“தோல்விதான் சிறந்த பாடங்களை கற்று தருகிறது” - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

“தோல்விதான் சிறந்த பாடங்களை கற்று தருகிறது” - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
Updated on
1 min read

மதுரை: மதுரை அண்ணா நகர் பகுதியில் மாநகர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அவைத்தலைவர் ஒச்சுபாலு தலைமை வகித்தார்.

மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கட்சியினருக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இறந்தவுடன் தேர்தல் அலை வந்தது. பின்னர் 2011-ல் ஒரு தேர்தல் அலை வந்தது. அதேபோன்று தற்போது, கண்ணுக்குத் தெரியாத அலை வந்துள்ளது.

நாம் தவெகவை சரியாக கணிக்காததால், சாதாரணமாக எண்ணி விட்டோம். கடந்த காலங்களில் எதிர்க்கட்சியாக இருந்தால்கூட 40 சதவீதம் வாக்கு வாங்குவோம். ஆனால், தற்போதைய தேர்தலில் நமது வாக்கு சதவீதம் மிகவும் குறைந்துள்ளது.

எனவே, இனி வருங்காலங்களில் நாம் ஒருவரை ஒருவர் குறை கூறாமல், நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வெற்றியைவிடத் தோல்விதான் சிறந்த பாடங்களையும் அனுபவங்களையும் கற்றுத் தருகிறது.

நமது இயக்கம் நிரந்தரமானது, நமது தத்துவம் - கொள்கை நிரந்தரமானது, ஆனால் செயல்முறைகளை நாம் மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இது ஆட்சி மற்றும் கட்சி நிர்வாகம் இரண்டுக்கும் பொருந்தும்.

எனவே, விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும். திமுக கள ஆய்வுக் குழுவினரிடம் உங்கள் குறைகளை கூறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மா.ஜெயராமன், வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மதுரை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்டச் செயலாளர் கோ.தளபதி உள்ளிட்டோர்.

“தோல்விதான் சிறந்த பாடங்களை கற்று தருகிறது” - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 94.31% பேர் தேர்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in