

ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்காவின் போர் தொடங்கிச் சில நாள்களிலேயே இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அதன் தாக்கத்தை உணரத் தொடங்கியிருக்கின்றன. உக்ரைன் - ரஷ்யா போர் ஏற்படுத்திய தாக்கங்களைவிட இந்தப் போரின் பாதிப்பு முற்றிலும் வேறுபட்டது. சொல்லப்போனால், உக்ரைன் போரினால் இந்தியாவுக்குச் சில பொருளாதார நற்பயன்களும் கிடைத்தன.
முதலாவது, ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தது. அடுத்தது, ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைன், ரஷ்ய நாடுகளில் இருந்து கிடைத்த எரிவாயு, எரிபொருளுக்கு இடையூறு ஏற்பட்டு, இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான பெட்ரோலிய எரிபொருள்களுக்கு நல்ல விலை கிடைத்தது.
அதற்கு எதிர்மாறாக, ஈரான் போரில் மேற்காசிய நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாலும், ஹார்முஸ் நீரிணை வழியே கப்பல் போக்குவரத்துத் தடைபட்டு இருப்பதாலும் இந்தியா பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய சூழல். உடனடிப் பாதிப்பு எரிவாயு விநியோகத்துக்கு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டது. அந்தக் கணிப்பு பொய்க்கவில்லை.
இயற்கை எரிவாயுவை உற்பத்திக்காகப் பயன்படுத்தும் மின் உற்பத்தி ஆலைகள், உரத் தொழிற்சாலைகள், எரிபொருளாகப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள், சமையலுக்குப் பயன்படுத்தும் மக்கள், உணவு விடுதிகள் என அனைத்துத் தரப்பினரும் இந்தப் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள். இதற்கான தீர்வு என்ன என்பதுதான் இன்றைக்கு அனைவர் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி.
மடைமாற்ற உத்தி
இந்தியாவின் மொத்த இயற்கை எரிவாயுத் தேவையில் 51.4% உள்நாட்டு உற்பத்தியில் கிடைக்கிறது; மீதி 48.6% இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி முற்றிலும் தடைபடும் சூழலில், முன்னுரிமை அடிப்படையில் இயற்கை எரிவாயு வழங்கப்படுவது கட்டாயமாகிறது.
இதில் மாற்று ஏற்பாடுகள் உள்ள மின் உற்பத்திக்கும், வெப்பமாக்கலுக்குப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும், குறைந்த பாதிப்பை உண்டாக்கும் பெட்ரோகெமிக்கல் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படும் இயற்கை வாயு தவிர்க்கப்படுவது மற்ற முன்னுரிமைப் பயனாளிகளுக்குத் தடையற்ற வழங்கலை உறுதிப்படுத்த உதவும்.