்டுக்கொள்ளாமல், துரும்பைப் போலத் தானே ஆள நினைக்கிற ஆட்சியாளருக்கும் சரி, அடுத்த வேளை உணவுக்காக விலங்குகளை வேட்டையாடத் துரத்துகிற படிக்காத எளியவருக்கும் சரி, உண்பதற்குத் தட்டளவு உணவு; உடுத்துவதற்கு இரண்டு உடைகள்.

அதற்குக் கூடுதலாக, ஒரே வேளையில், யாராலும் நுகர முடியாது. நுகர்வின் எல்லை இவ்வளவுதான் என்னும்போது, செல்வத்தைக் குவித்துவைப்பதில் என்ன பயன்? செல்வம் சேர்ந்தால் பிறருக்குக் கொடுங்கள். நானாகவே துய்ப்பேன் என்றால் வீணாகவே போகும் என்று வாழும் அறம் சொல்கிறது பாட்டு.

‘ஃபோர்ப்ஸ்’ (Forbes) என்னும் அமெரிக்க இதழ் நூறு கோடி டாலருக்கு மேல் செல்வம் சேர்த்த உலகப் பணக்காரர்களை 1987 முதல் பட்டியலிட்டு வருகிறது. நூறு கோடி சேகரித்த செல்வர்கள் 1987இல், வெறும் 140 பேர்தானாம்; இருபது ஆண்டுகளில் அவர்களது எண்ணிக்கை 1,000 ஆனதாகவும், அடுத்த பத்தாண்டுகளில் 2,000-ஆக உயர்ந்து, அதையடுத்த எட்டாண்டுகளில் 3,028 பேராகப் பெருகியிருப்பதாகவும் செய்தி தரும் ஃபோர்ப்ஸ், அவர்களில் சிலர் லட்சம் கோடிக்கும் மேல் செல்வம் சேர்த்திருப்பதாகப் பெருமகிழ்ச்சிகொள்கிறது.

ஃபோர்ப்ஸின் கணக்குப்படி, நூறு கோடிக்குமேல் வைத்திருக்கும் பணக்காரர்கள் அமெரிக்காவில் 902 பேர், அதற்கடுத்து சீனாவில் 516 பேர், அதற்கடுத்து இந்தியாவில் 205 பேராம். ஃபோர்ப்சின் 2025ஆம் ஆண்டுக்கான 200 உச்சநிலைப் பணக்காரர் பட்டியல் 14 இந்தியர்களை உள்ளடக்குகிறது.

புறநானூற்றைப் படித்து ஃபோர்ப்ஸையும் பார்க்கும் போது, கேள்வி எழுகிறது: செல்வத்தை ஓரளவுக்குமேல் நுகர முடியாது என்றால், இவ்வளவு செல்வச் சேகரிப்பு ஏன் நிகழ்கிறது? ஏன் கொண்டாடப்படுகிறது? தெரியவில்லை. அதிகாரச் சேகரிப்பைப் போலச் செல்வச் சேகரிப்பும் ஒரு பித்துப் போலிருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in