பெண் குழந்​தைகளுக்​குச் சுமை​யாகும் வீட்டு வேலைகள் | சொல்​... பொருள்​... தெளிவு

அதி​கப்​படி​யான வீட்டு வேலைகள் பெண்​களின் வளர்ச்​சியை முடக்​கு​கின்றன
பெண் குழந்​தைகளுக்​குச் சுமை​யாகும் வீட்டு வேலைகள் | சொல்​... பொருள்​... தெளிவு
Updated on
2 min read

பெண்கள் இன்று பல்​வேறு துறை​களி​லும் தங்​களுக்கு​என்று தனி​யிடத்​தைத் தக்​க​வைத்​துக்​கொண்​டிருக்​கிறார்​கள். ஆனாலும், இந்​தி​யச் சமூகத்​தில் - குறிப்​பாகக் கிராமப்​புறங்​களில், வீட்டு வேலைகளில் ஆண்​-பெண் சமத்​து​வம் சாத்​தி​ய​மாக​வில்​லையோ என்​கிற ஐயம் நில​வு​கிறது.

ஆய்வு சொல்​லும் உண்மை ஹரி​யாணா​வில் தொழில்​முனை​வோ​ராக விரும்​பும் பெண்​களிடம் அண்​மை​யில் நடத்​தப்​பட்ட உரை​யாடல் இதை வலுப்​படுத்​துகிறது. சமூக / பண்​பாட்டு விதி​முறை​களைக் கடந்​து, ஊதி​யம் பெறும் வேலைகளுக்​குப் பெண்​களால் அதி​கம் செல்ல முடி​யாததற்​குக் காரண​மாக, அவர்​களின் அதி​கப்​படி​யான வீட்டு வேலைகள் இருந்​தது கண்​டறியப்​பட்​டது.

அந்​தப் பெண்​கள் வீட்டு வேலைகளில் அதிக நேரத்​தைச் செல​விடு​கிறார்​கள். அவர்​களின் சுமை​களைக் குறைப்​ப​தற்​காக, அவர்​களின் பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளில் உதவி செய்கிறார்கள். ஆனால், வீட்டு வேலைகளில் ஆண் குழந்​தைகள் பெரும்​பாலும் ஈடு​படுத்​தப்​படு​வ​தில்​லை.

மத்​தி​யப் புள்​ளி​யியல் - அமலாக்க அமைச்​சகத்​தின்​கீழ் மேற்​கொள்​ளப்​பட்ட இந்​தி​யா​வின் நேரப் பயன்​பாட்டு ஆய்வு (Time Use Survey – TUS), தங்​களின் நேரத்தை எவ்​வாறு ஊதி​யம் பெறும், ஊதி​யம் பெறாத நடவடிக்​கை​களில் மக்​கள் செல​வழித்து வரு​கிறார்​கள் என்​ப​தைக் கணக்​கிடு​கிறது.

அந்த அமைப்பு 2025இல் நடத்​திய ஆய்​வு, வேலைப் பகிர்வு (Division of Labour) என்​பது ‘வயதுக்கு வரும்’ பரு​வத்​துக்கு முன்​ன​தாகவே தொடங்கி​விடு​கிறது என்று குறிப்​பிடு​கிறது.

குழந்​தைப் பரு​வத்​தில் இருந்தே பெண் குழந்​தைகளை இந்​தி​யக் குடும்​பங்​கள் பழக்​கிவரு​கின்​றன. குழந்​தைப் பரு​வத்​தில், பெண் குழந்தைகளிடம் தொடங்​கும் இந்​தப் பழக்​கம், வயது அதி​கரிக்​கும்​போது உயர்​கிறது. அதிக அளவு வேலைகள் செய்ய உகந்த பரு​வத்​தில் (Productive Age – Prime Working Years) அதன் உச்​சத்தை அடைகிறது என்றும் ஆய்வு விளக்​கு​கிறது.

