

இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாட்டைத் தடுப்பது தொடர்பாகப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
பின்னணி என்ன? - கல்வி நிறுவனங்களில் எதிர்கொண்ட சாதிரீதியான அவமதிப்பு, புறக்கணிப்பால் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்ட ஹைதராபாத் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா, மும்பை முதுகலை மருத்துவ மாணவி பாயல் தத்வி ஆகியோரின் அன்னையர் உச்ச நீதிமன்றத்தில் 2019இல் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதில், தேசிய அளவில் உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்துவரும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கைவிடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் கல்வி வளாகங்களில் நிலவும் சாதியப் பாகுபாடு மீதான புகார்களின் விவரங்களைத் தொகுத்துச் சமர்ப்பிக்கும்படி யுஜிசிக்குக் கடந்த 2025 ஜனவரியில் உத்தரவிட்டது.
118% அதிகரிப்பு: இதற்கு யுஜிசி அளித்த தரவுகளின் மூலமாக, 2019இலிருந்து 2024 வரையில் உயர் கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு தொடர்பான புகார்கள் 118% அதிகரித்திருப்பதாகத் தெரியவந்தது. மேலும், பதிவான பல புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்சமயம் பின்பற்றப்படும் ‘யுஜிசி வழிகாட்டுதல் 2012’ஐ மறுபரிசீலனை செய்து உரிய மாறுதல்களை மேற்கொள்ளும்படி யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விரைந்து புதிய வரைவு ஒன்றை 2025இலேயே யுஜிசி வெளியிட்டது.
அதில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்பதும், ‘பொய்ப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்னும் பிரிவு அதில் இடம்பெற்றதும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது. இதைத் தொடர்ந்து திருத்தப்பட்ட, ‘சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல் 2026’ஐ (Promotion of Equity in Higher Education Institutions 2026) யுஜிசி கடந்த ஜனவரி 13இல் வெளியிட்டது.