

ஏஐ - மாதிரிப் படம்
கருப்பை வாய்ப் புற்றுநோய் தொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துப்பேழை பகுதியில் ‘கவனம் கோரும் கருப்பை வாய்ப் புற்றுநோய்’ (7 மார்ச் 2024) என்னும் கட்டுரையை எழுதியிருந்தேன். அதில், ‘பதின்பருவப் பெண்கள் அனைவருக்கும் கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி (HPV Vaccine) இலவசமாகக் கிடைப்பதை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
பெண்களுக்கான தடுப்பூசித் திட்டத்தில் இது சேர்க்கப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தேன். இப்போது இது நடைமுறைக்கு வந்திருக்கிறது. கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசியை 14 வயதான 1.15 கோடி பெண் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குவதற்கான திட்டத்தை பிரதமர் மோடி பிப்ரவரி 28இல் தேசிய அளவில் தொடங்கிவைத்தார்.
முன்னதாக, ஜனவரி மூன்றாம் வாரத்தில் தமிழக அரசும் இதுபோன்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியது. முதல் கட்டமாகத் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இது நடைமுறைக்கு வந்துள்ளது. இனி மற்ற மாவட்டங்களுக்கும் படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ளது. மக்கள் பெரிதும் வரவேற்க வேண்டிய முன்னெடுப்பு இது.
எச்சரிக்கும் புள்ளிவிவரம்
உலகளாவிய புற்றுநோய் ஆய்வகம் (GLOBOCAN) 2022இல் கொடுத்துள்ள தரவின்படி, இந்தியாவில் 35 முதல் 44 வயதுக்கு உள்பட்ட பெண்களிடம் காணப்படும் புற்றுநோய்களில் கருப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 1,20,000 பெண்கள் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படுவதும், 80,000 பேர் இதனால் உயிரிழப்பதும் தெரியவந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் 2023இல் மட்டும் 8,534 பெண்கள் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக மத்திய அரசு அறிவித்திருந்தது. பெண்களுக்குக் கருப்பை வாய்ப் பகுதியில் ‘மனித பாப்பிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus – HPV) தொற்றுவதுதான் கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முதன்மைக் காரணம். நவீன மருத்துவத்தின் அருங்கொடை ‘ஹெச்பிவி தடுப்பூசி’. புற்றுநோய்க்குத் தடுப்பூசி இருக்கிறதென்றால், அது கருப்பை வாய்ப் புற்றுநோய்க்குத்தான் பெரிதும் பொருந்தும். அதனால்தான் இதைத் தடுத்தே ஆக வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.
அரசுத் திட்டங்கள்
கருப்பை வாய்ப் புற்றுநோயை 2030க்குள் ஒழிப்பதற்கு 2020இல் ‘கருப்பை வாய்ப் புற்றுநோய் ஒழிப்பு முன்னெடுப்பு’ (Cervical cancer elimination initiative) என்னும் திட்டத்தை உலகச் சுகாதார நிறுவனம் நடைமுறைப்படுத்தியது. அதன்படி, ஒவ்வொரு நாட்டுக்கும் 90/70/90 என்னும் இலக்கு நிர்ணயித்தது.