பாரபட்​சம்

பெண் குழந்​தைகள் வீட்டு வேலைகளைச் செய்​வது 10 வயது முதல் அதி​கரிக்​கிறது. வளர் இளம் பரு​வத்​தின் (Teen age) இறு​தி, 20 வயது​வரை அது தொடர்ந்​து, 30 வயதில் உச்​சக்​கட்​டத்தை அடைகிறது.

அந்த வயதில் குறைந்​தது ஒரு நாளில் 450 நிமிடங்​கள் அதாவது, ஏழரை மணி நேரம் வீட்டு வேலைகளி​லேயே அவர்​கள் பொழுதைக் கழிக்க வேண்​டி​யுள்​ளது. ஆனால், ஆண்கள் 6 முதல் 75 வயதுக்​குள் ஒரு நாளில் 65 நிமிடங்​களைத் தாண்டி வீட்டு வேலைகளில் ஈடு​படு​வ​தில்​லை.

குழந்​தைப் பரு​வத்​தின் தொடக்​கத்​தில் இரு பாலினத்​தவர்​களும் வீட்டு வேலைகளைச் செய்​யும் நேரத்​தின் அளவு ஒன்​றாகத்​தான் உள்​ளது. ஆனால், வயது அதிகரிக்​கும்​போது இது மாறுகிறது. பெண் குழந்​தைகள், 10 வயதில் வீட்டு வேலைகள் செய்​வதற்கு ஒரு நாளில் 15 நிமிடங்​களைச் செல​விடு​கிறார்​கள். 15 வயதில் 75 நிமிடங்​களும், 17 வயதில் 130 நிமிடங்​களும் செய்​கிறார்​கள்.

ஆனால், ஆண் குழந்​தைகள் தோராய​மாக, ஒரு நாளில் 6 வயதில் 5 நிமிடங்​கள் தொடங்கி குழந்​தைப் பரு​வம் முடி​யும்​போது 17 நிமிடங்​கள்​வரை வேலை செய்​கிறார்​கள். 6 முதல் 17 வயதுக்கு உட்​பட்ட பெண்​கள் வீட்டு வேலை செய்​யும் நேரம் நாளொன்​றுக்கு 124 நிமிடங்​களாக உள்ளது. அவர்​கள் ஓய்​வெடுக்​கும் நேரம் 115 நிமிடங்​களாகக் குறை​கிறது.

ஆண் குழந்​தைகள் ஓய்வெடுக்​கும் நேர​மும் குறை​வாகத்​தான் உள்ளது. அதே​நேரம், அவர்கள் வீட்டு வேலைகள் செய்​யும் நேர​மும் குறை​வாக உள்​ளது. பெண்​கள் வீட்டு வேலைகளைச் செய்​வதற்​காகக் கூடு​தல் நேரம் செல​விடு​வ​தால், அவர்களுடைய கல்வி பாதிக்​கப்​படு​கிறது.

அதே​நேரம், அனைத்து வயதி​லும் ஆண்​களை​விடப் பெண்​கள் அதிக நேரம் கற்​ப​தற்​குச் செல​விடு​கிறார்​கள் என்று தரவு​கள் தெரிவிக்​கின்​றன. படிக்​கும் நேரம் தவிர, மற்ற நேரங்​களில் வீட்டு வேலைகளைச் செய்​வ​தால், ஓய்வு நேரங்​களில் பெண்​கள் தங்​களுக்​கெனத் தனிப்​பட்ட வகை​யில் செல​விடும் நேரத்​தைக் குறைத்​துக்​கொள்ள வேண்​டி​யுள்​ளது.

இவர்​கள் ஓய்வு நேரத்​தில் செய்​யும் வேலைகளைப் பொருளா​தா​ரரீ​தி​யாகக் கணக்​கிட முடி​யா​விட்​டாலும், அப்​போது மேற்​கொள்​ளும் நடவடிக்​கைகள்​தான் அவர்​களின் தன்​னம்​பிக்​கையை வளர்க்க, சமூகத்​துடன் தொடர்பை ஏற்​படுத்​திக்​கொள்ள, உடல்​திறனை மேம்​படுத்​திக்​கொள்ள வழி​வகுக்​கும் நேர​மாக உள்​ளது. எதிர்​காலத்​தில் அவர்​கள் வேலை​யில் சேர்ந்து முன்​னேற வழி​வகுக்​கும் இந்த நடவடிக்​கைகள் குறைவது, அவர்​களுக்​குப் பின்​னடைவை ஏற்​படுத்​தலாம்.

