

வெப்பம் தகிக்கும் கோடை நாள்களில் காற்றில் தூசு மிதமிஞ்சுவதைக் கவனித்திருப்போம். பெருநகரங்கள் எதிர்கொள்ளும் இந்த இரட்டை அச்சுறுத்தலுக்கான காரணங்களைத் தெரிந்துகொள்வோம்.
தலைநகர் டெல்லி, அதைச் சுற்றியுள்ள ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் முக்கிய மாவட்டங்களுக்குக் குளிர்காலக் காற்று மாசுக் கட்டுப்பாடுகளை, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) கடந்த நான்கு ஆண்டுகளாக விதித்துவருகிறது.
வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் முதலானவை பனிமூட்டத்தில் கலந்து அடர்ந்த போர்வைபோல் வளிமண்டலத்தில் படர்ந்துவிடுவதால், இந்நாள்களில் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
ஆகையால், காற்றுத் தரக் குறியீட்டுக்கு (AQI - ஏக்யூஐ) ஏற்பத் தரநிலைச் செயல் திட்டங்கள் (GRAP) அங்கு முன்னெடுக்கப்படுகின்றன. சாலையில் வாகனங்கள் சுழற்சி முறையில் இயக்கப்படுவது, பள்ளி மாணவர் வருகைக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது போன்ற செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அச்சுறுத்தும் துகள்
இந்நிலையில், குளிர்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கடந்த மார்ச் மாதத்தில் தளர்த்தப்பட்டன. ஆனால், ஒரே மாதத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கும் கட்டாயம் நேர்ந்திருக்கிறது. அதற்கு என்ன காரணம்? பொதுவாகக் கோடைக்காலத்தில் காற்று பலமாக வீசும், வெப்பச்சலனம் அதிகரித்தால் மழைப் பொழிவு நிகழும்.
இதனால், மாசுபடுத்திகள் வளிமண்டலத்தின் மேல் அடுக்குக்குச் சென்று கலக்க உதவும் அதிக வெப்பநிலை உண்டாகும். இத்தகைய சாதகமான வானிலைச் சூழல் இருந்தபோதிலும், கடந்த ஏப்ரல் 1 முதல் மே 31 வரையிலான காலக்கட்டத்தில் டெல்லியில் 54 நாள்களுக்கு எதிர்பாராத காற்று மாசு பதிவானது.
முக்கியமாக, ‘பிஎம்10’ துகள்களின் அன்றாட சராசரி அளவு, தேசிய அளவிலான 24 மணி நேரத் தர நிர்ணய அளவைவிட (NAAQS) இரண்டு மடங்கு அதிகமாகப் பதிவாகியிருந்தது. ‘பிஎம்10’ என்பது மனித முடியின் அகலத்தில் 7இல் ஒரு பங்கு அளவில் (10 மைக்ரோமீட்டர்) இருக்கும் தூசு, துகள் பொருள்களைக் குறிக்கிறது.
இந்தத் துகள்கள் சுவாசத்தின் வழியாக மூக்கு, தொண்டையில் படிந்து மூச்சுக்குழாய் வரை சென்று ஆஸ்துமா முதலான நோய்களை ஏற்படுத்தக்கூடியவை. டெல்லியில் பிஎம்10 அளவு அண்மையில் 100 மைக்ரோகிராமைத் தாண்டியது. சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா போன்ற அனைத்துப் பெருநகரங்களிலும் இந்தக் கோடையில் பிஎம்10, காற்று மாசுபாட்டில் திடீர் உயர்வு ஆகியவை பதிவாகி உள்ளன.
பல்லடுக்குக் காரணிகள்
ஆண்டு முழுவதும் ஏற்பட்டுவரும் வாகன உமிழ்வு, சாலைப் புழுதி, கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைக் கழிவுகள், குப்பையை எரிப்பது, வேளாண் கழிவுகளை எரிப்பது முதலான காரணிகளுடன் கோடைக் காலத்தில் ஏற்படும் புழுதிப் புயல்கள் காற்று மாசு திடீரென அதிகமாக உயர்வதற்குக் காரணம் ஆகின்றன.
டெல்லி, மும்பையைப் போலன்றித் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் எப்போதாவதுதான் பிஎம்10 அளவு எல்லையைத் தாண்டுகிறது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல், கோடை வெப்பத்தால் தரைமட்ட ஓசோன் (ground-level ozone) பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக சென்னை மாறியுள்ளது.
