

புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation - MoSPI) அண்மையில் வெளியிட்டுள்ள காலமுறை தொழிலாளர் குறித்த ஆய்வு (Periodic Labour Force Survey - PLFS) - 2025 இந்திய வேலைவாய்ப்புச் சூழலைப் புதிய கோணத்தில் புரிந்துகொள்ள உதவுகிறது.
முன்பெல்லாம் நகர்ப்புறங்களை மட்டும் மையமாகக் கொண்டு காலாண்டு அடிப்படையில் வெளியிடப்பட்டுவந்த இந்த ஆய்வு, தற்போது கிராமப்புறங்களையும் இணைத்து மாதாந்திர அளவில் தரவுகளை வழங்குகிறது. இதனால், இந்தியத் தொழிலாளர் சந்தையின் உண்மை நிலையை மிக விரிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
மறைந்திருக்கும் வேறுபாடுகள்
இந்த ஆய்வின்படி, இந்தியாவின் மொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate) 44.9% ஆக உள்ளது. அதாவது, ஒவ்வொரு 10 இந்தியர்களில் சராசரியாக 4 பேர் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் அல்லது வேலை தேடிவருகின்றனர். 2024ஆம் ஆண்டிலும் இந்த விகிதம் 44.7 ஆக இருந்தது.
அதாவது, இந்தப் போக்கு பெரிய மாற்றமின்றித் தொடர்கிறது. ஆனால், இந்தப் புள்ளிவிவரங்களுக்குள் மறைந்திருக்கும் வேறுபாடுகளே அதிகக் கவனத்தை ஈர்க்கின்றன.
குறிப்பாக, பெண்களின் வேலைவாய்ப்பு நிலை நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் மிகவும் மாறுபட்டதாக உள்ளது. கிராமப்புறங்களில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு 34.6% ஆக இருந்தாலும், நகர்ப்புறங்களில் அது 22.2% ஆகக் குறைந்திருக்கிறது.
வளர்ச்சி, கல்வி, வாய்ப்புகளின் மையமாகக் கருதப்படும் நகரங்களில்கூட, 10 பெண்களில் சராசரியாக 2 பேர் மட்டுமே வேலையில் உள்ளனர். இதேநேரத்தில், நகர்ப்புற ஆண்களின் பங்கேற்பு 59.7% ஆக உள்ளது.
இந்தப் பெரிய இடைவெளி, நகர்ப்புற வேலைவாய்ப்பு அமைப்பில் பெண்கள் இன்னும் பல தடைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதே வேளையில், இளைஞர்களின் வேலை வாய்ப்பின்மை நிலையும் கவலை அளிக்கிறது.
15 முதல் 29 வயதுக்கு உள்பட்ட இளைஞர்களின் வேலை வாய்ப்பின்மை விகிதம் 9.9% ஆக உள்ளது. இது தேசிய சராசரியைவிட மூன்று மடங்கு அதிகம்.
குறிப்பாக, நகர்ப்புற இளம் பெண்களிடையே இந்த விகிதம் 18.9% ஆக உள்ளது. வேலை தேடியும் பலருக்கு வேலை கிடைக்காமல் இருப்பதை பிஎல்எஃப்எஸ் தரவுகள் காட்டுகின்றன.
படித்தவர்களுக்கும்...
கல்வியறிவு பெற்றவர்கள் மத்தியிலும் வேலைவாய்ப்பின்மை அதிக அளவில் காணப்படுகிறது. இந்தியாவில், 15 வயது - அதற்கு மேற்பட்ட, இரண்டாம் நிலைக் கல்வி, அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றவர்களிடையே வேலைவாய்ப்பின்மை 6.5% ஆக உள்ளது. நகர்ப்புறங்களில் இது 7.2% வரை உயர்ந்திருக்கிறது; அதேநேரத்தில், கிராமப்புறங்களில் அது 6.0% ஆக உள்ளது.
கிராமப்புறங்களில் கல்வியறிவு பெற்றவர்கள் வெளிப்படையாக வேலையின்றி இருப்பதற்குப் பதிலாக, குறைந்த வருமானம் தரும் வாழ்வாதாரச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருவது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
2022 முதல் மொத்த வேலைவாய்ப்பின்மை குறைந்திருந்தாலும், கல்வியறிவு பெற்றவர்களின் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து நீடிப்பது, தற்போதைய வேலைவாய்ப்புத் தேவைகளுக்கு ஏற்பப் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் தேவைப்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
வேலைவாய்ப்பின் தரத்திலும் கிராமப்புற–நகர்ப்புற வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. கிராமப்புறங்களில் வேலை செய்கிற பெண்களில் 70.7% பேர் சுயதொழிலில் உள்ளனர்.
ஆனால், இது பெரும்பாலும் தொழில்முனைவுத் தேர்வைவிட, வாழ்வாதாரத் தேவையால் மேற்கொள்ளப்படும் பணிகளையே குறிக்கிறது. கிராமப்புறப் பெண்களில் வெறும் 9.3% பேருக்கே முறையான ஊதியம் தரும் வேலைகள் உள்ளன. மாறாக, நகர்ப்புறங்களில் 50.9% பெண்கள் முறையான ஊதியம் தரும் வேலைகளில் உள்ளனர்.
சாதகமான அறிகுறிகள்
இவ்வளவு சவால்கள் இருந்தாலும், சில நேர்மறையான மாற்றங்களும் காணப்படுகின்றன. 2022இல் 33.9% ஆக இருந்த 15 வயது - அதற்கு மேற்பட்ட பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Female Labour Force Participation Rate for aged 15 and above), 2025இல் 40% ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், அனைத்து வயதினருக்குமான தொழிலாளர் - மக்கள்தொகை இடையிலான விகிதத்தில் (Worker Population Ratio for all ages) பெண்களின் பங்கு 39.7%இலிருந்து 43.5%ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறப் பெண்களின் வேலைவாய்ப்பு பங்கேற்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
இதனால், இந்தியாவில் அதிகமான மக்கள் வேலைவாய்ப்பில் இணைந்து வருகிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆனால், வேலைவாய்ப்பின் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல், அதன் தரம், நிலைத்தன்மை, பாலினச் சமத்துவம், கல்வியறிவு பெற்றவர்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ள அவசியத்தை பிஎல்எஃப்எஸ் 2025 அறிக்கை வலியுறுத்துகிறது.
(இங்கு தெரிவிக்கப்பட்டிருப்பவை, கட்டுரையாளர்களின் தனிப்பட்ட கருத்துகளே)