வீடும் வெளி​யுல​க​மும்

வீட்டு வேலைகளில் சமையல் முக்​கிய​மான வேலை​யாக உள்​ளது. 15 முதல் 17 வயது வரை உள்ள வளரிளம் பெண்​களில் 42.4 சதவீதம் பெண்​கள் சமையல் செய்​கிறார்​கள். ஆண் குழந்​தைகளில் 2.9 சதவீதத்​தினர் மட்டுமே அந்த வயதில் சமையலில் ஈடு​படு​கிறார்​கள்.

வீட்டைச் சுத்​தம் செய்​வது, துணி துவைப்​பது என அனைத்து வேலைகளி​லுமே நேரம், ஈடு​படு​தல் என அனைத்​தி​லுமே பாலின இடைவெளி அதி​க​மாக உள்​ளது. குழந்​தைப் பரு​வத்​துக்​கும் வயது வந்​தோர் பரு​வத்​துக்​கும் இடைப்​பட்ட காலத்​தில் பெண் குழந்​தைகள் வீட்டு வேலைகளைச் செய்​வதற்​கும் ஆண் குழந்​தைகள் வெளி உலகத்​துடன் ஊடாடு​வதற்​கும் பழகிக்​கொள்​கிறார்​கள்.

இந்​தப் பாலின வேறு​பாடு​கள்​தான், ஊதி​யம் பெறும் தொழிலா​ளர்​களாகப் பெண்​கள் உரு​வாவதைத் தடுப்​ப​தில் பெரும் பங்கு வகிக்​கிறது.

நாட்​டின் வேலை​வாய்ப்பு / வேலை​யின்மை நில​வரங்​களை மதிப்​பிடும், தேசி​யப் புள்​ளி​யியல் அலு​வல​கத்​தின் கால​முறை தொழிலா​ளர் கணக்​கெடுப்பு (Periodic Labour Force Survey - PLFS) 2025இன் தகவலின்​படி, பெண்​களை அதி​கம் தொழில் துறை​யில் ஈடுபடவிடா​மல் தடுப்​பது குழந்தை வளர்ப்​பும் வீட்​டு​வேலைகளும்​தான் என்று தெரியவருகிறது.

பெண்​களின் வேலை தொடர்​பாகக் கொண்​டு​வரப்​படும் கொள்​கைகள் பெரும்​பாலும் குழந்தை வளர்ப்​பு, பொதுச் சமையலறை, பாது​காப்​பான உள்​கட்​டமைப்பு வசதி​கள், வேலை​யில் நெகிழ்​வுத்​தன்​மை, சமூகப் பாது​காப்பு குறித்து மட்​டும்​தான் பேசும்.

ஆனால், நேரப் பயன்​பாட்டு ஆய்​வு, திட்டங்​கள், கொள்​கைகள் இன்னும் முன்​ன​தாகவே தொடங் கப்பட வேண்​டும் என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

பெண்​களின் பன்​முகத்​திறமை வளர வேண்​டும் எனில், வீட்​டுக்​குள் செய்​யும் வேலைகள், வெளியே சென்று செய்யும் வேலைகள் என இரண்டு வேலைகளி​லும் இரு​பாலருக்​கும்​ சம வாய்ப்​பு கொடுத்​து வளர்க்​க வேண்​டும்​. அதுவே ​பாலினச்​ சமத்​துவத்தை நிலைநாட்டும்!

பெண் குழந்​தைகளுக்​குச் சுமை​யாகும் வீட்டு வேலைகள் | சொல்​... பொருள்​... தெளிவு
அமைதியான முறையில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in