வாகனங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் ஆக்சைடுகளும் (NOx), தொழிற்சாலைகள், பெயின்ட் முதலானவற்றில் இருந்து வெளியாகும் ‘ஆவியாகும் கரிமக் கலவைகளும்’ (VOCs) சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் வேதிவினைக்கு உள்ளாகும்போது தரைமட்ட ஓசோன் உருவாகிறது. இது தூசு, துகள்களுடன் சேர்ந்து சுவாச நோய்களை ஏற்படுத்தக்கூடும்.
உள்ளூர் முதல் ஈரான் வரை
ஒட்டுமொத்தமாக இந்தியாவின் பிஎம்10 அளவும், தரைமட்ட ஓசோன் அளவும் திடீரென மோசமடைவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவும் கடுமையான வெப்பம், ஈரான் வரை நீளக்கூடிய ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதியை உருவாக்கி இருக்கிறது. இது சுற்றியுள்ள உயர் காற்றழுத்த மண்டலங்களுடன் தொடர்புகொள்ளும்போது வெப்பமான பலத்த காற்று வீசும் சூழல் உண்டாகிறது.
இத்தகைய வெப்பக் காற்று சுழன்றடிக்கும் புழுதிப் புயல்களைக் கிளப்பிவிட்டு வெப்ப அலையை வீச வைக்கிறது. மேற்காசிய, தார் பாலைவனத்தில் இருந்து தூசு, துகள்களைத் திரட்டிவரும் வெப்ப அலைகள் இந்தியா முழுவதும் அவற்றைப் பரப்பி வங்காள வரிகுடா நோக்கி வீசுகின்றன.
இதுதவிர, உள்ளூர் அளவில் இடியுடன் கூடிய மழைக்குக் கட்டியங்கூறும் கீழ்நோக்கிய பலத்த காற்று தரையில் இருந்து தூசியை அதிவேகமாக மேல்நோக்கித் தூக்கிச் செல்லும். சில மணி நேரம் மட்டுமே சுழன்றடிக்கும் இத்தகைய குறுகிய காலப் புழுதிப் புயல்களும் இந்தியத் துணைக் கண்டத்தில் ஆங்காங்கே ஏற்படுகின்றன.
தடுக்க வழி?
இயற்கையில் உண்டாகும் புழுதிப் புயல்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அவற்றை முன்கூட்டியே கணிக்க முடியும். 2018இல் வடஇந்தியாவைப் புரட்டிப் போட்ட அதிவேகப் புழுதிப் புயல்கள் முக்கியப் பாடம் கற்பித்தன. அதன்பிறகு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி), டெல்லிக்கான ‘காற்றுத்தர முன்னெச்சரிக்கை அமைப்பு’ என்னும் மாதிரியை உருவாக்கியது.
இந்த அமைப்பு தற்போது ஆண்டு முழுவதும் செயல்படுகிறது. பல நாள்களுக்கு முன்னதாகவே பல்வேறு மாசுபாடுகள் பற்றிய கணிப்புகளை இது வழங்குகிறது. டெல்லி, சென்னை உள்பட 140 இந்திய நகரங்களுக்கான மூன்று நாள் காற்றுத் தரக் குறியீட்டுக் கணிப்புகளை இதன் அறிக்கை வழங்குகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையமும் தேசிய வானிலைக் கணிப்பு அறிக்கைகளை அன்றாடம் பலமுறை வெளியிடுகிறது. மாசடைந்த காற்றால் மக்கள் பாதிக்கப்படுவதைக் குறைக்க, இந்த அமைப்புகளைப் பயன்படுத்திப் புழுதிப் புயல்கள், தரைமட்ட ஓசோன், மோசமான காற்றுத் தரம் குறித்த உள்ளூர் எச்சரிக்கைகளை வெளியிடத் தொடங்க வேண்டும்.
இதுபோக, பொதுச் சுகாதார ஆலோசனைகள், கட்டுமான இடங்களில் கனரக வாகனங்களின் நடமாட்டத்தைக் குறைப்பது, சாலைத் தூசு மேலாண்மை, தரைமட்ட ஓசோனை உருவாக்கும் உமிழ்வுகள் மீதான கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆகியவற்றை உள்ளடக்கிய சீரிய திட்டங்கள் புதிய சவால்களுக்கு ஏற்ப வகுக்கப்பட வேண்டும்.