

கேரள மக்களுக்கு நிரந்தர, அதிகாரபூர்வ ஆவணமாகக் கொள்ளத் தகுந்த பிறப்பிட அடையாள அட்டை (Nativity Card) வழங்கும் மசோதாவை அம்மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், கேரளத்தின் இந்த முன்னெடுப்பு கவனம் ஈர்க்கிறது.
பின்னணி என்ன?
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்களிலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் நடப்பாண்டில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. இதற்கான வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளைக் கடந்த ஆண்டு முதலே தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதனால், தமிழ்நாடு உள்படச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் கேரளத்தில் கடந்த டிசம்பர் 2025இல் 24,08,503 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதே வாக்காளர் உரிமை பறிபோக முக்கியக் காரணியாகச் சொல்லப்பட்டது.
நிரந்தர ஆவணம்
இதையடுத்து, கேரளத்தில் நீண்ட காலம் வசிப்பவர்கள்கூடத் தங்களுடைய அடையாளம், பிறப்பு அல்லது வசிப்பிடத்தை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டிய அவசியத்தைத் தவிர்க்கும் நடவடிக்கையை எடுக்க கேரள அரசு முடிவெடுத்தது. ஏற்கெனவே வசிப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டாலும் அது தற்காலிகமானதுதான்.
மேலும், ஒரு மாநிலத்தில் பிறந்தவர், அங்கேயே நீண்டகாலம் வசிப்பவர் என்பதை உறுதிப்படுத்தும் சட்டபூர்வ அங்கீகாரமாக இது கருதப்படுவதில்லை. ஆகையால், கேரள மக்களுக்கு நிரந்தர அதிகாரபூர்வ ஆவணமாக பிறப்பிட அடையாள அட்டையை வழங்கிட கேரள அரசு தீர்மானித்தது.
இதன் தொடர்ச்சியாக, கேரளத்தில் பிறந்தவர்களுக்குப் பிறப்பிட அடையாள அட்டை வழங்க 2026-27 மாநில பட்ஜெட்டில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக, கேரள மக்களுக்குப் பிறப்பிட அடையாள அட்டை வழங்கும் மசோதா அம்மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரள மாநில ஆளுநர், இந்த மசோதாவில் கையெழுத்திட்டால் இது சட்டமாக அமல்படுத்தப்படும்.
தகுதி, தகவல்கள்
கேரளத்தில் பிறந்தவர்கள் பிறப்பிட அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர் கேரளத்தில் பிறக்காவிட்டாலும் அவரது பெற்றோரோ, முன்னோர்களோ கேரளத்தில் பிறந்திருந்தால்கூட இதற்குத் தகுதி உண்டு.
வேலை, வாழ்வாதாரத்துக்காக வெளிநாட்டில் வசிப்பவராக இருப்பினும் அவரது பிறப்பிடம் கேரளமாக இருப்பின் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் இதனைப் பெற முடியாது. இதைப் பெற்ற பிறகு வெளிநாட்டில் குடியுரிமை பெற்றால், அவர்களது அடையாள அட்டை ரத்துசெய்யப்படும்.
ஒளிப்படத்துடன் கூடிய நிரந்தர அட்டையாக இது இருக்கும். பெயர், பிறந்த தேதி, அரசு நிர்ணயிக்கும் பிற தகவல்கள் இதில் சேர்க்கப்படும். தாலுகா அளவில் தாசில்தார் மூலம் இந்த அட்டை வழங்கப்படும்.
தண்டனை
கேரளப் பிறப்பிட அடையாள அட்டை பெற வேண்டித் தவறான தகவல்களைச் சமர்ப்பித்தால், மூன்று மாதங்கள்வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே ஆவணங்கள், தகவல்கள் வழங்குவதில் கூடுதல் கவனத்துடன் செயல்படும்படி கேரள மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
சர்ச்சையும் பதிலும்
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவற்றில் இருந்து மக்களைப் பாதுகாத்திட கேரள மக்களுக்குப் பிறப்பிடச் சான்று வழங்கும் திட்டம் இது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஆனால், குடியுரிமையை வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது; அந்த அடிப்படையில்தான் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது என விமர்சனம் எழுந்தது.
மாநில அரசின் நலத்திட்டங்கள், சலுகைகளின் பயன்களைப் பெற மக்கள் தங்களின் இருப்பை நிரூபிக்கச் சிரமப்படும் நிலைக்குத் தீர்வு காணும் சட்டபூர்வமான அங்கீகாரத்துடன் கூடிய நிரந்த அடையாள அட்டையாகவும் இது இருக்கும். ஆகவே, இதற்குக் கூடுதல் பலன்கள் இருப்பதாக கேரள அரசு விளக்கம் அளித்துள்ளது.
முக்கியமாகக் கல்வி, வேலைவாய்ப்புத் தேவைகளுக்காக இந்த அட்டையைப் பயன்படுத்தலாம். அதேநேரத்தில், வேலைக்காக வட மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து கேரளத்தில் வசித்துவரும் தொழிலாளர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா, அவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய சலுகைகளில் சிக்கல் நேருமா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.